சேலம் அருகே ஆட்டுக்குட்டியோடு வந்த காங்கிரஸ் கட்சியினர்... அண்ணாமலைக்கு பரிசாம்!
சேலம்: ஆண்டிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆட்டுக்குட்டியுடன் வருகை தந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழகத்தில் கிராமப்புற மக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
குறிப்பாக குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு விடுமுறை நாட்களிலும் கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக முன்னேற்றத்துக்கு தொழில் அமைதி மட்டுமே அடித்தளம்! முதலமைச்சர் மே தினம் வாழ்த்து!

ஆண்டிப்பட்டி ஊராட்சி
அதன்படி இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர் சாலை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்

ஆட்டிக்குட்டி
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் RTI பிரிவின் மாநிலத் தலைவர் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது அவருடன் வந்த காங்கிரஸ் கட்சியினர் ஆட்டுக்குட்டியுடன் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர். இது அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து மாநில தலைவர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

நீட் தேர்வு
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது மேலும் நீட் தேர்வின் காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் மாணவ மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பியது.

அண்ணாமலைக்கு பரிசு
அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நீட் தேர்வை ரத்து செய்ய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெட்ரோல் லிட்டர் ரூ.60-க்கும் டீசல் லிட்டர் ரூ.50-க்கும் சமையல் சிலிண்டர் ரூ.600-க்கும் கிடைக்க அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவருக்கு கட்டாயம் இந்த ஆட்டுக்குட்டியை நான் பரிசாக வழங்குவேன் என்று கூறினார்.
என்னை திட்ட வேண்டுமென்றால் ஆட்டுக்குட்டியை பரிசாக எனக்கு வழங்குங்கள்' என்று அண்ணாமலை ஏற்கனவே கூறியுள்ளார். எனவே அவர் நீட் தேர்வை ரத்து செய்தால் நாங்கள் பரிசாக வழங்க காத்திருக்கிறோம்." என்றார்.