அக்னிபாத்.. மாணவர்களை மதக் கலவரத்தில் ஈடுபடுத்த மோடி திட்டம்..கார்த்தி சிதம்பரம் பகீர்
சிவகங்கை: சிறுபான்மையினரை தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னிபாத் திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார் என காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களை மதக் கலவரத்தில் ஈடுபடுத்த தான் மோடி திட்டமிட்டுள்ளார் என்றும் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் வகையில் அக்னிபத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்!
வட மாநிலங்களில் இளைஞர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதியில் ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன.

வெடித்த போராட்டம்
ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது சொத்து போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து தென் மாநிலங்களில் அக்னிபத் எதிராக போராட்டம் பரவியது. குறிப்பாக தெலுங்கானாவில் ரயில் நிலையத்தில் நடத்த போராட்டத்தை கட்டுப்படுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினர்.

அக்னிபாத் போராட்டம்
நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்குடியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே அக்னிபாத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஓ.பன்னீர் செல்வம் சாயம்
அப்போது ஆண்டிப்பட்டியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர் அவருக்கு காவி நிற சால்வை அணிவித்தது குறித்தும் அதனை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சாயம் வெளுத்து விட்டதாக கிண்டலடித்தார்.

மதக்கலவரம் தூண்ட திட்டம்
சிறுபான்மையினரை தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னி பாத் திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேருபவர்கள் நான்கு ஆண்டுகளில் வெளிவந்து விடுவர். பின்பு ராணுவத்திற்கும், மாணவர்களுக்கும் தொடர்பே இருக்காது அந்த மாணவர்களை மதக் கலவரத்தில் ஈடுபடுத்த தான் மோடி திட்டமிட்டுள்ளார் என்றும் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.