சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திமுக எனும் தேன் கூட்டில் கை வைக்க வேண்டாம்.." 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சேலம்: எடப்பாடி பழனிசாமி எதைச் செய்தாலும் தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்க முடியாது; தி.மு.க. எனும் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன், என்று, சேலம் 'தமிழகம் மீட்போம்'காணொலிப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இன்று திமுக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

திமுக தலைவர் ஸ்டாலின், ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும் என்று இன்று அறிவித்திருக்கிறேன். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் அதற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், தங்களுக்குக் கிடைத்த இடத்தை வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.

MK Stalin spoke partys Salem cadres via video on today

"எப்படி மருத்துவம் படிக்கப் போகிறோம்" என்று கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் ஊடகங்களில் கண்ணீருடன் அளித்த பேட்டியை நேற்றைய தினம் நான் பார்த்தேன்.

இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோதுதான், அந்தக் கல்விக் கட்டணத்தை தி.மு.க.வே செலுத்தும் என்று இன்று காலையில் அறிவித்தேன். இது மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.

உடனே, எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசே செலுத்தும் என்று அறிவித்திருக்கிறார். முதலமைச்சருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. அரசியல் செய்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறார். தி.மு.க. அரசியல் செய்ததால்தானே இன்று இந்த அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார். இல்லாவிட்டால் செய்திருப்பாரா?

மாணவர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தெரிந்ததும் அரசே செலுத்தும் என்று முதலிலேயே தெளிவாக சொல்லி இருக்கலாமே? நேற்று நீதிமன்றத்திலும் அதனைச் சொல்லவில்லையே! இப்போது இந்த ஸ்டாலின் விட்ட அறிக்கைக்குப் பிறகு தானே பழனிசாமிக்கு ஞானோதயம் வந்தது? உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க. தான் ஆளும்கட்சியாக செயல்படுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

சித்தர்கள் வாழ்ந்த கஞ்சமலை, வள்ளல் பாரியின் மகளுக்கு அவ்வையார் திருமணம் செய்து வைத்த உத்தமசோழபுரம் கோவில், ஹைதர் அலியின் ஆளுகையிலிருந்த திருமணி முத்தாறு கோட்டை என பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட சேலத்தில் 'தமிழகம் மீட்போம்' என்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் வரலாற்றிலும் இந்த சேலத்துக்கு மகத்தான இடம் உண்டு. 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் நாள் இதே சேலத்தில் தான் நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் உருவானது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என அடையாளம் கொடுத்து புதுப்பெயர் சூட்டியவர் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்தத் தீர்மானத்துக்கு 'அண்ணாதுரை தீர்மானம்' என்று பெயர் சூட்டி ஏற்றுக் கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

மக்கள் இயக்கமாகவும், தமிழர்களின் உரிமைக் காப்பு இயக்கமாகவும் இந்த இயக்கத்தைத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மாற்றிய ஊர் இந்தச் சேலம். அந்த மக்கள் இயக்கம்தான் இன்றைக்கு சமூகத் தளத்தில் திராவிடர் கழகமாகவும், அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகமாகவும் களமாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு அடித்தளம் அமைத்த ஊர் இந்த சேலம்!

கருணாநிதி இளமைக் கால வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஊரும் சேலம் தான்! திருவாரூரில் இருந்து கன்னித் தமிழோடும், கற்பனை உள்ளத்தோடும் கிளம்பிய கலைஞருக்குள் இருக்கும் கலைஞரை உணர்த்திய ஊர் இந்த சேலம். 1949 - 1950 காலக்கட்டத்தில் சேலம் கோட்டைப் பகுதியில் ஹபீப் தெருவில் தான் கலைஞர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக சேலத்தில் தங்கி மந்திரிகுமாரி படத்துக்குக் கதை - வசனம் தீட்டினார். அவரே பிற்காலத்தில் மந்திரியாக, முதல்வராகவும் ஆனார். சேலத்தில் தங்கித் திரும்பிப்பார் படத்துக்குக் கதை - வசனம் எழுதினார். அதிலிருந்து தமிழ்நாடே அவரைத் திரும்பிப் பார்த்தது. சேலத்தில் கலைஞரின் வசனத்தை தியேட்டரில் போய்க் கேட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சேலத்திலிருந்த கலைஞரைச் சென்னைக்கு அழைத்து கொண்டார் என்பது தான் வரலாறு.

