For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்ட கருணாவின் உண்மை முகம் என்ன? விவரிக்கும் விடுதலைப் புலிகள்...

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக அந்த அமைப்பில் இருந்து வெளியேறி இலங்கை அரசுடன் கை கோர்த்த கருணா பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். ஆனால் இவை அனைத்துமே கட்டுக்கதைகள்; சிங்களத்தால் கைவிடப்பட்ட நிலையில் பல்வேறு உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர் வெளியிடுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்த கருணா, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்; தான் பிரபாகரனுக்கு அடுத்ததாக ராணுவ தளபதியாக இருந்தேன்; எனக்கு கீழ்தான் பிற தளபதிகள் இருந்தனர் என்றெல்லாம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

LTTE denys Karuna's comments

இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் ஈழத்து போர்க்களங்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி வரும் "ஈழத்து துரோணர்" இது குறித்து எழுதியுள்ளதாவது:

கருணா.!! இந்த பெயரை தமிழினம் உள்ளவரை தமிழர் மறக்கப் போவதில்லை. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வழங்கிய நேர்காணலை பார்த்த போது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகவே இருந்தது. இதில் உண்மைக்கு புறம்பான பல கதைகள் இட்டுக் கட்டி தன்னை நியாயப் படித்த விழைகின்றார்.

அவரது நேர்காணலை பார்க்கும் போது தமிழ் மக்களாலும் கைவிடப் பட்டு, சிங்கள ஆட்சியாளராலும் கைவிடப்பட்டு நடுத் தெருவில் நிற்கும் போது வந்த "சுடலை ஞானம்" என்றே நான் பார்க்கின்றேன். அதன் வெளிப்பாடே தலைவரையும், மாவீரரையும் மரியாதையாக கதைத்தமை ஆகும். தலைவரைப் பற்றியும் மாவீரரைப் பற்றியும் உலக தமிழருக்கு தெரிந்த ஒன்றை தான் இப்போது இவரும் கூற விழைகின்றார்.

தான் புலிகள் போராளிகளை கொல்லவில்லையாம். லெப்.கேணல் நீலன், கெளசல்யன் போன்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளம். அவைகளை மறக்க தமிழருக்கு மறதி வியாதியா? புலிகளை எதிர்த்து போராட இவர் ஆயத்தம் செய்த போதும் புலிகள் அதற்கு இடம் கொடாது அதை முறியடித்தனர்என்பதே உண்மை.

அடுத்தது கருத்து முரண் பாட்டில் பிரிந்ததாக புதுக் கதை ஒன்றை உருவாக்கி உள்ளார். நிதி மோசடி மட்டக்களப்பில் நடந்தது. அங்கு தலைவர் போய்ப் பார்க்க முடியாது. இதை கண்டு பிடித்தவர் தமிழேந்தி அப்பா அதன் பின்பு தான் புலனாய்வு விசாரணைகள் மூலம் பாலியல் பிரச்சனை இனம் காணப்பட்டது. அதை தலைமை அறிந்ததும் பிரதேச வாதம் முன்னிறுத்தி பிரிந்தது எல்லோருக்கும் தெரியும்.பிறகேன் இந்த வீண் முயட்சி?

அடுத்ததாக தன்னை ஒரு இராணுவ மேதாவியாக காட்ட விழைகின்றார். புலிகளின் அரசியல், கடல்புலிகள், நிதித்துறை, புலனாய்வுத்துறை தவிர தான், தான் விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதி என்றும் இவருக்கு கீழேயே பிரிகேடியர்.பால்ராஜ் அண்ணை,தீபண்ணை போன்றவர்கள் இருந்தது போலவும், அவர்களையும் இவரே வழிநடத்தியது போலவும் கூறுகின்றார். இதே வாயால் தான், பேச்சு வார்த்தைக்கு வெளிநாடு வந்த போது தலைவரின், தளபதிகளின் போர் நுட்பம் பற்றி சிலாகித்து கூறிய உரைகள் இன்றும் இணையத்தில் உள்ளது மறந்து விட்டதோ தெரியவில்லை.?

