For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமராக உங்களை விட பலருக்கு தகுதி இருக்கு...: ராஜபக்சேவுக்கு மைத்ரி 'சுளீர்' கடிதம்!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தேர்தலுக்காக இனவாதத்தைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும்; உங்களை விட பிரதமர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியில் பலருக்கும் தகுதி இருப்பதால் நீங்கள் ஒதுங்க வேண்டும்; உங்களை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன கடிதம் அனுப்பியுள்ளது அந்நாட்டு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ள அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் எதிர்ப்பை மீறி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தேர்தலில் போட்டியிடுகிறார்.

Sri Lankan President reiterates that Rajapaksa will not be appointed PM

அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் தம்மையே பிரதமராக அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமிப்பார் என பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மகிந்த ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ள மைத்ரிபால சிறிசேனவோ, நிச்சயமாக உங்களுக்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என தெரிவித்துள்ளது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சேவுக்கு மைத்ரிபால சிறிசேன எழுதிய கடித விவரம்:

நான் ஜனவரி 8 ஆம் நாள் வெற்றிபெற்றவுடன் நாடாளுமன்றத்தை கலைத்திருந்தால், சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் என்ன நடந்திருக்குமென எண்ணிப்பார்க்க முடியாது. 2005 ஆம் ஆண்டு நீங்கள் அதிபராகும் வரை கடந்துவந்த தீர்க்கமான பயணங்களில் நான் உங்களுக்காக முன்னின்றேன் என்பதை மறக்கமுடியுமா? 2004 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் உங்களை பிரதமராக நியமிப்பதற்கு நான் எடுத்த முயற்சிகள் எவ்வாறானதென்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அன்று உங்களை பிரதமராக்க விடாமல் ஜேவிபியின் விமல் வீரவன்ச முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிராக நான் உங்களுக்காக முன்னின்றேன்.

2005 ஆம் ஆண்டு உங்களை அதிபர் வேட்பாளராக நியமிக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் போது உங்களுக்காக முன்னின்றேன். எனினும் இன்று உங்களிடமிருக்கின்ற பலர் 2005 ஆம் ஆண்டு நீங்கள் அதிபர் தேர்தலில் தோற்றிருந்தால் ஐ.தே.க.வுடன் இணைவதற்கு தயாராகவிருந்தனர்.

சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான எனக்கும் உங்களுக்குமிடையிலான நீண்டகால அரசியல் உறவு பாதிப்படைந்தமைக்கு பசில் ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாக அமைந்தன என்பது உங்களுக்கு தெரிந்த விடயம். மைத்திரிபாலவுக்கு எதிரான கொள்கையொன்றை பசில் பின்பற்றி என்னை தோல்வியடைந்த அரசியல்வாதியாக காட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் இறுதியில் உங்கள் குடும்பமே தோல்வியடைவதற்கு காரணமாக அமைந்தன.

பசில் ராஜபக்ச எனது அரசியலுக்கு தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் அந்த விடயத்தில் தலையிட்டு எனது சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு உங்களால் முடியும் என நான் எதிர்பார்த்தேன். எனினும் நான் எதிர்பார்த்த நேர்மைத்தன்மையை நீங்கள் 2014 நவம்பர் 21 ஆம் நாள் வரை வெளிக்காட்டவில்லை.

கடந்த ஏழு மாதங்களில் நான் உங்களை மூன்று முறை சந்தித்தேன். நீங்கள் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்திடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினீர்கள். அனைத்து சந்திப்புக்களின் போதும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் தயாராகவிருப்பதாகவும் கூறினேன். எனினும் நீங்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டாலும் சுதந்திரக்கட்சியின் தலைவரான எனது தலைமை கேள்விக்குறியாகிவிட்டது.

நீங்கள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் கடந்த தேர்தலில் என்னுடன் செயற்பட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு சுதந்திரக்கட்சியை பெரிய நம்பிக்கை பாதையில் கொண்டு சென்றிருப்பேன். தேர்தலில் நீங்கள் போட்டியிடக் கூடாது என நான் கூறியிருந்தாலும் அரசியலில் இருந்து உங்களை முழுமையாக அகற்றும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. உங்களுக்காக பொருத்தமான தகுதியான அரசியல் அமைப்பு ரீதியான ஒரு பதவியை வழங்குவதற்கு நான் முன்வந்திருந்தேன்.

