பாமக நிச்சயம் ஆட்சிக்கு வரும்.! ’பாட்டாளி மாடல்’ அர்த்தம் என்ன தெரியுமா? ரகசியத்தை சொன்ன அன்புமணி!
சேலம் : 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தால் மட்டும் போதும் தமிழகம் முன்னேற்றம் அடைந்து விடும் எனவும், திராவிட மாடல் என திமுக சொல்கிறது நான் சொல்வது பாட்டாளி மாடல் என பாமக இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம மாவட்டம் ஓமலூரில் பாமக சார்பில் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, "கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீரத்தோடும் விவேகத்தோடும் கூடியிருக்கிறீர்கள். வன்னியர் சங்க காலத்தில் சேலம் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று டாக்டர் ராமதாஸ் எழுச்சியை ஏற்படுத்தினார்.
திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல்.. வித்தியாசத்தை விளக்கிய அன்புமணி! அப்போ

பாமக ஆட்சி
இப்போது அதே அளவிற்கு மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியமைக்கும். நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக இல்லை. 35 வயதில் மத்திய அமைச்சராகி எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தால் மட்டும் போதும்.

இது பாமக 2.0
தமிழகம் முன்னேற்றம் அடைந்து விடும். இது பாமக 2.0. கட்சிக்கு மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. 2026 நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். சிலருக்கு பதவிகள் கிடைத்தது. சிலருக்கு கிடைக்கவில்லை. டாக்டர் ராமதாஸூக்கு மட்டுமே கட்சியினர் உள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை பெற்று பணியாற்ற வேண்டும். நமக்குள் எந்த சர்ச்சையும் வரக்கூடாது. நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் நம்மை யாராலும் தடுக்க முடியாது.

பாட்டாளி மாடல் என்ன?
திராவிட மாடல் என திமுக சொல்கிறது. நான் சொல்வது பாட்டாளி மாடல். எல்லோருக்கும் முறையான கல்வி கொடுப்போம். ஒரு சொட்டு சாராயம் இருக்காது. விவசாயிகள் அவர்களுடைய விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பார்கள். இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ், சேலம் ரெயில்வே கோட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்தது பாமக தான். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. எனவே நிச்சயம் கிடைக்கும். மதுவை ஒழிப்பதற்காக போராடி வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் மது அருந்தும் நிலை உள்ளது.

போதைக்கும் அடிமை
கல்லூரி மாணவர்களும் போதைக்கு அடிமையாக உள்ளனர். நாம் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது. அரசின் வருமானத்திற்காக இளைஞர்களை சீரழிக்கக்கூடாது. பாமக மாடல் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்காக போடப்படும். இதற்குப் பிறகு கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கப் போகிறேன் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பாமகவிற்கு ஆதரவான நிலை ஏற்பட்டுள்ளது.

பாமக நிச்சயம் வெற்றி
இதை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும், பாமக நிச்சயம் வெற்றி பெறும். எல்லா சமுதாயமும் நம் கட்சிக்குத் தேவை. சமூக நீதி என்பதுதான் பாமகவின் நோக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் தான் நாம் இயங்கி வருகிறது. அதற்கு அடித்தளம் தான் 10.5 இடஒதுக்கீடு. கல்வி, வேலைவாய்ப்பிற்கு இந்த இட ஒதுக்கீடு உதவும். முதல்கட்டமாக 10.5 இட ஒதுக்கீடு நிச்சயம் சட்டமாக்கப்படும். நிச்சயம் பெற்றுத் தருவோம்." என பேசினார்.