சேலத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்... மக்கள் அவதி
சேலம் : சேலத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. அத்துடன் ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலத்தில் அதிகாலை 1 மணி முதல் விடியற்காலை 4 மணிவரை கனமழை பெய்தது. இந்த கனமழையால் சேலம் மாநகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சேலம் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக சூரமங்கலம் ரயில் நகர் சின்னேரி வயக்காடு, அழகாபுரம், நாராயண நகர், களரம்பட்டி கருங்கல்பட்டி, பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகளில் இன்று காலை வரை வெள்ளநீர் வடியாமல் காணப்பட்டது.
தளவாய் பட்டி, அம்மாபேட்டை, பழைய சூரமங்கலம், பச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து வெளியேறாமல் இருந்தது . இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இடைவிடாது பெய்த மழையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் அருகே உள்ள செங்கல் அணை நிரம்பி வழிகிறது. திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இதனிடையேஇன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் அருகே ஓமலூரில் 9 செ.மீ மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!