இந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று!
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தது இந்திய ராணுவம். தமிழீழ விடுதலைப் புலிகள் கொரில்லா முறையில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இதனால் இந்திய ராணுவம் யார் போராளிகள், பொதுமக்கள் எனத் தெரியாமல் குழம்பி நின்றது. கண்களில் தென்படுவோரையெல்லாம் விடுதலைப் புலிகளாகப் பார்த்து வேட்டையாடியது இந்திய ராணுவம்.

இதன் உச்சமாக 1987 அக்டோபர் 21 தீபாவாளி தினத்தன்று நிகழ்ந்ததுதான் யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை. யாழ்ப்பாண பொது மருத்துவமனைக்குள் நுழைந்த இந்திய அமைதிப் படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என ஒருவரைக் கூட விட்டுவைக்கவில்லை. மொத்தம் 70 பேர் மருத்துவமனையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாண பொது மருத்துவமனையே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.

சடலங்களைப் போல நடித்து உயிர் தப்பியவர்கள், தண்ணீர் தண்ணீர் என கதறியபடியே மரணித்தவர்கள் என எண்ணற்ற ஓலங்களை உள்ளடக்கியது யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை.
இன்று யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-வது ஆண்டு நினைவுநாள்!