இன்னும் சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது சேலத்திலிருந்துதான் கலைஞர் அவர்கள் அதன் தொடக்கவிழாவுக்குச் சென்னை வந்தார்கள். அத்தகைய புகழ் மிகுந்த சேலத்தில் இன்றைய தினம் தமிழகம் மீட்கக் கூடியிருக்கிறோம். சேலம் என்றால் வீரபாண்டியார் மாவட்டம் என்று அழைக்கக்கூடிய அளவுக்கு வீரபாண்டியாரின் கோட்டையாக இருந்த மாவட்டம் இந்த சேலம்!

1996-ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்கு மறு ஆண்டு மாநில மாநாடு நடத்தத் திட்டமிட்ட முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சேலத்தில் நடத்து என்று வீரபாண்டியாரிடம் தான் ஒப்படைத்தார். 'மாநாடு இந்தப் பந்தலில் மட்டும் நடக்கவில்லை, சேலம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது' என்று கலைஞர் அவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். அந்த அளவுக்குச் சேலம் மாநகரமே நிரம்பி வழிந்த மாநாடு அது. அந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் அணிவகுக்கும் ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது.

மாலை 5 மணிக்குத் தொடங்கிய பேரணி விடியவிடிய நடந்தது. மாலை 5 மணிக்கு மேடையில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்த தலைவர் கலைஞர் அவர்கள் மறுநாள் காலை 8 மணி வரைக்கும் பார்வையிட்டார். 8 மணிக்கு மாநாட்டுப் பந்தலில் கொடியேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் கலைஞர் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

MK Stalin spoke partys Salem cadres via video on today

அதேபோல் மூன்று நாள் மாநாட்டில் முதல் நாள் முழுக்கவே இளைஞரணி மாநாடாக நடத்திக் கொள்ளவும் வீரபாண்டியார் அவர்கள் அனுமதித்திருந்தார்கள். 1997-ஆம் ஆண்டு நடந்த சேலம் மாநாட்டில் பேரணிக்குத் தலைமை வகித்து வந்த நான், 2004-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் 50 அடி உயரத்தில் கழகக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை அண்ணன் வீரபாண்டியார் அவர்களால் பெற்றேன்.

தலைவர் கலைஞர் அவர்களைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வைத்து சாரதியாக வீரபாண்டியார் ஓட்டிச் சென்ற மாநாடு அது. அந்த மாநாட்டுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் கலைஞரின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு முத்துவிழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்ட மாநாடு அது. அந்த மாநாட்டு எழுச்சியும் இப்போதும் என் கண் முன்னால் தெரிகிறது.

அந்தச் சேலம் மாவட்டத்தில் இன்று மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனும், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதியும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கமும் - வீரபாண்டியாரின் மறு உருவங்களாக இருந்து செயல்பட்டு வருவதைப் பார்க்கும் போது உள்ளபடியே பூரித்து நிற்கிறேன்.

ஒரு மரம் சாய்ந்தால், பத்து மரம் முளைக்கும் என்ற பெருமைக்குரிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு வீரபாண்டியார் மரணித்தாலும் பல நூறு பேர் வீரபாண்டியராக மாறும் வல்லமை தி.மு.க. தொண்டர்களுக்கு உண்டு என்பதைச் சேலம் மாவட்டம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.

அந்தக் காட்சியைத் தான் நான் இன்று சேலம் பொதுக்கூட்டம் வாயிலாகவும் பார்க்கிறேன். இந்த சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டிய ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்!

* சேலம் உருக்காலை

* ஐம்பது ஆண்டுக் கனவுத்திட்டமான சேலம் ரயில்வே கோட்டம்

* பெரியார் பல்கலைக்கழகம்

* சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி

* ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி

* சேலம் மாநகராட்சிக்காக 283 கோடியில் காவிரி தனிகூட்டுக் குடிநீர் திட்டம்

* சேலம் மாநகரத்துக்கு 183 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

* சேலம் திருமணி முத்தாறு - வெள்ளக்குட்டை ஓடை தூய்மைப்படுத்த 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* சேலத்தில் 136 கோடி மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை

* ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம்

* 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா

* சேலம் மாவட்டத்தில் 9 உழவர் சந்தைகள்

* சேலம் - ஆத்தூர் குடிநீர்த்திட்டம்

* 38 கோடி ரூபாய் மதிப்பில் சேலம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

* 150 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மற்றும் தாழ்வழுத்த புதை கம்பி தொடர் மின் பாதைகள்

* மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம்

* ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள்.

