சீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவில்லையே.. எங்கே போனது 56 இஞ்ச் மார்பு? ராகுல் கேள்வி
தாராபுரம்: பிரதமர் மோடியின் வாயில் இருந்து அண்மைக்காலாமாக சீனா என்கிற வார்த்தையே வருவதில்லையே? எங்கே போனது அவரது 56 இஞ்ச் மார்பு? என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று 2-வது நாளாக தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
ஒரே நாடு, ஒரே மொழி என்கிற கொள்கையை முன்னெடுக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தமிழ் ஒரு மொழி இல்லையா? தமிழர்களுக்கு தனி கலாசாரம் இல்லையா? வங்க மக்கள் தனி மொழி பேசவில்லையா? வங்கத்துக்கு தனி கலாசாரம் இல்லையா?

பஞ்சாபி ஒரு மொழி அல்லவா? வடகிழக்கு மாநிலங்களுக்கு என தனி மொழிகள் இல்லையா? அதனால்தான் ஒரே நாடு, ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் முதுகெலும்பையே உடைத்தார் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிந்தே போயின. நெருக்கமான 5 தொழிலதிபர்களுக்காகவே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார் மோடி.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழகத்து இளைஞர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள். தமிழ் மக்களுடன் எனக்கு இருப்பது குடும்ப உறவு; இதனை ரத்த உறவாகவே கருதுகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.