அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா? பீதியில் மக்கள்
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாட்டுக்கோழிகள் திடீரென இறந்ததால் அங்கு பறவை காய்ச்சல் பீதி நிலவுகிறது.
கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு லட்சக்கணக்கான கோழிகள் உள்ளிட்ட பறவைகள் கொல்லப்பட்டன.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பரவியதற்கான எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் கிழக்கு காவிரிபுரம் என்ற பகுதியில் 5 பேருக்கு சொந்தமான 10 நாட்டுக்கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

இதையடுத்து அங்கு பறவை காய்ச்சல் பரவி இருக்குமோ என்று அந்த மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதுபற்றி கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்று கோழிகளை ஆய்வு செய்தபிறகு அவை மர்மமாக இருந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவரும். பறவை காய்ச்சல் பீதி காரணமாக சேலம் சுற்று வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.