சேலத்தில் ஊரை கூட்டி கிடா (கொரோனா) விருந்து.. 46 பேருக்கு தொற்று.. அடுத்தடுத்து 3 பேர் பலி
சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் கிடா விருந்தில் பங்கேற்றவர்களில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு. ஏற்பட்டுள்ளது. இதனிடையே விருந்தில் பங்கேற்ற 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் 15-வது வார்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை உறவினர்களை அழைத்து கிடாவெட்டி விருந்து வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்தார். மேலும் அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் 20 வயது பெண் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி ஆகியோர் நேற்று காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்கள் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிர் இழந்திருக்கலாம் என தகவல் பரவியது.

இதனால் கிடா விருந்தில் பங்கேற்றவர்கள் அவர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கிடா விருந்தில் கலந்துகொண்டவர்களை தனிமை படுத்தி கோரோனா பரிசோதனை செய்தனர்.

வீடு வீடாக கிருமி நாசினி தெளித்தனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என சுமார் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இதுவரை 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அனைத்து சாலைகளிலும் தடுப்பு சுவர்களை அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்..
அமெரிக்கா...கொரோனா தடுப்பு மருந்து... கட்டாயமில்லை... வெள்ளை மாளிகை அதிகாரி தகவல்!