For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிபர் தேர்தல்: ராஜபக்சேவை எதிர்க்கும் மைத்ரிபாலவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3வது முறையாக போட்டியிடுகிறார்.

ராஜபக்சேவை எதிர்த்து அவரது சொந்த கட்சியைச் சேர்ந்தவரும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவருமான மைத்ரிபால சிறிசேனவை 35 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பொதுவேட்பாளராக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

TNA decides to support Maithri

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளித் தமிழர்களான மலையகத் தமிழர்கள் ராஜபக்சேவை ஆதரிக்கின்றனர். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களும் தமிழ் முஸ்லிம்களும் யாரை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஈழத் தமிழ் முஸ்லிம்களின் கட்சியான ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ், ராஜபக்சே அரசில் இருந்து வெளியேறி மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்தது. இதேபோல் பல ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பாக இன்று அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இதனை அறிவித்தார்.

மைத்ரிக்கு ஆதரவு ஏன்?

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஏன் ராஜபக்சவை வீழ்த்த வேண்டும்? என விளக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடம் உள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும், ஒழுங்கும் முன்னெப்போதுமில்லாத வகையில் சீரழிக்கப்பட்டுள்ளன. இதனால் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் பின்வருமாறு:

- நாடு சர்வதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி, அரசின் அனைத்து அதிகாரங்களையும், தன் கையில் வைத்திருக்கும் சர்வதிகாரியாக மாறிவருகிறார்.

அத்தோடு தான் நினைத்தபடி சட்டதிருத்தங்களைச் செய்து, மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சர்வதிகாரப் போக்கை தெளிவாகக் காட்டுகிறது.

- நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உச்சநீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் சுதந்திரமாக செயற்படமுடியாது அவலநிலை ஏற்பட்டுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம்

இந்த ஜனாதிபதி தேர்தல் வரையான முறையற்ற சட்டத் திருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே காட்டுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் 18 ஆவது சட்டத் திருத்திற்கு எதிராகவும் பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றப் பிரேரணைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததையிட்டு பெருமை கொள்கிறது.

அன்று 18 ஆவது சட்டத் திருத்திற்கு ஆதரவாக வாக்களித்து தவறு செய்தவர்களுக்கு தமது தவறைத் திருத்திக் கொள்வதற்காக ஓர் அரிய வாய்ப்பை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குகின்றது.

- ராஜபக்‌ச அரசால் நாடாளுமன்றம் மதிப்பிழந்துள்ளது. பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று அதனைப் பயன்படுத்தி நாட்டுக்குப் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இன்று எமது நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கைப்பொம்மையாக மாறிக்கிடக்கிறது.

- அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயதீன நியமனங்களை நேர்மையாகச் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்த அரசிலமைப்பின் 17 ஆவது சட்டத்தை மாற்றியதன் மூலம் உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணையகம், அரச சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார்.

இது நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

- நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதோச்சதிகாரமானது சுதந்திர ஊடகங்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் தகவல் பரிமாறும் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ராஜபக்சவின் சர்வதிகாரப் போக்கானது ஜனநாயகத்தை நலிவுறச் செய்து நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துல்லியமான கருத்தாகும்.

ராஜபக்‌ச அரசு எப்பொழுதும் தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழர் பிரச்சினைக்கு பிரிபடாத இலங்கைக்குள் நேர்மையானதும் சுதந்திரமானதும் நடைமுறைச் சாத்தியமானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஓர் அரசியல் தீர்வைக் காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அத்தீர்வு பற்றி எமது நிலைப்பாட்டை எழுத்து மூலமும், வாய் மூலமும் நாம் பகிரங்கமாக நாட்டுக்குத் தெரியப்படுத்தி வந்துள்ளோம். யுத்தத்திற்குப் பின்னரான ராஜபக்‌ச அரசானது தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தர முயலாதது காலத்தை வீணடிக்கும் கபடத்தனமான செயல்களையே செய்து வந்துள்ளது.

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. வீடுகளோ வாழ்வாதாரங்களோ பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை ராஜபக்‌ச அரசு ஆக்கிரமித்துள்ளது.

உச்ச நீதிமன்றம், மற்றும் நாடாளுமன்றத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை பொருட்படுத்தாத ராஜபக்‌ச அரசு இப்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டபடி காணிகளைச் சுவீகரித்து வருகின்றது. பாதைகளையும், பாலங்களையும் கட்ட கண்மூடித்தனமாக செலவிடப்பட்ட பெருந்தொகை கடன் பணம், வரி என்ற பெயரில் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்து நீண்ட காலமாகியும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த ராஜபக்‌ச அரசு உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இன்றும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

அவர்களுக்கு தகுந்த வாழ்வாதாரமோ வீடுகளோ இல்லை. போதுமான உணவோ சுயமரியாதையோ பாதுகாப்போ இன்றி அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக, பெண்களும், பிள்ளைகளும் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகின்றனர்.

யுத்தத்தால் இறந்தவர்களுக்கும் காயப்பட்டவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் எவ்வித இழப்பீடும் நீதியும் இன்னும் கிடைக்கவில்லை. ராஜபக்‌ச அரசு இனங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்குப்பதிலாக சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வணக்க ஸ்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களுக்கு இடமளித்து அத்தோடு நில்லாமல் தாம் அரங்கேற்றிய இன, மத, வன்செயல் தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கவும் முயன்றது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து 18 ஆவது திருத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு களமிறங்கியுள்ள பொது எதிராணி வேட்பாளரை நாம் வரவேற்கிறோம்.

பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாய் சமைத்துவமாய் சுயகௌரவத்துடன் வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படுவதற்கு சகல இன மக்களுடனும் முறையாக ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும். எனவே சர்வதிகாரத்தில் இருந்து எமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும் எமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ச அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.

இதற்காக அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களும் தமது வாக்குகளை அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு நாம் அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil National Alliance (TNA) has decided to extend support to Opposition Common Candidate Maithripala Sirisena at the Sri Lanka Presidential Elections, TNA Parliamentary Group Leader R. Sampanthan announced a short while ago in Colombo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X