* சேலம் நகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

* சேலம் - கிருஷ்ணகிரி நான்கு வழிப்பாதையைப் போட வைத்தது.

* சேலம் - நாமக்கல் நான்கு வழிப்பாதையை அமைத்தல்.

* சேலம் செங்கப்பள்ளி நான்கு வழிப்பாதையை அமைத்தல்.

* தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டது.

* பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானச் சேவை தி.மு.க. ஆட்சியில் தான் மீண்டும் தொடங்கப்பட்டது.

- இப்படி கணக்கற்ற திட்டங்களைச் சேலம் மாவட்டத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றிய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி; கலைஞரின் ஆட்சி!

ஆனால் தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றாமல் முடக்கி வைத்திருக்கும் ஆட்சி தான் இந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, மக்களின் நன்மையைப் பார்க்காமல் முடக்கி வைத்துள்ளது இந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

* சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பப் பூங்கா பணிகள் இதுவரை முடக்கப்பட்டு உள்ளது. எதற்காக அதை முடக்கி வைத்துள்ளீர்கள்?

* தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளார்கள். எடியூரப்பா வந்து பார்த்துப் பாராட்டிய திட்டம் அது. அதனை எதற்காக முடக்கி வைக்க வேண்டும்?

* தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காகப் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. தேவையில்லாமல் தாமதம் காட்டி வருகிறார்கள். டெண்டர்களை பலமுறை மாற்றி மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடி வருகிறார்கள்.

* ஏற்காடு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தாவரவியல் பூங்கா துவக்கப்பட்டது. ஆனால் அதனை முறையாக அ.தி.மு.க. அரசு செயல்படவில்லை. அது இன்று காடுபோல் காட்சி அளிக்கிறது. என்ன காரணம்?

* மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளுக்கு இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டத்துக்கு முதலமைச்சர் சமீபத்தில் அடிக்கல் நாட்டியதாகவும் கேள்விப்பட்டேன். எதற்காக இத்தகைய நாடகங்களை ஆட வேண்டும்?

* சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சரியாகக் கவனிக்காமல் சாதாரண மருத்துவமனை போல ஆக்கிவிட்டார்கள். எலி ஓடுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதான் மருத்துவமனைகளை காப்பாற்றும் லட்சணமா?

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைத்தான் செயல்படுத்தவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையாவது செயல்படுத்தினார்களா என்றால், அதுவும் இல்லை!

* சேலம் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி சொன்னார். இதுவரை அதற்கான நிலமாவது கையகப்படுத்தி இருக்கிறீர்களா?

* சேலம் மாநகர எல்லைப் பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடு அமைக்கப்படும் என்றார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக ஏதாவது செய்தாரா? இல்லை!

* தலைவாசல் சந்தைக்கு மாற்று இடம் கொடுத்து விரிவாக்கம் செய்யப்போவதாகச் சொன்னார்கள். செய்தார்களா? இதுவரை இல்லை!

* சேலம் செரி ரோட்டில், முள்ளுவாடி கேட் பகுதியிலும், மணல் மேடு பகுதியிலும் மேம்பாலம் அமைத்து உடனே திறக்கப்படும் என்றார்கள். அந்த திட்டம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. பாலம் வரவில்லை!

* ஓமலூரைச் சுற்றி வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்கள். வந்ததா? இதுவரை இல்லை!

* ஓமலூரில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும் என்றார்கள். வந்ததா? இதுவரை இல்லை!

* எடப்பாடி, வீரபாண்டி தொகுதியில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா? இல்லை!

* எடப்பாடி தொகுதியில் பூலாம்பட்டியையும் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் காவிரியின் குறிக்கே பாலம் அமைக்கப்படும் என்றார்கள். அமைத்தார்களா? இல்லை!