அடுத்தது அவர் கூறிய முக்கிய குற்றச்சாட்டு இந்திய இராணுவம் மாணலற்றில் சுற்றி இருந்த நேரம் பானு அண்ணை, சூசை அண்ணை போன்ற தளபதிகள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாகவும், தான் தான் அண்ணையை மீட்டு உயிரை காப்பாற்றியதாகவும் கூறுகின்றார். இது முழுப் பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது. அவர்கள் இருவரும் இந்திய இராணுவத்துடன் சண்டையின் போது காயமடைந்ததனால், மருத்துவத்திற்காக தமிழ்நாட்டிற்கு சென்று மருத்துவம் பெற்றதும் மீண்டும் ஊர் திரும்பி மீண்டும் சண்டை இட்டது வரலாறு.

அந்த நேரத்தில் நாங்களும் மணலாற்றில் தான் இருந்தோம். என்னைப் போல இன்றும் பலர் உயிருடன் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் ஆரம்பத்தில் தலைவருக்கு பாதுகாப்பாக மணலாறு, முல்லைமாவட்ட தளபதிகளான மேஜர்.தங்கேஸ் அண்ணை, பசிலண்ணை, டடி/நவம் அண்ணை போன்றவர்கள் இருந்து வீரச்சாவடைந்த பின்னும், பொட்டு அம்மான், சொர்ணமண்ணை, கடாபிஅண்ணை, பால்ராஜ் அண்ணை, சங்கரண்ணை, அன்பண்ணை, ரொபட்/வெள்ளை அண்ணை, தீபண்ணை, சுபனண்ணை , கிறேசியண்ணை இப்படி அவரை சுற்றி நின்று பாதுகாத்த வீரத் தளபதிகளின் பட்டியல் மிக நீளமே.

அதில் கருணாவும் ஒரு அணில். இவ்வளவு பெரிய புளுகு எதற்கு? இவர்கள் தான் இந்திய அரசின் "செக்மேட்" இராணுவ நடவடிக்கைகளை முறியடித்த கதாநாயகர்கள். இன்று தான் செய்தது போல தம்பட்டம் அடித்து மக்களை திசை திருப்ப பாக்கின்றார். அடுத்தது மிக முக்கியமானது தனது தாக்குதல் உத்தி என்று ஒன்றை கூறினார்.

இராணுவம் முன்னேறும் போது பின் பக்கத்தால் இறங்கித் தாக்குவது. பாவம் கருணா 1994இல் இராணுவத்தின் முன்னேறிப் பாச்சல் இராணுவ நடவடிக்கையை தலைவரின் நெறிப் படுத்தலில் பொட்டு அம்மானின் வழி நடத்தலில் புலிகள் முன்னாள் விட்டு பின்னால் இறங்கி அடித்து சிங்களவனை ஓட ஓட விரட்டியது தெரியாது போல இருக்கு. அன்று தான் புது உத்தி ஒன்றை புலிகள் கையாண்டு பெரும் வெற்றியை பெற்றிருந்தனர்.

இந்த உத்தியை சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும்,பின்பு வந்த பல இராணுவ முன்னேற்றங்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப் பட்டது. அதை தான் தன்னுடைய உத்தி என்று கருணா இப்போது புலம்பி உள்ளார். கருணா மட்டக்களப்பில் இருக்கும் போது, கருணாவால் மேற்கொள்ள பட்ட முதல் முகாம் தகர்ப்பு முயற்சி வவுணதீவு முகாம் ஆகும்.

இந்த தாக்குதல் எமக்கு படு தோல்வியில் முடிந்தது 120க்கு மேட்பட்ட போராளிகளை பறிகொடுத்து 50 இற்கு மேட்பட்ட இராணுவத்தினர் மட்டுமே கொல்லபட்டு இருந்தனர். எமது பக்கத்தில் மிகப்பெரிய இழப்புகளுடன் பின்வாங்க பட்டது . இதற்கு முக்கிய காரணம் கருணாவிற்கு பதுங்கித் தாக்குதலில் இருந்த அனுபவம்,மரபு ரீதியான தாக்குதலுக்குஇல்லாமல் போனமையே.

