பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நிலையம்! மாற்றியோசித்த இ.பி.எஸ்.! ஸ்பான்சர் யார் தெரியுமா?
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் இலவச தையல் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த இ.பி.எஸ். இதனை தமிழகம் முழுவதும் முன்னெடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.
எல்லோரும் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி நிலையங்களை திறந்து வரும் சூழலில், மாற்றியோசி என்பதற்கேற்ப தனது தொகுதியில் இலவச தையல் பயிற்சி நிலையங்கள் திறந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தையல் தொழில் கற்பதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இதற்கு மகளிர் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறார் இ.பி.எஸ்.
ஆளுநருக்கே பாதுகாப்பில்லையா? சட்டசபையில் அதிமுக,பாஜக வெளிநடப்பு! இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நிலையத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இன்று தொடங்கி வைத்திருக்கிறார். திமுக சார்பில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும்இலவச தையல் பயிற்சி நிலையங்களை அதிமுக சார்பில் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறார் இ.பி.எஸ்.

இலவச தையல் பயிற்சி
சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த முதல் இலவச தையல் பயிற்சி நிலையத்திற்கு கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக தான் ஸ்பான்சர் உதவி செய்துள்ளது. கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளர் இ.பி.எஸ்.ஸின் தீவிர விசுவாசி என்பதால் அவர் தான் இந்த திட்டத்துக்கு பிள்ளையார் சுழியும் போட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி மாநில அளவில் முக்கியப் பொறுப்பில் உள்ள பலரும் பங்கேற்றிருந்தனர்.

பெண்கள் ஓட்டு
கடந்த சட்டமன்றத் தேர்தல் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் ஓட்டுக்களை கணிசமான அளவில் திமுக ஈர்த்துவிட்டதால் இனி அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலாவது மகளிர் ஓட்டுக்களை அதிமுகவுக்கு வளைக்கும் நோக்கில் இப்படி புதிய புதிய செயல்திட்டங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் இ.பி.எஸ்.

நல்ல முயற்சி
அரசியல் கணக்கோடு அதிமுக சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டாலும் இது வரவேற்க வேண்டிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சுயமாக தொழில் கற்று அதன் மூலம் வருவாய் பெற பெண்களுக்கு இந்த பயிற்சி நிலையங்கள் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.