முதல் நாள் துர்கா ஸ்டாலின், அடுத்து சசிகலா.. “ஒரே கோவிலில் அடுத்தடுத்து தரிசனம்” வேண்டுதல் என்னவாம்?
சிவகங்கை: முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு வந்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
அடுத்த 2 நாட்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
துர்கா ஸ்டாலினின் வேண்டுதல் நிறைவேறியது போல சசிகலாவின் வேண்டுதலும் நிறைவேறுமா என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
முதல்வராக வேண்டுதல்...நிறைவேற்றிய பெருமாள்... தங்கத்தகடு நேர்த்திக்கடனை நிறைவேற்றிய துர்கா

துர்கா ஸ்டாலின்
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இறை மறுப்பு கொள்கை கொண்டவராக இருந்தாலும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை கொண்டவர். கோவில்களுக்குச் செல்வதையும், சாமி கும்பிடுவதையும் வெளிப்படையாகவே மேற்கொள்பவர் துர்கா. ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார்.

வேண்டுதல் நிறைவேற்றம்
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலுக்கு கடந்த 14ஆம் தேதி மாலை வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். லட்சுமி நரசிம்மருக்கு தங்கத்தகடு பதிக்கும் பணியை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

ஏற்கனவே 3 முறை
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என ஏற்கெனவே மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து துர்கா ஸ்டாலின் வேண்டிக் கொண்டதாகவும், தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறியதால் நான்காவது முறையாக வருகை புரிந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது. அவருடன் உறவினர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர். துர்கா ஸ்டாலினை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

சசிகலா
இது ஒரு பக்கமென்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அ.ம.மு.க தலைவருமான சசிகலா, தமிழ்நாடு முழுவதும் கோவில் கோவிலாகச் சென்று தரிசனம் செய்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். அதோடு நில்லாமல், அ.தி.மு.கவுக்கு தலைமை ஏற்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்து வருகிறார். அதிமுக தலைவராவதற்குத் தான் கோயில்களில் வேண்டி வருவதாகவும் கூறுகின்றனர் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

திருக்கோஷ்டியூர்
அந்த வகையில், சசிகலா சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சமீபத்தில் தரிசனம் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவன் தலைமையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக தொண்டர்களும் சசிகலா வருகையின்போது வந்துள்ளனர்.
பின்னர் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலிலும் சசிகலா தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் சசிகலாவிடமும் தங்க விமானத் திருப்பணிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில்
துர்கா ஸ்டாலின் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு வந்து சென்ற இரண்டே நாட்களில் சசிகலாவும் அதே கோவிலுக்கு வந்து வழிபாடு மேற்கொண்டது அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
துர்கா ஸ்டாலினின் வேண்டுதல் நிறைவேறியது போல சசிகலாவின் வேண்டுதலும் நிறைவேறுமா என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அது நிறைவேறினால் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் சிக்கல்.