* சேலத்தில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்கப் போகிறது என்றார்கள். முதல்வரும் அரசு விழாக்களில் சொல்வார். வந்ததா? இதுவரை இல்லை!

* மேச்சேரி அருகே கட்டப்பட்ட குளிர்பதனக் கிடங்கு கட்டி முடிக்கப்பட்டு எட்டு மாதம் ஆகியும் திறக்கப்படாதது ஏன்?

* சேலம் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றித் தருவோம் என்ற கோரிக்கை நிறைவேறியதா? இல்லை! இதுவரை இல்லை!

- இப்படிக் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்ட ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

MK Stalin spoke partys Salem cadres via video on today

சேலம், சேலம் என்று வருகிறாரே, ஏதோ சேலத்தை மாதிரி மாநகரம் போல மாற்றிவிட்டாரோ என்று கூட நான் நினைத்தேன். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை வரிசையாக எடுத்துப் பார்க்கும் போதுதான் எதையும் நிறைவேற்றாமல், சேலம் மக்களையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்தது. இவரால் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவும் முடியவில்லை.

சேலம் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த நினைக்கிறது. இதனை விவசாயிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒரு முதலமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும்? போராடும் மக்களை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். தங்களது நிலங்கள் பறி போகும் என்று போராடும் மக்களை அவர் அழைத்துப் பேசினாரா? இல்லை. போலீசை அனுப்பி கைது செய்கிறார், அடிக்கிறார், விரட்டுகிறார். போராட்டம் பெரிய அளவில் உருவாகி விட்டது.

போராட்டம் நடத்தும் மக்களுக்கு மாற்றுப் பாதைத் திட்டத்தை முன்மொழிந்ததா அரசு? அதைச் செய்யவில்லை. அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் மக்கள் அதனைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கவேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது. சாலைகள் முக்கியம். அதைவிட மக்களும் - விவசாய நிலங்களும் முக்கியம்.

இன்றைய வளர்ச்சிக்கு - தேவைக்கு, சாலைகள் தேவை என்றால் அவை மக்களைப் பாதிக்காத வகையில், வேளாண்மையை பாதிக்காத வகையில் எப்படி அமைப்பது என்பதில் எடப்பாடி அரசாங்கம் கவனம் செலுத்தியதா? அந்த வழியில் தனது சிந்தனையைச் செலுத்தியதா என்றால் இல்லை! உடனே, போலீசைக் கூப்பிடு. இது மட்டும் தான் பழனிசாமிக்குத் தெரியும்.

நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் இவர், எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை போலீஸ் மூலமாக அடித்து நொறுக்கவில்லையா? இதுதான் விவசாயிக்கு அழகா? அதேபோல் காவிரி - சரபங்கா திட்டத்தால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என்று போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசியதா இந்த அரசு. இல்லை! இதுதான் விவசாயி ஆட்சிக்கு அழகா?

பெட்ரோல் குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதாகக் கூறி விவசாயிகள் எதிர்க்கிறார்களா? போலீசைக் கூப்பிடு. அடித்து விரட்டு என, உயிருக்குப் பயந்து ஓட ஓட விவசாயிகளை விரட்டியது தான் விவசாயி ஆட்சிக்கு அழகா? முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியிலேயே மணல் கொள்ளை நடக்கிறதே? இந்த விவசாயி தடுத்தாரா?

எடப்பாடி பெரிய ஏரியில் மண் எடுப்பதில் அ.தி.மு.க.வினருக்குள் சண்டை ஏற்பட்டதே! அது அந்த விவசாயிக்குத் தெரியுமா? அ.தி.மு.க.வின் முன்னாள் நகரச் செயலாளர் மீதே வழக்குப் பதியும் அளவுக்கு நிலைமை போனதே? கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் வகையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுவதுதான் எடப்பாடி ஆட்சியில் குடிமராமத்துப் பணியா?

மத்திய அரசின் கிசான் திட்டத்தில் நானும் விவசாயி தான் என்று சேர்ந்தவர்களால் சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆறு கோடி வரை மோசடி நடந்துள்ளது. வேளாண் அதிகாரிகள் உள்பட ஒன்பது பேர் கைதானதும் இந்த விவசாயியின் மாவட்டத்தில் தான்! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் ஊழல்களை பலரும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்களே!

சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு மாற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சியைத் தடுத்து, பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டமான இதனைக் காப்பாற்றத் தீர்க்கமான எந்த நடவடிக்கைகளை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி? மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை எதற்காக நிறுத்தி வைத்துள்ளீர்கள்? நிலக்கரி எடுத்துவருவதில் கூடுதல் செலவு என்று அதிகாரிகள் சொல்வதாகச் சொல்கிறார்கள்.

உண்மையான காரணம், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்காக மின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளீர்களோ என நான் சந்தேகப்படுகிறேன். அல்லது அந்த மின் நிலையத்தை முடக்க நினைக்கிறீர்களா? சேலம் மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் என்ன? புதிதாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன? கைத்தறி, விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? அந்த தொழிலாளர் உயர்வுக்கு என்ன திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார்?

இந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி தொழில் நலிவடைந்து வருவது முதல்வருக்குத் தெரியுமா? வெள்ளிக் கொலுசு தொழிலும் தேங்கி வருவது தெரியுமா?
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சிறப்பான சில தொழில்கள் சில இருக்கும். அப்படி சேலம் மாவட்டத்துக்கு இருக்கும் தொழில்களை முன்னேற்ற என்ன செய்தார் எடப்பாடி பழனிசாமி? ஆனால் நாள்தோறும் நிருபர்களைப் பார்த்து படம் காண்பித்துக் கொண்டு இருக்கிறார். நான் விவசாயி, நான் உழைப்பால் உயர்ந்தவன், ஒரு சாதாரண விவசாயி முதலமைச்சர் ஆனது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று பழனிசாமி பேசி வருகிறார்.

ஒரு உண்மையான விவசாயி முதலமைச்சராகியிருந்தால் என்னை விட மகிழ்ச்சிக்குரியவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் தன்னுடைய கொள்ளையை, கொடூரத்தை மறைக்க விவசாயி என்று வேடம் போட்டு பழனிசாமி மறைக்க முயற்சித்தால் அதனை மக்கள் மன்றத்தில் கிழித்துத் தொங்கவிடும் பெறும் பொறுப்பு எனக்குத் தான் இருக்கிறது. என்னை அறிக்கை நாயகன் என்று சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை. தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான நான், இந்த ஆட்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை அறிக்கைகள் மூலமாகச் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது.

அந்த அறிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமியும் படிக்கிறார் என்பதற்கு உதாரணமாக நான் சொல்லிய பல்வேறு ஆலோசனைகளை அவர் செயல்படுத்தி வருகிறார். பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யுங்கள், என்று நான் சொன்ன பிறகு தான் எடப்பாடி அரசு ரத்து செய்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்குங்கள் என்று நான் சொன்ன பிறகுதான் அரசு நிதி வழங்கியது.

இ-பாஸை ரத்து செய்யுங்கள் என்று நான் சொன்ன பிறகு தான் எடப்பாடி ரத்து செய்தார். நோய் என்று வந்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் டெஸ்ட் எடுங்கள் என்று சொன்ன பிறகு தான் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுத் தமிழர்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டு வாருங்கள் என்று நான் சொன்ன பிறகுதான் அதற்குத் தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டார். தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி போடச் சொன்னேன். செய்தார்கள்.

பள்ளிகள் திறக்கக்கூடாது என்று நான் சொன்னதைத் தான் அனைத்துப் பெற்றோரும் சொன்னார்கள். இப்படி நான் சொன்ன ஆக்கபூர்வமான பல யோசனைகளை ஏற்றுச் செயல்படுத்தினார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதெல்லாம் எனக்கோ, இந்த நாட்டு மக்களுக்கோ தெரியாது என்பதைப் போல, 'ஸ்டாலின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொல்லவில்லை' என்று இப்போது குற்றம்சாட்டுகிறார்.
எனது அறிக்கைகள் அனைத்தும் முழுமையாக 'முரசொலி'யில் இருக்கிறது. அதனை மீண்டும் எடுத்து, தன்னை விவசாயி எனக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி படிக்கட்டும். அவை அனைத்தும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள்தான்.

அவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் விவசாயம் பார்த்தாரா? அந்த வட்டாரத்து மக்களில் பழைய ஆட்களுக்குத் தெரியும். அவர் வெல்ல வியாபாரியாக இருந்தார் என்று. ஊர் ஊராகப் போய் வெல்லம் வாங்கி, அதனை மொத்தமாக விற்கும் வெல்ல வியாபாரியாக இருந்தவர்தான் பழனிசாமி. அவர் அன்றும் விவசாயம் பார்க்கவில்லை. இன்றும் விவசாயம் பார்க்கவில்லை.

உண்மையில் அவர் விவசாயியாக வாழ்ந்திருந்தால், விவசாயத்தை நம்பி பிழைப்பை நடத்தி இருந்தால் மூன்று விவசாய சட்டங்களுக்கு ஆதரவாகத் தனது கருத்தைச் சொல்லி இருக்க மாட்டார். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்திருக்க மாட்டார். டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக அந்த மாவட்டத்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்னமும் போராடி வருகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக, டெல்டாவை வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் புதிதாக இனி திட்டம் வராது என்று எடப்பாடி சொன்னார்.

புதிய ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு இப்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நிலத்தோடு சேர்ந்து கடலிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கொடுத்துள்ளார்கள். இது விவசாயிகளுக்கு, டெல்டா மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அல்லவா? ஆனால். காவிரி காப்பான் என்று தனக்குத் தானே பாராட்டு விழா எடுத்துக் கொண்டார் பழனிசாமி. அவர் காவிரி காப்பான் அல்ல, காவிரி ஏய்ப்பான். அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் குடிமராமத்துப் பணிகளையாவது ஒழுங்காக, முறையாக நடத்திக் காட்டி இருப்பார். தன்னுடைய ஆட்சியின் மாபெரும் சாதனையாகக் குடிமராமத்துப் பணிகளை பழனிசாமி சொல்கிறார். 'வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆனதால் தான் இது சாத்தியம்' என்று பழனிசாமி தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொள்கிறார்.

குடிமராமத்து என்ற பெயரால் கொள்ளையடிக்கும் திட்டம் தான் அந்தத் திட்டம். பில் போட்டு பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மண்ணை அள்ளுவதாகச் சொல்லி பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். குடிமராமத்து என்றால் ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள், பாசனக் கால்வாய்களை முழுக்க தூர்வாரி நீர் வருகைக்குத் தயார் படுத்தி வைக்க வேண்டும். இதுவரைக்கும் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் குடிமராமத்து பணிகளுக்காகச் செலவு செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கிறது. அப்படிச் சொல்லி கணக்கு எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மை.

குடிமராமத்து பணி என்பதற்குப் பதிலாகச் சவுடு மண் கொள்ளை தான் நடந்துள்ளது. இப்படித் தூர்வாரும் மண்ணை விவசாயிகளுக்குத் தர வேண்டும். ஆனால் விவசாயிகளுக்குத் தருவது போல, போலி பில் போட்டு தனியாருக்கு லாப நோக்கத்தோடு விற்பனை செய்கிறார்கள். குறிப்பிட்ட அளவுக்குத்தான் மண் எடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி, மண் எடுக்கிறார்கள். முன்பெல்லாம் மண் எடுத்தால், மணல் கொள்ளை நடக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இப்போது யார் மண் எடுத்தாலும், 'குடிமராமத்துப் பணி நடக்கிறது' என்று சொல்லி திருட்டை மறைத்துவிடுகிறார்கள். தூர் வாருவதற்காக மணல் எடுக்கவில்லை, மணல் கொள்ளைக்காக மணல் எடுக்கப்படுகிறது. இதுதான் உண்மை.

