முதல்வராக வேண்டுதல்...நிறைவேற்றிய பெருமாள்... தங்கத்தகடு நேர்த்திக்கடனை நிறைவேற்றிய துர்கா
சிவகங்கை: தனது கணவர் முதல்வராக வேண்டும் என்று திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளிடம் வேண்டிக்கொண்டார் திருமதி துர்கா ஸ்டாலின். அந்த வேண்டுதலை பெருமாள் நிறைவேற்றியதால் கோவிலுக்கு சென்று தனது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். கோவில் விமானத்தில் தங்கத்தகடு பதிக்கும் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சௌமியநாராயணர் கோவில். இந்த கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95வது தலமாகும் நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம்.
இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சௌமியநாராயணர் கோவில்.
தாயில்லாமல் இந்த இடத்தில் நானில்லை.. உதயநிதியின் பேச்சை கேட்க சட்டசபைக்கு வந்த துர்கா ஸ்டாலின்!

கோவில் கோபுரத்தின் சிறப்பு
இந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

கேட்டதைக் கொடுக்கும் பெருமாள்
இந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக் கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள்.

தீப விளக்கு நேர்த்திக்கடன்
இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் ஏற்றிவைத்து வழி படுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

துர்கா ஸ்டாலின் வேண்டுதல்
தனது கணவர் முதல்வராக வேண்டும் என்று இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு சென்றார் துர்கா ஸ்டாலின். அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டது. இதனையடுத்து நேர்த்திக்கடனை செலுத்த வந்தார்.
கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நிறைவேற்றிய பெருமாள்
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என ஏற்கெனவே மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாகவும், தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறியதால் நான்காவது முறையாக வருகை புரிந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். குடும்பத்தினர் அனைவர் பெயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து சவுமியநாராயணபெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்துக்கு செப்பு தகட்டில் தங்கத்தகடு பொருத்தும் பணியை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் சயன கோலத்திலுள்ள மூலவர், தாயார், ஆண்டாள், ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகள் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசனம் செய்தார். சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோயிலில் லட்சுமி நரசிம்மர் சிற்பத்திற்கு செப்பு தகட்டில் தங்க ரேக் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

ஓம் நமோ நாராயணா
ராமானுஜர் இந்த ஆலயத்தின் கோபுரத்தின் மீதேறி 'ஓம் நமோ நாராயணா' எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம்தான் திருக்கோஷ்டியூர். இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள். அற்புதமான க்ஷேத்திரத்துக்கு வந்தாலே புண்ணியம். இங்கு மாசி மகம் ரொம்பவே விசேஷம். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி பனிரெண்டு நாள் திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறும்.

ராமானுஜரை வழிபட்ட மு.க ஸ்டாலின்
மாசி மக நன்னாளில், அதற்கு முந்தைய நாளில், மகத்துக்கு மறுநாளில் என மூன்று நாட்களில் ஏதேனும் ஒருநாள், இங்கே தெப்பக்குளத்தில் விளக்கேற்றி விடுவது ஐதீகம். அங்கிருந்து விளக்கு எடுத்து வந்து வீட்டுப் பூஜையறையில் வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், நாம் நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும். கேட்டதெல்லாம் தந்தருளுவார் பெருமாள். கடந்த 2015ஆம் ஆண்டு 'நமக்கு நாமே' பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இந்த ஆலயத்திற்குள் வந்து கோவில் கோபுரத்தின் மீதேறி ராமானுஜரை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.