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் இனவாதத்தை உருவாக்கி விருப்பு வாக்கினைப் பெற முயற்சிக்கும் ஒருகுழுவினர் அல்லவா? இவர்கள் உண்மையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அல்ல. அவர்களுக்குத் தேவையானவாறு கட்சியை இயக்குவதற்கு இடமளிக்க முடியாது. நீங்கள் அதிபராக இருக்கும்போது இந்த நாட்டில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என இனங்கள் இல்லை என அடிக்கடி கூறியிருந்தீர்கள்.

எனினும் கடந்த அதிபர் தேர்தல் முதல் ஓகஸ்ட் 12 ஆம் நாள் வரை நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களும் இனவாதத்தையே பரப்பினீர்கள். நான் வணங்கும் பௌத்த தர்மம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் இனவாதத்தை எதிர்க்கின்றன. அதனை அனுமதிக்கவில்லை.

மேலும் இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் குடிமக்கள் என்னில் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். ஆகஸ்ட் 17 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சியை நான் வழிநடத்தியிருந்தால் வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு நம்பிக்கையை எமது கட்சி பெற்றிருக்கும்.

21 ஆம் நூற்றாண்டின் சவால்களை வெல்வதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய சந்தர்ப்பத்தில் இனவாதத்தை உருவாக்குவதற்கு முயற்சிப்பது கட்சிக்கும் நாட்டுக்கும் செய்யும்

உங்களுக்குள் எஞ்சியிருக்கும் இறுதி அரசியல் இரத்தத்துளியையும் உறிஞ்சி அருந்துவதற்கு உங்களை சுற்றியுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர். உங்களின் பண்புகளைப் பாடிக்கொண்டிருக்கும் இந்த குழுவினர் எனக்கு இரகசிய தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியும் தூது அனுப்பியும் பொதுத் தேர்தலின் பின்னர் என்னுடன் அரசியல் செய்வதற்கு தயாராகவுள்ளதாக கூறிவருகின்றனர்.

உங்களுக்கு முன் இருந்த அதிபர்கள் செய்ததை போன்று நீங்களும் இரண்டு தடவை பதவிக்குப் பின்னர் ஓய்வு பெற்றிருந்தால் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் அதிபராகவும் மற்றொருவர் பிரதமராகவும் பதவி பெற சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். எனினும் தற்போதும் பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை தட்டிப்பறிப்பதற்கு நீங்கள் முயற்சிப்பது தெளிவாகிறது. அவர்களுக்கு தற்போதாவது உரிய இடம் கிடைக்க வேண்டாமா?

எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கான குறைந்தபட்ச தேவையான 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றால் இதுவரை பிரதமர் பதவியை பெறமுடியாத சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரே பிரதமராக வேண்டும் என நான் நம்புகிறேன். ஒருவேளை 113 ஆசனங்களைப் பெறமுடியாமல் அதற்கு அண்மித்த ஒரு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றால் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான எஞ்சிய ஆசனங்களைப் பெறுவதற்கான தலையீட்டை நிறைவேற்று அதிபர் என்ற வகையில் நான் மேற்கொள்வேன்.

அப்போதும் கூட பிரதமராக உங்களை பிரதமராக நியமிக்கமாட்டேன். கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரே பிரதமராக பதவிபெறவேண்டும். பிரதமர் பதவியைப் பெறுவதற்கான அனுபவமுள்ள அரசியல் தூரநோக்கு கொண்ட பல தலைவர்களைக் கொண்ட ஒரே கட்சி சுதந்திரக்கட்சியாகும்.

குறிப்பாக நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, சமல் ராஜபக்ச அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி, சுசில் பிரேமஜயந்த அனுர பிரியதர்சன யாப்பா போன்ற மூத்த உறுப்பினர்களில் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு உங்கள் ஆதரவையும் நெகிழ்வுத்தன்மையையும் தியாகத்தன்மையைும் ஆசிர்வாதத்தையும் வெளிக்காட்ட வேண்டும் என நாட்டினதும் மக்களினதும் சார்பாக கோரி நிற்கின்றேன்.

எனவே எதிர்வரும் தேர்தல் நாள் வரை இதயத்தினாலன்று புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுமாறும் இனவாதத்தை பரப்பும் கூற்றை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு மைத்ரிபால சிறிசேன தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
Sri Lanka's President Maithripala Sirisena reiterated that the former president Mahinda Rajapaksa will not be appointed as the Prime Minister even if the Sri Lanka Freedom Party wins a majority of seats at the upcoming parliamentary elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X