ஜோடி போட்டு பார்த்துவிடலாம்! ஒரே வார்டில் கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் கணவனும் மனைவியும் ஒரே வார்டில் ஒருவரை ஒருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சுயேச்சை வேட்பாளர்களாக களைமிறங்கியுள்ள இவர்கள், வாக்கு சேகரிப்பின் போது ஒன்றாக ஓட்டுக் கேட்டுச் செல்கின்றனர்.
இதனால் யாருக்கு வாக்களிப்பது எனப் புரியாமல் அந்த தம்பதியின் உறவினர்களும், நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. இந்த 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு!

நகர்ப்புற தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களின் வித விதமான வாக்குறுதிகளால் வாக்காளர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக பணபலம், ஆட்பலத்துடன் பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் கணவனும் மனைவியும் சுயேச்சையாக ஒரே வார்டில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

11-வது வார்டு
காரைக்குடி நகராட்சி 11-வது வார்டை சேர்ந்த மெய்யர் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் நிலையில் அதே வார்டில் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார் அவரது மனைவி சாந்தி. ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்டாலும் இரண்டு பேரும் ஒன்றாக சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வை பார்க்கும் அரசியல் கட்சியினர் இது என்னடா சோதனை என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக புலம்பி வருகின்றனர்.

உறவினர்கள்
11-வது வார்டில் மெய்யருக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்ததா இல்லை அவரது மனைவி சாந்திக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்ததா என்பது வாக்கு எண்ணிக்கையின் போதே தெரியவரும். இவர்களை போலவே பெரம்பலூர் நகராட்சியிலும் கணவன் மனைவி தம்பதி ஒருவர் ஒரே வார்டில் ஒருவரை ஒருவர் எதிர்த்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வேட்பாளர்
காரைக்குடி நகராட்சி 11-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் மோதுகிறார். காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் நகர்மன்ற தலைவர் பதவியை காங்கிரஸ் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.