For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் - சி.வி.விக்னேஸ்வரன்

By BBC News தமிழ்
|
சி.வி.விக்னேஸ்வரன்
Getty Images
சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்' வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு இணைப்பை ஏன் கோருகின்றோம்?

"வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள்.

ஆனால் அண்மைக் காலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை. துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணப்பட்டவர்கள்.

ஆகவே வட கிழக்கு பிரிக்கப்பட்டால் சிங்கள ஆதிக்கம் பெருகும். வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையில் இருந்து பறிபோய்விடும்.

1881-ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள்.தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள்.சிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள்.



முஸ்லீம் மக்களின் பெருக்கம் வழக்கமாகவே மற்றைய இனங்களிலும் பார்க்கக் கூடியதென்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பல் தார மணங்கள் அம்மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.

அவர் மேலும் கூறுகையில், "ஆனால் 1946 தொடக்கம் சிங்கள மக்களின் தொகை மிக விரைவாகப் பெருகத் தொடங்கியது. 1981ல் தமிழர்களின் ஜனத்தொகை 42 சதவீதமாகக் குறைந்தது. முஸ்லீம்களின் ஜனத்தொகை 32 சதவீதமாகக் குறைந்தது. சிங்களவரின் ஜனத்தொகை 5 சதவிகிதத்தில் இருந்து 25 சத விகிதத்திற்குப் பெருகியது. இதேவாறு பெருக்கம் நிலைத்திருந்தால் 2031ல் சிங்களவர்கள் ஜனத்தொகை 50 சதவிகிதமாக ஏறியிருக்கும். போர் வந்ததால் அவர்கள் ஜனத் தொகை குறைந்தது. முஸ்லிம்கள் தொகை 35 சதவிகிதத்திலேயே நின்றது. ஆனால் தமிழரின் ஜனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகிறது.

ஆகவே வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக அவசியம் ஆகின்றது. இல்லையேல் அவர்களின் மொழி, காணிகள், அவர்களின் அடையாளங்கள், பாரம்பரியங்கள் எல்லாமே அழிந்து விடுவன.

முன்னர் இலங்கையில் வாழ்ந்த பறங்கியர் இப்பொழுதெங்கே? என் வாழ்நாளிலேயே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளார்கள். சிங்களம் வந்ததும் அவர்கள் நாட்டை விட்டுப் போய் விட்டார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரர்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல. அவர்தம் மதமே அவர்களுக்கு முக்கியம்.

வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக முக்கியம் என்ற நிலையில் முஸ்லீம் சகோதரர்களும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் மீது கவனமாகவே இருக்கின்றார்கள். அதே நேரம் வட கிழக்கு இணைந்தால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு உண்டு" என்றும் தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன்.

"மட்டக்களப்பில் ஒரு பகுதியையும், ஊவா மாகாணத்தில் இருந்த பதியத்தலாவ, மகா ஓயா போன்றவற்றின் நிலப்பரப்பையும் உள்ளடக்கியே 1956ல் அம்பாறை என்ற ஒரு மாவட்டம் நடைமுறைக்கு வந்தது. கிழக்கினுள் சிங்கள மக்களை உள்நுழைக்க இது உதவியது. இதனால் கிழக்கின் சிங்கள மக்களின் செறிவு கூடுதலாக்கப்பட்டது.

சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் இணைப்பை சாதகமாகப் பார்ப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இணைப்பு வேண்டாம் என்பதால் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய இடங்களை மற்றவர்களிடம் தூக்கிக் கொடுத்து விடமுடியாது.

வட கிழக்கில் சிங்கள எகாதிபத்தியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவதைக் கண்டும் நாங்கள் கண் மூடிக் கொண்டு இருக்க முடியாது.

அதைவிட தமது மதத்தில் கூறியபடி "பல்கிப் பெருகிட வேண்டும்" என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் எமது சகோதர இனப் பெருக்கத்தையும் நாம் அசட்டை செய்ய முடியாது.

இங்கு கூறப்படும் அனைத்தையுமே மனதில் கொண்டால் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைப்பைக் கேட்பதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

வடகிழக்கை எவ்வாறு இணைக்கலாம்?

"நாம் எமது கட்சி அடிப்படையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கு தனியொரு அலகை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் அலகுடன் அல்லது முஸ்லிம் அலகுடன் சேரலாம். தமிழ் மொழிக்கே இரு அலகுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும். முஸ்லிம் தமிழ் அலகுகளுக்கிடையில் வரும் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குத் தேவையான அலகில் சேரவழிவகுக்க வேண்டும்.



இன்னுமொரு யுக்தியைக் கையாளலாம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் லகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் ஊவா மாகாணத்துடன் சேர்க்க வேண்டும்.

அதே போல் கோமரன்கடவல உதவி அரசாங்க அதிபர் பிரிவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரித்து வடமத்திய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த விதத்தில் கிழக்கில் குடிகொண்டிருக்கும் 75 சதவிகித சிங்கள மக்களை அவர்தம் மக்களுடன் சேர்த்து விடலாம். அதன் பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம்.

இதனால் ஏற்படும் காணி நஷ்டத்தைப் புத்தளம் மாவட்டத்தை வடமாகாணத்துடன் சேர்ப்பதன் மூலம் ஈடு செய்யலாம்.

கண்டிய மன்னர் காலத்தில் புத்தளம் தெமள ஹத்பத்து என்றே அழைக்கப்பட்டு வந்து. "தமிழர் வாழ் ஏழு பற்றுக்கள்" என்பதே அதன் பொருள். புத்தளம் வாழ் மக்கள் தமிழ்ப் பேசும் மக்களே. இணைப்பின் பின் பொது எல்லைகள் இல்லாத ஒரு அலகாக பாரம்பரிய முஸ்லிம் இடங்கள் வடகிழக்கினுள் ஒரு அலகாக்கப்படலாம்.

நான் நண்பர் அஷ்ராவுடன் இது பற்றி எல்லாம் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கருத்துக்கள் பரிமாறியுள்ளேன்.

அவ்வாறான ஏற்பாடுகள் சிங்களவருக்கும் நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும். கிழக்கில் தமிழர்களும் பாதுகாக்கப்படுவர்.

ஆகவே வடகிழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் தனித்துவத்தைப் பேணவும் அத்தியாவசியமானது.

வடகிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு காலக்கிரமத்தில் இடம் உண்டு. அழிக்கப்படும் இனம் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இனமாகவே இருக்கும்" என விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Chief Minister CV Vigneshwaran has urged to unification of Sri Lanka's North and East states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X