அரசாங்கத்தின் குடிமராமத்துப் பணியைப் பார்த்து, சில சேவை உள்ளம் கொண்ட மக்கள் தாங்களாகவே பணம் போட்டு தூர்வாருகிறார்கள். இப்படி மக்கள் அவர்களாகப் பணம் போட்டுச் செய்யும் குடிமராமத்தையும் அரசு தாங்கள் செய்ததாகக் கணக்குக் காட்டி பணம் எடுக்கும் கொடுமையும் நடக்கிறது.
கரூர் ராஜவாய்க்காலில் தூர்வாரச் சொன்ன சமூக சேவகர் சண்முகம் கைது செய்யப்பட்டார். மக்களே பணம் போட்டுத் தூர்வார எப்படி அனுமதிக்கலாம் என்று நெல்லை மாவட்டத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார்கள் அ.தி.மு.க.வினர்.

- இப்படி ஒவ்வொரு ஊரிலும் நடந்த குடிமராமத்து கொள்ளைகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்ததும் அளவீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதை ஒரு சாதனையாக எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறார்.

சிறுவயது முதலே கடினமாக உழைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சொல்கிறார். இதை ஸ்டாலினிடம் நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.

முதலமைச்சர் அவர்களே! என்னிடம் நீங்கள் நிரூபிக்க வேண்டியது இல்லை! நெடுங்குளம் சோமசுந்தரம், கருப்பண்ணக் கவுண்டர், துரை ஆகிய மூவரது சமாதியில் போய் நின்று கொண்டு, 'நான் சிறுவயது முதலே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தேன்' என்று சொல்ல முடியுமா? இதனை நான் சவாலாகக் கேட்கிறேன். இதற்கு மேல் அந்த விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை.

படிப்படியாக முன்னேறினேன் என்கிறார் பழனிசாமி. அவர் படிப்படியாக முன்னேறினாரா, உருண்டு உருண்டு போய் முன்னேறினாரா என்பதைத் தமிழ்நாடே பார்த்துச் சிரித்தது. சிரித்துக் கொண்டு இருக்கிறது. வாழ்நாளெல்லாம் சிரிக்கத்தான் போகிறது.

'எனக்குத் தொழில் விவசாயம்' என்கிறார் பழனிசாமி. இல்லை, பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே தொழில் துரோகம்! பழனிசாமியின் துரோகப் படலத்துக்குச் சாட்சி வேண்டுமானால் - செங்கோட்டையனிடம் கேளுங்கள். அவரை வளர்த்துவிட்ட கோபால், சண்முகம், எடப்பாடி மணி, எடப்பாடி பெருமாள் ஆகியோரைக் கேளுங்கள்!

சசிகலாவைக் கேளுங்கள்! தினகரனைக் கேளுங்கள்! துரோகப் படலங்களைப் பக்கம் பக்கமாக எழுதலாம்! படிப்படியாக முன்னேறியவர் அல்ல பழனிசாமி, எல்லாப் படியிலும் தவறி விழுந்தவர் இந்த பழனிசாமி. 1990-ஆம் ஆண்டு சேலம் மாவட்டச் செயலாளரான பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிசாமிக்குத் தரப்பட்டது. சில ஆண்டுகளில் அதுவும் பறிக்கப்பட்டது.
2003-ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப் பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது. 2008-இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தோடு மொத்தமாக நெருக்கமானதால்தான் அ.தி.மு.க.வின் ஐவர் அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதனால்தான் பன்னீர்செல்வத்தை விட இவர் நம்பிக்கையானவராக இருப்பார் என்று சசிகலா குடும்பம் நம்பி முதலமைச்சர் பதவியைக் கொடுத்தது.
இறுதியாக சசிகலா குடும்பத்துக்கும் துரோகம் செய்தார். நல்ல எண்ணம் - தீய எண்ணம் என்பதைப் பற்றி எல்லாம் பழனிசாமி எனக்குப் பாடம் எடுக்க வேண்டியது இல்லை. 'பதவி வரும் போது பணிவு வர வேண்டும்' என்பார்கள். ஆனால் பழனிசாமியிடம் பணிவும் இல்லை. பயமும் இல்லை. பொறுப்பும் இல்லை.
தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது, கேள்வி கேட்கக் கூடாது என்ற ஆணவத்திலும் இருக்கிறார். இந்த இரண்டுமே மக்களுக்கு விரோதமானது. ஜனநாயக விரோதமானது.