அப்போ நீங்கள் கேக்கலாம் எப்படி கருணாவிற்கு இவளவு பிரபலியம் கிடைத்தது என்று ??

அதற்கு நாங்கள் சிறிது பின்னோக்கி போக வேண்டும்.! இந்திய இராணுவத்துடன் கடைசிவரை போராடியது, மற்றும் சண்டை முடிந்த பின் 1990இன் பின் மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கில் புதிதாக போராளிகள் இணைந்தார்கள்.

அவர்களை இணைத்து போராளியாக்கி தலைவருக்கு விசுவாசமாக வளத்திருந்தார். இதில் எனக்கும் மற்று கருத்தில்லை. கருணாவை நல்ல ஒருங்கிணைப்பாளர் என்றே கூறலாம். இதனால் அண்ணைக்கும் அவரிடம் இயல்பான மதிப்பு இருந்தது. அதனால் மாவட்ட ரீதியான பொறுப்பின் ஊடாக எல்லோருக்கும் கேணல் தரம் வழங்கும் போது அவருக்கும் வழங்க பட்டது.

ஆனால் போரியலைப் பொருத்தவரை 1990களில் அங்கு தளபதிகளாய் இருந்த லெப்.கேணல். ரீகண்ணை ,ஜோய் போன்றவர்களின் தொடர் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் இவர் மீது பெரும் மாய விம்பத்தை உருவாக்கியது. இப்படியே காலம் உருண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளில் வன்னியில் நிலை கொண்டிருந்த புலிகளின் விசேட படையணிகள் பெரும் சிதைவு , மற்றும் ஆளணி பற்றாக் குறையை சந்திக்கும் என்பதை உணர்ந்த தலைவர், மறிப்பு சண்டைக்கு போராளிகள் தேவை நிமித்தம் முதல் கட்டமாக ஜெயந்தன் படையணி வன்னிக்கு நகர்த்த பட்டது.

அதன் தளபதியாக கருணாவையும் அழைத்து அவரிடமே அவர்களையும் வழிநடத்தும் பொறுப்பும் தலைவரால் வழங்க பட்டது. அதற்கு முக்கிய காரணம் அந்த போராளிகள் பற்றி அவருக்கே முழுவதும் தெரிந்திருந்தது. அவர்களுக்கும் கருணாவை விட்டால் வேறு தளபதிகளை அந்த நேரத்தில் தெரியாது. அவர்களை பழக்கி, அறிந்து, அணி மாற்றுவதற்கு நேரமும் இல்லை. அதனால் கருணாவிடமே விடப்பட்டது.

ஜெயசிக்குறு சண்டையில் அணி மாற்றீட்டுக்காகவே கருணா கொண்டு வரபட்டார். இதன் பின்பு தான் கருணாவும் முதல் தடவையாக மரபுவழி யுத்தத்தில் பங்கு பற்றினார். ஆனால் அதற்கு முன் மரபு ரீதியான சண்டைகளில் "பழம் தின்று கொட்டையை போட்ட" தளபதிகளான பால்ராஜ் அண்ணை தீபண்ணை, பானுஅண்ணை, ராசயூஅண்ணை, சொர்ணமண்ணை போன்றவர்களுக்கு மத்தியில் மரபுவழி சண்டைக்கு வந்த பாலகன் தான் கருணா.

இன்று ஜெயசிக்கிறு சண்டையை தான் தான் முறியடித்ததாகவும், அண்ணைக்கே போர் நுட்பங்களை சொல்லி கொடுத்தது போல தம்பட்டம் அடித்திருந்தார். உண்மையில் அந்த சண்டையில் ஒவ்வொரு பகுதியை ஒவொரு தளபதிகள் வழிநடத்தினார்கள். ஜெயசிகுறு சமர் எல்லா தளபதிகளாலும், போராளிகளாலும் ஈட்டப் பட்ட பெரும் வெற்றி. இதில் ஆட்லறி,மோட்டார் படையணிகள் முக்கிய பங்காற்றி இருந்தது.

