நெஞ்சுக்குநீதி ரிலீஸ், மாமன்னன் சூட்டிங்.. சேலத்தில் உதயநிதிக்கு நன்றி சொன்ன பேரறிவாளன்,அற்புதம்மாள்
சேலம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் இருவரும் சேலத்துக்கு வருகை தந்தனர்.
மேட்டூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இருவரும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
திராவிட பன்றிகள் மீது உன்னி மாதிரி - பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான காங். மீது சீமான் கடும் பாய்ச்சல்

உதயநிதிக்கு நன்றி
இதனை தொடர்ந்து சேலம் தனியார் உணவகத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் பலர் உடனிருந்தனர்.

நெஞ்சுக்கு நீதி ரிலீஸ்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு அடுத்ததாக பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

மாமன்னன் திரைப்படம்
மாமன்னன் என தலைப்பிடப்பட்டுள்ள அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சேலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும், இந்த தகவல் அறிந்துதான் பேரறிவாளனும், அற்புதம்மாளும் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. உதயநிதியை சந்தித்த பின்னர் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அற்புதம்மாள் பேச்சு
அப்போது பேசிய அவர், "31 ஆண்டுகள் சாமானியர்களின் குரல் எடுபடாது என்ற நிலையில் என் மகனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இனி சுதந்திர மனிதனாய் வலம் வருவார். சட்டப்படி நாங்கள் போராடினோம். நிறைய பேர் சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கும் இந்த தீர்ப்பு பயனுள்ளதாக அமையும்.

பேரறிவாளனுக்கு எப்போது கல்யாணம்?
மேலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். பேரறிவாளன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்போம். அதற்கான பெண் தேடலும் இனி நடைபெறும்." எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேரறிவாளன் கூறுகையில், "தமிழக அரசு எங்களுக்கு பேருதவியாக இருந்துள்ளது. மாநில அமைச்சரவையின் முடிவே இறுதியானது என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது." என்றார்.