பணத்துக்காக மட்டும் எதையும் செய்பவர்கள் கூலிப்படைக்காரர்களாக இருக்கலாமே தவிர, அரசியல்வாதிகள் அல்ல. தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைப்பவர்கள் சர்வாதிகாரிகள். இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது. சேலத்துக்கோ, சேலம் மாவட்டத்துக்கோ பழனிசாமியால் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்த பிறகு மற்ற மாவட்டத்து மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? எதுவும் கிடைக்காது.

நான் மக்களைச் சந்திக்கவில்லை என்றும் காணொலிக் காட்சி மூலமாக மட்டும் பேசுகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
நான் தமிழ்நாட்டு மக்களை 1980 முதல் ஊர் ஊராகப் போய் சந்தித்து வருகிறேன். பழனிசாமி தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கிறேன் என்று அரசு அதிகாரிகளை இப்போதுதான் முதல் முதலாகப் பார்க்கிறார்.

காணொலி காட்சி மூலமாகச் சந்திக்கிறேன் என்றால், அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இதனை நடத்தி வருகிறேன். ஒவ்வொரு மாவட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஒரு லட்சம் பேர் கூடுகிறார்கள். அவர்களை ஒரே இடத்தில் கூட்ட முடியாது என்பதால் நூறு, இருநூறு பேராக அவர்கள் குடியிருக்கும் ஊரிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூட்டி இந்த காணொலிக் கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

நான் ஊர் ஊராகச் செல்லவேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் நேற்றைய தினம் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் பிரச்சார பயணத்துக்கு இந்த எடப்பாடி அரசு தடை விதித்து அவரைக் கைது செய்தது. ஏன் இந்த பயம்? உதயநிதி போகும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்களே என்ற ஆத்திரத்தில் தடை செய்கிறார்கள். கைது செய்கிறார்கள்.

ஒரு உதயநிதி கிளம்பியதையே பழனிசாமியால் சகிக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் தி.மு.க.வின் முன்னணியினர் அனைவரும் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் எட்டு கோணத்திலும் வலம் வரும் போது எடப்பாடி என்ன செய்வார்? எத்தனை ஆயிரம் பேரைக் கைது செய்வார்?
பழனிசாமிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் என்ன செய்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது. இதுவரை எப்படி சும்மா இருந்தீர்களோ அதுபோலவே இந்த கடைசி ஐந்து மாதமும் சும்மா இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. என்ற தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

சேலத்துக்கு அருகில் இருக்கும் பொய்மான்கரடு என்ற ஊரைப் பற்றி கலைஞர் அவர்கள் எழுதி இருக்கிறார். மலைகளில் இடுக்கில் நின்று பார்த்தால் மான் போலத் தெரியும். ஆனால் அது மான் அல்ல. அதனால் தான் அதற்கு பொய்மான்கரடு என்று பெயர் வந்ததாகச் சொல்லி விட்டு கலைஞர் எழுதுகிறார், ''எதையும் நம்பி எத்தர்களின் சித்து வேலைக்கு ஏமாறுகிறவர்கள் இருப்பதால் தான் சேலத்துக்கு அருகில் மாத்திரமல்ல. 'பொய்மான்கரடு' சிம்மாசனத்தில் கூட செருக்குடன் உட்கார்ந்து கொள்கிறது' என்று எழுதினார் கலைஞர் அவர்கள்.

பணத்துக்காக எதையும் செய்யும் இந்த பொய்மான் வேட்டை தான், வரப்போகிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். அரசியலுக்கு வருவதற்கு முன்னால் சில காலம் காட்டில் தலைமறைவாக இருந்தார் பழனிசாமி என்று அந்த வட்டாரத்து மக்கள் சொல்வார்கள். மீண்டும் அவர் தலைமறைவாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை! தமிழக மக்களுக்கு இந்த சேலம் கூட்டத்தின் வாயிலாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1996 தேர்தல் முடிவை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முதல் அமைச்சர்கள் அனைவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்ட தேர்தல் அது.

அத்தகைய மகத்தான முடிவைத் தந்து, இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு நாட்டு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நலனில் அக்கறையில்லாத கொத்தடிமைக் கூட்டத்துக்கு கோட்டையில் இடமில்லை என்பதைக் காட்டத் தமிழகம் தயாராகட்டும். தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
DMK president MK Stalin spoke party's Salem cadres via video on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X