பொங்கல் பரிசுத் தொகுப்பை பாருங்க.. இதுதான் உங்க விடியலா? - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி
சேலம்: தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் தொடர்ந்து தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம், துணிப்பை ஆகியவை கொள்முதல் செய்ததில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 21வகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு வழங்கப்படும் பொங்கல் பரிசு தரமில்லாமல் இருப்பதாக புகார் எழுந்தது இது தொடர்பாக ஏற்கனவே அதிமுக சார்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் அறிக்கை வாயிலாக தனது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.
வளர்ந்த நாடுகள், தெற்காசிய நாடுகளுடன் தமிழகத்தை ஒப்பிட வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

எடப்பாடி பழனிசாமி புகார்
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு தரமற்று இருப்பதாக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆதாரங்களுடன் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு சார்பில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகவும், இது குறித்து ஆதரங்கள் தன்னிடம் உள்ளதாவும் கூறினார்.

தமிழக அரசுக்கு கண்டனம்
மேலும் பொங்கல் தொகுப்பை துணிப்பையில் வழங்கும் என அறிவித்த அரசு பொதுமக்களே கட்டைப்பை கொண்டுவர வேண்டும் எனவும், அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதற்கும், தரமற்ற பொருட்களை பொங்கல் தொகுப்பு எனும் பெயரில் பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்கும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு நெகிழியை ஒழிப்போம் என சொல்லிவிட்டு பொங்கல் தொகுப்பை நெகிழியில் தான் வழங்குகிறார்கள் என்ற எடப்பாடி பழனிசாமி, கமிஷன் காரணமாகவே தரமற்ற பொருட்கள் பொங்கல் தொகுப்பாக மக்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

பரிசு தொகுப்பில் ஊழல்
பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம், துணிப்பை ஆகியவை கொள்முதல் செய்ததில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுதான் முதல்வர் ஸ்டாலின் கூறிய விடியல் என குற்றம் சாட்டிய அவர், இந்தப் பொங்கல் தொகுப்பால் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டதாகவும், இதனால் தமிழகத்தில் மீண்டும் ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரே வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு
ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் குறித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துள்ளார் எனவும், இதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஸ்டாலின் தனது அதிகாரத்தையும், காவல்துறையையும் தவறாக பயன்படுத்தி அவர் மீது பொய் வழக்கு போட்டு ராஜேந்திரபாலாஜியை கைது செய்துள்ளனர் எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.