• search
சிவகாசி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பட்டாசு தொழிலை காப்பற்றுங்கள்... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

|

சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுகிற வகையில் உரிய தீர்வு காணப்படவில்லை எனில் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதோடு, 1800 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்னல்

இன்னல்

தலைநகர் தில்லியின் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துவதாகக் கூறி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடந்த 23, அக்டோபர் 2018 அன்று தடை விதித்தது. இந்த தடை விதிப்பிற்குப் பிறகு பட்டாசு உற்பத்தியில் முதன்மை நிலையில் இருந்த விருதுநகர் மாவட்டம், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பட்டாசு உற்பத்தியில் சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தொழிலை நம்பி நேரிடையாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் பயன் பெற்று வருகிறார்கள். ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் நாடு முழுவதும் மறைமுகமாக இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்.

நீரி அமைப்பு

நீரி அமைப்பு

இத்தகைய தடையை உச்சநீதிமன்றம் விதிப்பதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 21 ஆகஸ்ட் 2018 இல் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் துணை போயிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. அந்த மனுவின்படி, ‘பட்டாசு உற்பத்தியாளர்கள் குறைவான மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதன் அளவை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும், நாக்பூரில் அமைந்துள்ள நீரி (NEERI) என்ற அமைப்பும் முடிவு செய்ய வேண்டும்" என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே பட்டாசுகள் உற்பத்தி செய்ய வேண்டுமென்று மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.

விமர்சனம்

விமர்சனம்

உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதனால் எழுகிற புகைமூட்டம் தான் தில்லியின் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. இதை உச்சநீதிமன்றம் சரியாக புரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக பட்டாசுக்கு தடை விதித்துவிட்டது. சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்ற மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதன்மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய பா.ஜ.க. அரசு நடத்துகிறது.

அரசுக்கு பொறுப்பு

அரசுக்கு பொறுப்பு

எனவே, இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்ட சிவகாசி தொழில் துறையில் முன்னோடி நிலையை பெற்றிருந்த சூழல் மாறி, இன்றைக்கு அதனுடைய பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. மத்திய அரசின் தவறான கொள்கையின் காரணமாகவே இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுகிற வகையில் அ.இ.அ.தி.மு.க. அரசு உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசோடு தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுகிற வகையில் விரைவில் உரிய தீர்வு காணப்படவில்லை எனில் மத்திய - மாநில அரசுகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 
 
 
English summary
tncc president k.s.azhagiri statement about the Protect to fireworks industry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X