இது புலிகள் அமைப்பில் இருந்த எல்லா போராளிகளுக்கும் தெரியும். அந்த நேரத்தில் பெட்டி அடித்து இருத்தல் சண்டை (box சண்டை என்பார்கள் ) தான் பிரபல்யம். அதை அறிமுக படுத்தியது தீபண்ணா தான் . அவரால் தான் இராணுவம் வெற்றிகரமாக தடுக்க பட்டது. இராணுவத்தை அடித்து கலைத்த சண்டையை சொர்ணம் அண்ணை ஒட்டு சுட்டானில் ஆரம்பித்து வைக்க, எல்லா கட்டளை தளபதிகளாலும் ஒவ்வொரு பகுதியாக தலைவரின் வழிநடத்தலில், தளபதிகளால் வழிநடத்தப் பட்டு கூட்டு முயட்சியில் வெற்றி கொள்ளப் பட்டது.

அடுத்தது ஆனையிறவு வெற்றியும் தன்னால் தான் வந்ததாக கூறுகின்றார். அந்த சண்டை பற்றி தமிழ் தெரிந்த சிறு குழந்தைக்கும் தெரியும் பால்ராஜ் அண்ணாவின் இத்தாவில் தரை இரக்கமும், ஏனைய தளபதிகளின் ஒவ்வொரு பகுதிக்கான வழிநடத்தலுமே. இதில் கருணாவும் ஒரு படையணியை வழிநடத்தினார் என்பதே உண்மை.

எந்த காலத்திலும் அந்த நேரத்தில் கேணல் தரத்தில் இருந்த முக்கிய தளபதிகள் கருணாவிற்கு கீழ் சண்டை செய்யவில்லை.அப்படி மிகப் பெரிய இராணுவமேதை என்றால் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளுடன் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களுடன் இருந்த போதும், ஆயிரம் போராளிகள் தாக்கிய போது ஏன் அவர்களை முறியடித்து வெற்றி கொள்ளவில்லை ??

ஏனெனில் புலிகளமைப்பு என்னும் குளத்தில் இருந்து வெளியேறிய (கரை) முதலைக்கு தரையில் பலமில்லை அது தண்ணீரில் இருக்கும் போது தான் அதற்கு பலம். இப்படி பட்ட கருணா தான் தன்னை இராணுவ மேதையாக காட்ட முற்படுகின்றார்.

கருணா பிரிந்து சென்ற பின் சண்டைகளில் எமக்கு பின்னடைவு வந்தது உண்மை தான். அதற்கு காரணம் எமது பலவீனம் அவருக்கு தெரிந்திருந்தது. அனால் கருணாவும் ஸ்ரீலங்கா ராணுவமும் போரிட்டிருந்தால் தமிழர் சேனை நிச்சையம் அதை முறியடித்திருக்கும். நாம் மோதியது வல்லரசுகளுடன். எமது தோல்விக்கு முக்கிய காரணம். எமது அயுத வளங்கள் தடை பட்டமையும், அது எதிரிக்கு தடையில்லாமல் கிடைத்தமையும்.

இதை நான் எதோ கருணா மீது காழ்ப்புணர்ச்சியில் கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். இது தான் உண்மை. இது எமது போராளிகளுக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரை மற்றைய தளபதிகளுடன் ஒப்பிடும் போது கருணாவால் அவர்களுக்கு கிட்டையும் நிக்க முடியாது இது எமது போராளிகளுக்கும் நன்கு தெரியும்..!!

வலியுடன் துரோணர்..!!!

இவ்வாறு அவரது பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

English summary
LTTE cadres had denied Srilanka's former Minister Karuna's comments on their movement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X