மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத சர்ச்சையில் டீனை பொறுப்பாக்கக் கூடாது.. ப சிதம்பரம் ட்வீட்
சிவகங்கை: மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத சர்ச்சையில் டீனை பொறுப்பாக்கக் கூடாது என ராஜ்யசபா எம்பி ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முன் தினம் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர் சங்க தலைவர் உறுதிமொழி வாசிக்க அதை முதலாண்டு மாணவர்கள் திரும்ப வாசித்தனர். அப்போது ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் பெயரில் உறுதிமொழி ஏற்றனர்.
ஆசிரியர்களே டிவிதான் பாக்குறாங்க! மாணவர்கள் குறும்பு செய்யனும் -பள்ளியில் கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்

இந்தி திணிப்பு
தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடி வரும் நிலையில் அமைச்சர்கள் முன்பு இப்படி சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அமைச்சர் பதில்
அவருக்கு பதிலாக பொறுப்பு டீனாக துணை முதல்வர் பதவியிலிருந்தவர் பொறுப்பேற்றார். இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் கல்லூரி டீன் என்பவர் பெரிய பொறுப்பில் இருக்கிறார். எங்களுக்கு தெரியாமலேயே இது போன்ற தவறு நடந்து விட்டதாக எப்படி கூறமுடியும். இது தமிழகத்தில் நடக்கும் சென்சிட்டிவான விஷயமல்லவா?

ப சிதம்பரம் ட்வீட்
அதனால்தான் டீன் மீது நடவடிக்கை எடுத்தோம். விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிலையில் இதுகுறித்து ராஜ்யசபா எம்பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார் ப சிதம்பரம்
இதுகுறித்து அவர் கூறுகையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது. டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம்.

ஒரு மூத்த டாக்டர்
அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை அளிப்பதாக ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.