For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் ஒழிந்தது மகிந்த ராஜபக்சே சகாப்தம்... போர்க்குற்ற விசாரணையில் சிக்குவாரா?

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சே என்கிற நபரின் சகாப்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதிபர் பதவியை பறிகொடுத்த நிலையில் பிரதமர் பதவி மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற மகிந்த ராஜபக்சேவின் ஆசை நிராசையாகிப் போய்விட்டது..இனி இலங்கை அரசியலில் மகிந்த ராஜபக்சேவின் சகாப்தம் என்பது முடிந்த கதையாகிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இலங்கையில் 2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளராக களமிறங்கியவர் மகிந்த ராஜபக்சே. அதுவரை சுதந்திரக் கட்சியில் தலைமை ஏற்றிருந்த சந்திரிகாவை அரசியல் களத்தில் இருந்து ஓரங்கட்டி ஒழித்துவிட்டு ராஜபக்சே தேர்தல் களத்தில் நின்றார். அத்தேர்தலில் வென்ற உடனேயே இலங்கையின் நிரந்தர அதிபராக தம்மை வெளிப்படுத்திக் கொண்டு ஆட்டம் போட ஆரம்பித்தார். இலங்கை அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக மகிந்த ராஜபக்சே குடும்பமே நடத்தியது. மிக முக்கியமான பாதுகாப்புத் துறை செயலராக சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவை நியமித்தார்.

Sri Lankans Reject Ex-President Mahinda Rajapaksa in Election

2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தை தொடங்கினார் ராஜபக்சே. அவரே எதிர்பார்க்காத வகையில் சர்வதேச நாடுகள் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக ராஜபக்சேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டின. இதனால் 2009ஆம் ஆண்டு மே 18-ந் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்சே வெல்ல முடிந்தது.

இதன்பிறகு சொல்லத்தான் வேண்டுமா ராஜபக்சேவின் கொட்டத்தை... இத்தனைக்கும் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை சிறையிலடித்து ஆட்டம் போட்டார் ராஜபக்சே.. ராஜபக்சே குடும்பத்தின் ஊழல்கள் தென்னிலங்கை சிங்கள மக்களாலேயே சகிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது.

இலங்கையின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான அரசியல் படுகொலைகளை ராஜபக்சே கும்பல் அரங்கேற்றி கொடூர தாண்டவமாடியது. அத்துடன் மீண்டும் மீண்டும் அதிபர் பதவியை தக்க வைப்பதற்கான அத்தனை சித்து விளையாட்டுகளையும் நடத்தி இலங்கையின் நிரந்தர அதிபராகிவிட வேண்டும் என்ற அதிகார வெறியுடன் காய்களை நகர்த்திக் கொண்டே இருந்தார் மகிந்த ராஜபக்சே.

அதிகாரமமதையின் உச்சத்துக்கு போன மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல சொந்தக் கட்சியினரே கலகக் குரல் எழுப்பினர். இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை வீழ்த்த ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுதிரண்டு மகிந்த ராஜபக்சே கட்சியின் பொதுச்செயலராக இருந்த மைத்ரிபால சிறிசேனவையே அதிபர் வேட்பாளராக களமிறக்கின.

இதை எதிர்பார்க்காத மகிந்த ராஜபக்சே, இலங்கையில் ராணுவ ஆட்சிக்கும் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே மூலம் திட்டமிட்டார். ஆனால் மகிந்தவின் ஆட்டத்தை சகிக்காத அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவதையே விரும்பின. இதனையே தென்னிலங்கை சிங்கள மக்களும் வடகிழக்கு தமிழ் மக்களும் தேர்தலில் வாக்காக வெளிப்படுத்தினர்.

இதனால் வேறுவழியே இல்லாமல் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த உடனேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு கொழும்பை விட்டு வெளியேறி சொந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்தார் மகிந்த ராஜபக்சே. மைத்ரிபால சிறிசேன அதிபரான நிலையில் அம்பலத்துக்கு வந்தது ராஜபக்சே குடும்பத்து மெகா ஊழல்கள்..

ஆனாலும் பதவி ஆசை யாரைத்தான் விட்டது மகிந்தவை விட்டு விலக... இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரதமருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பிரதமர் பதவியை எப்படியும் கைப்பற்றிவிடுவது என்று கங்கணம் கட்டினார் மகிந்த ராஜபக்சே.

இதனால் 8 மாத வனவாசத்துக்குப் பின்னர் மீண்டும் தேர்தல் அரசியலில் குதித்தார் மகிந்த ராஜபக்சே. தென்னிலங்கை சிங்களர் வாக்குகளைப் பெற்றுவிடும் முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்தியதையே பிரசாரமாக முன்வைத்துப் பார்த்தார். சிங்கள பேரினவாதத்தைத் தூண்டுவதற்கு பகீர பிரயத்தனம் மேற்கொண்டார். இந்த யுக்தி ராஜபக்சேவை முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கணிசமான ஆதரவைத் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அதே நேரத்தில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக இடங்களைப் பெற்றாலும் கூட நிச்சயமாக மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கவே மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகளில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிதான் அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

அத்துடன் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்து 23 அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வியிருக்கின்றனர். இதில் தப்பிப் பிழைத்தது ராஜபக்சேதான். ஒரு நாட்டின் அதிபராக இருந்து பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு தற்போது வெறும் எம்.பி.யாகத்தான் மகிந்த ராஜபக்சே இருக்கப் போகிறார்.

இலங்கையின் செல்வாக்குமிக்க அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மகிந்த ராஜபக்சேவின் அதிகாரவெறியை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. அரசியல் சூழ்ச்சிகளால் இனி தலையெடுக்க நினைக்கலாம்.. ஆனால் மகிந்த ராஜபக்சேவின் அத்தியாயம் இலங்கையின் அதிகார அரசியலில் முடிந்து போய்விட்ட ஒன்றாக.. அவரை இனியும் நம்பிக் கொண்டிருக்க சொந்த கட்சியினரும் சிங்கள மக்களும் தயாராக இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

அதே நேரத்தில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை நிச்சயம் உலகத் தமிழர் அமைப்புகள் மிக வேகமாக முன்னெடுக்கும்.

ஆனால் ராஜபக்சே ஒரு சிங்களர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கேவும் மைத்ரிபால சிறிசேனவும் அவரை காப்பாற்றுவதற்காக கபட நாடகங்களையும் வெற்று உறுதிமொழிகளையும் சர்வதேச சமூகத்துக்கு தரக் கூடும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் எச்சரிக்கை.

மகிந்த ராஜபக்சே போன்ற இனப்படுகொலையாளர்களை சிங்கள தேசம் இனியும் பாதுகாக்காமல் தமிழர்களை மிருகங்களைப் போல வேட்டையாடிய ரத்த வெறிக்கான தண்டனை என்பது சர்வதேச நீதிமன்றத்தின் முன் போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் எதிர்பார்ப்பு...

English summary
Sri Lankan voters decisively rejected former President Mahinda Rajapaksa's comeback bid, election results showed on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X