"சங்கை அறுத்துடுவேன்".. அசிங்கமாக பேசிய இந்து முன்னணி பிரமுகர்.. மிரண்ட சேலம்.. மொத்தம் 5 கேஸ்!
சேலம்: போலீஸ்காரர்கள் என்றுகூட பார்க்காமல், கெட்ட கெட்ட வார்த்தைகளில் ஒருவர் திட்டி தீர்த்துவிட்டார்.. இப்படி பொதுவெளியில், நட்டநடு ரோட்டில் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியவர் இந்து முன்னணி பிரமுகராம்..! அவர் மீது இப்போது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் சில போலீசார்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் பைக்கில் வந்தார்.. அவர் மாஸ்க் போடவில்லை.
அதனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.. ஏன் மாஸ்க் போடவில்லை என்று கேட்டு 200 ரூபாய் ஃபைன் போட்டார்கள்.. பைக் சாவியையும் வாங்கி வைத்துள்ளனர்.
முஸ்லிம் பெண்ணை நேசித்த தலித் இளைஞர்.. அரிவாளுடன் வயலுக்கு வந்த அப்பா.. உருண்ட தலைகள்.. மிரண்ட ஊர்

பைக்
இது தொடர்பாக அந்த நபருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்தது.. அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், செல்லப்பாண்டி என்பவர் ஒரு கும்பலை திரட்டி கொண்டு வந்துவிட்டார்.. பைக்கில் மாஸ்க் போடாமல் வந்தவரின் சொந்தக்காரராம் இந்த செல்லப்பாண்டி.. இந்து முன்னணி கொண்டலாம்பட்டி ஒன்றிய தலைவராக இருக்கிறார்.

செல்லப்பாண்டி
சம்பவ இடத்துக்கு வந்த செல்லப்பாண்டி, என்ன நடந்தது என்றெல்லாம் போலீசாரை கேட்காமல், திடீரென வாய்க்கு வந்ததெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்.. ஆபாசமாக போலீஸ்காரர்களை திட்டினார்.. தரம் தாழ்ந்த வார்த்தைகளால் அங்கிருந்த எல்லா போலீஸ்காரர்களையும் வேலை செய்யவிடாமல், மிகக் கடுமையாக பேசியுள்ளார்.. அந்த செக்போஸ்ட்டையே பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.. கூடிய சீக்கிரம் இதே பகுதியில், இந்து முன்னணி நிர்வாகிகளை வைத்தும், ஆட்களை திரட்டியும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன் என்றும் சவால் விட்டுள்ளார்..

சங்கு அறுத்துடுவேன்
செல்லப்பாண்டி மேலும் பேசியது இதுதான்: "ஃபைன் போட்ட அந்த 200 ரூபாயை திருப்பி தரணும்.. இப்பவே அந்த 200 ரூபாய் எனக்கு வந்தாகணும்.. வண்டி சாவி எங்கே? உங்க எல்லார் சங்கையும் அறுத்துடுவேன்.. டியூட்டி போட்டால், பேசாம உட்கார்ந்துட்டு போய்ட்டே இருக்கணும்.. எந்த ஏரியாவில வந்து பசங்கள மடக்கறீங்க? நாளைக்கு இந்த செக்போஸ்ட்டை அடிச்சு நொறுக்கறோம்..

செக்போஸ்ட்
இந்த செக்போஸ்ட்டையே தூக்கறோம் இங்கிருந்து.. இருங்க, தலைவருக்கு போன் பண்றேன்.. அவனை தொட்டீங்கன்னா பிரச்சனை வேற மாதிரி ஆயிடும்.. நான் ஒன்றிய தலைவன்.. நம்ம ஆளுங்க எல்லாரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் பண்ணுவோம்.. அராஜகம் பண்ணுவோம்.. ஏன்னா நான் ஒன்றிய தலைவன்" என்று சவுண்டு விட்டு பேசிக் கொண்டே இருந்தார். இதெல்லாம் அங்கிருந்த போலீசார் அமைதியாக பார்த்தபடி இருந்தனர்.

காரணம்
"200 ரூபாய்க்கு ரசீது தந்திருக்கோம்.. ஏன் ஃபைன் போட்டோம்னு காரணத்தை பைக்கில் வந்தவரையே கேளுங்க.. எங்களை ஏன் இப்படி வேலை செய்ய விடாமல் தடுக்கறீங்க" என்று பொறுமையாக போலீசாரும் பதில் சொல்லி கொண்டே இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. போலீசாருக்கே கொலை மிரட்டல் விடுத்த, இந்த இந்து முன்னணி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நபர் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைதாவாரா?
செல்லப்பாண்டி கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது. கடந்த சில காலமாகவே இந்து முன்னணியினர் தொடர்ந்து வன்முறை சம்பவங்களிலும், சர்ச்சை விவகாரங்களிலும் சிக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது.. போலீஸ்காரரை ஆபாசமாக பேசியும், தரம் தாழ்ந்து திட்டியும், போராட்டம் நடத்துவேன் என்று சவால்விட்டும் ரகளை செய்த செல்லப்பாண்டி, தன் சொந்தக்காரரிடம் அந்த தம்மாத்தூண்டு மாஸ்க்கை ஏம்ப்பா தம்பி போடலை என்று கேட்டிருக்கலாம்.. அது சரியான செயலாக இருந்திருக்கும்!