டக்ளஸ் தேவானந்தாவின் சதியால் தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- ஆதரவாளர்கள் வரவேற்பு!
யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விடும் நடவடிக்கைக்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வருகிறது.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி கிடந்தன. மொத்தம் 105 மீன்பிடி படகுகள் கேட்பாரற்று கிடந்த நிலையில் திடீரென இலங்கை அரசு இவற்றை ஏலம் விடப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வை விட அபிவிருத்திதான் தேவை.. சொல்வது இந்தியாவுக்கான இலங்கை தூதர்!

தமிழகம் எதிர்ப்பு
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளை மீட்க வேண்டும் என்று மீனவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

டக்ளஸ் கோஷ்டி ஆதரவு
இந்நிலையில் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இலங்கை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா இது தொடர்பாக கூறியதாவது: தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு சில நாட்டுப்படகுகளும் இதனுள் இருக்கின்றன என அறிகிறோம்.

கைது செய்யனுமாம்
இலங்கையின் சட்டம் என்று வரும்போது நாட்டுப்படகு, விசைப்படகு என எல்லாம் ஒன்றுதான். இதனால் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அரசியல் செல்வாக்குள்ள தமிழ்நாட்டு முதலாளிகளே இழுவைமடி தொழிலை இங்கு ஊக்குவிக்கின்றனர். அவர்களது படகுகளே இதனால் பாதிப்படையும். பருத்தித்துறை தொடக்கம் மருதங்கேணி வரையிலான பகுதிகளில் பல நூறு படகுகளில் இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி வந்ததை கவனிக்க முடிந்தது. இதனால் உள்ளூர் மீனவர்கள் அச்சத்திலேயே தொழிலுக்குச் செல்லாமல் திரும்பி வந்து விட்டனர். அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அன்னராசா கூறினார்.

டக்ளஸ் தேவானந்தாவின் சதி
ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு சீனாவின் உதவிகளைப் பெற்று தந்தவர் டக்ளஸ் தேவானந்தா. இந்திய, ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனையை அமெரிக்காவிடமும் கொண்டு சென்றவர் டக்ளஸ். இருநாட்டு மீனவர் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்கி சீனாவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார் டக்ளஸ் தேவானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.