For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு!

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் வியாபாரி, அவர் பொய் சொல்வதில் வல்லவர் என்று நாங்குநேரி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசி இருக்கிறார்.

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் வியாபாரி, அவர் பொய் சொல்வதில் வல்லவர் என்று நாங்குநேரி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசி இருக்கிறார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் 24-ந் தேதி நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதேபோல் இதே நாளில் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது.

நாங்குநேரி தொகுதியில் பிரதான கட்சியான அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அந்த தொகுதியில் தொண்டர்கள் பலர் இருப்பதால் அதிமுகவினர் உற்சாகமாக களமிறங்கி வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் மிக தீவிரமாக ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

Stalin is political lier says TN CM Edappadi Palanisamy in Nanguneri by-election campaign

தற்போது நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் களநிலவரத்தை மொத்தமாக புரட்டி போட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரம் மூலம் சாமர்த்தியமாக எதிர்கொண்டு உள்ளார்.

அவரின் பிரச்சாரம் கூட்டம் அலைமோதி, பெரும் வரவேற்போடு நடந்து வருகிறது. ஏர்வாடி டவுன், திருக்குறுங்குடி டவுன், மாவடி ஆகிய இடங்களில் தமிழ்நாடு முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பொது மக்களிடம் வாக்குச் சேகரித்து பேசினார்.

அதில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல் வந்தது என்பது அனைவருக்கு நன்றாக தெரியும். இது திணிக்கப்பட்ட தேர்தல். இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் அடிப்படையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியினருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். அவர் வசிப்பது சென்னையில், அவர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகிப்பது காஞ்சிபுரம் மாவட்டம். இப்படி மாறி மாறி இருப்பவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அவர் மக்களுக்கு என்ன நன்மை செய்வார். இதை வாக்காளர் பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி. நாராயணன் இந்த மண்ணின் மைந்தர். அனைத்து கிராமப் பகுதிகளையும் நன்கு அறிந்தவர்.

Stalin is political lier says TN CM Edappadi Palanisamy in Nanguneri by-election campaign

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். எனவே, அவருக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசி வருகிறார். நான் எதற்கு பொய் சொல்ல வேண்டும். நான் சொல்வது அனைத்தும் உண்மை தான். எதை மக்களுக்குச் செய்ய முடியுமோ அதைத்தான் சொல்கிறேன். ஆனால் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, அதன் மூலம் வெற்றி பெற்று விடலாம் எனக் கனவு காண்கிறார்.

அது ஒரு போதும் நடக்காது. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால், மெய் திரு திரு என முழிக்கும் என்று கூறுவார்கள். அதைப் போலத்தான் திரும்ப திரும்ப பொய்யான வாக்குறுதிகளை மக்களிடத்தில் எடுத்துக் கூறி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். பொய் கூறிவதிலே வல்லவர். அவரை அரசியல் வியாபாரியாகக் கூட கருதலாம். ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் வங்கிகளில் ஐந்து சவரனுக்கு கீழ் அடமானம் வைத்துள்ள நகைகள் மீட்டுத்தரப்படும் எனவும், விவசாயிகளுக்கு மாதம் ரூ.6000 என ஒரு வருடத்திற்கு ரூ.72,000 வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ஆனால், மேலேயும் ஆட்சிக்கு வரவில்லை, கீழேயும் ஆட்சிக்கு வரவில்லை மக்கள் தி.மு.க.வை தொங்கலில் விட்டு விட்டார்கள்.

கடந்த முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் என்ன செய்தார்கள் என்று ஸ்டாலின் கேட்டு வந்தார். ஆனால் இப்போது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சார்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து இதுவரை என்னென்ன பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள் எனச் சொல்ல முடியுமா?

முத்தலாக் தடைச் சட்டம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வந்த போது, அதை எதிர்த்தது அண்ணா தி.மு.க. மக்கள் தான் பெரிது என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அந்த கொள்கையை மாற்ற முடியாது. பதவிக்காக கொள்கையை மாற்றும் கட்சி தி.மு.க. பச்சோந்தி போல உடனுக்குடன் நிறம் மாறும் கட்சி தி.மு.க. என்று கூட சொல்லலாம். இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக இருப்பது அதிமுக அரசு. இஸ்லாமிய பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.6 கோடி நிதி உதவி வழங்கிய அரசு அதிமுக அரசு.

பத்தாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் உருது மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கிய அரசு அதிமுக அரசு. காஜிகளுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.20,000 என 28 மாவட்ட காஜிகளுக்கு வழங்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சிக்கு 5400 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு 40 கிலோ சந்தனக்கட்டை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இது போன்று எண்ணற்ற சலுகைகளை இஸ்லாமிய பெருமக்களுக்கு வழங்கி வரும் அரசு அதிமுக அரசு.

Stalin is political lier says TN CM Edappadi Palanisamy in Nanguneri by-election campaign

மத்திய நிதியமைச்சராக .ப.சிதம்பரம் இருந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு என்ன நிதியைக் கொடுத்தார். எந்த திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். அவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்கி இருக்க முடியும். ஆனால், அவர் நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ ஒரு போதும் சிந்தித்தது இல்லை. பொதுமக்களை மறப்பவர்கள் காங்கிரஸ், தி.மு.கவினர் ஆவார்கள். 1,75,000 கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.கவைச் சேர்ந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருந்துள்ளார்கள்.

அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டிருந்தாலும். அந்த தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வந்தால் தான் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். கண்ணுக்குத் தெரியாத காற்றிலே விஞ்ஞான ரீதியாக ஊழல் புரியும் கட்சி தி.மு.க. ஊழல் என்றாலே தி.மு.க. தான். தமிழ்நாட்டில் ஊழலுக்கு வித்திட்டவர்கள் தி.மு.கவினர் தான் என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.

118 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே ஆட்சி அமைக்கலாம். 2017ஆம் ஆண்டு 122 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். இந்த அரசு 10 நாட்கள் தான் இருக்கும், 1 மாதம் தான் இருக்கும் என ஸ்டாலின் கூறிவந்தார். ஆனால் 2 ஆண்டுகள் 8 மாதம் இந்த அரசு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்துள்ளது. சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்த போது அதை முறியடித்தது அ.இ.அ.தி.மு.க.

தி.மு.கவினரால் அ.இ.அ.தி.மு.கவில் உள்ள ஒரு தொண்டனைக் கூட தொட்டு பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசி இருக்கும் போது அ.இ.அ.தி.மு.கவை எவராலும் ஒன்றும் செய்து விட முடியாது. ஸ்டாலின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பல முன்னாள் அமைச்சர்கள் மீதி ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கிறது.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என தி.மு.க. அரசு மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கழக நிர்வாகிகளும், பொது மக்களும் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளதால், அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.கவில் வாரிசு அரசியல் நிலவி வருகிறது. தந்தை, அவருக்கு பிறகு அவரது மகன், தற்போது பேரன் என தொடர்ந்து அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களே பதவியில் இருக்கிறார்கள். மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த ஆட்சியில் மகன், பேரன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாக இருந்து பதவி சுகத்தை அனுபவிப்பார்கள்.

Stalin is political lier says TN CM Edappadi Palanisamy in Nanguneri by-election campaign

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகம் உள்ள இயக்கம். ஸ்டாலின் பதவி வெறி பிடித்து பேசுகிறார். அ.இ.அ.தி.மு.க. கட்சியின் மீதும், இந்த அரசின் மீதும் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளைக்கூறி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். ஆனால், நாங்கள் அவ்வாறு இல்லை. மக்களுக்காக உருவான இயக்கம் அண்ணா தி.மு.க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காட்டிய வழியில் லட்சியப் பயணத்தை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவிலேயே மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் தான். வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன். 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.5.80 செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 16,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு தேவை 15,500 மெகா வாட் மின்சாரம் இருந்தால் போதுமானது.

ஜெயலலிதா அரசால் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தேவை என்பதை கருத்திலே கொண்டு ஜெயலலிதா அரசு 12,524 ஊராட்சிகள் 528 பேரூராட்சிகளில் ரூ.65 கோடி செலவில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகையான விளையாட்டு உபகரணங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைப்பற்றி பேசி வருகிறார்.

இவர்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் கூற விரும்புகிறேன். ஜெயலலிதா அவர்கள் எதிர்கட்சித்தலைவராக இருந்தார்கள். ஓர் பெண் என்று கூட பாராமல் சட்டமன்றத்தில் அவரை அவமானப்படுத்தினார்கள். சட்டமன்றத்திலேயே ஒரு எதிர்கட்சி தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்தது என்பதை ஸ்டாலினுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தி.மு.க. ஆட்சியின் போது அப்பாவி மக்களிடமிருந்து, தி.மு.கவினர் நில அபகரிப்பு செய்திருந்தார்கள். ஜெயலலிதா அவர்கள் 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க தனிப் பிரிவினைஏற்படுத்தி, சம்மந்தப்பட்டவர்களிடம் அவர்களது நிலங்களை பெற்றுத்தந்த அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரசு மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. பிரசவ காலத்தில் குழந்தைகளின் இறப்பு சதவீதமும், கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு சதவீதமும் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே குழந்தை இறப்பு சதவீதம் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பிரசவித்த குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளர வேண்டும் என்பதற்காக 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 4 வருடங்களாக தேசிய அளவில் சிறந்த மாநில விருது பெற்றுள்ளது. 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்தவும், அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாகவும், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவிடவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குறுங்குடி பேரூராட்சியில் கால் நடை மருத்துவமனை வேண்டும் என்றும் நெல் கொள்முதல் நிலையங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கூட்டுறவு பண்டக சாலைக்கு புதிய கட்டடங்கள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளீர்கள்.

இந்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். திருக்குறுங்குடி பேரூராட்சி பெரிய குளம் ரூ.68 லட்சம் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். அதே போன்று வடக்குப்பையன் குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும், பெல்லோசிப் குடியிருப்பு வாசிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகள், மாவடியில் காய்கறி, பழங்கள் குளிரூட்டும் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், செங்கனாங்குறிச்சி கால்வாய் 12 மடைகளை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி தரம் வேண்டும் எனவும், களக்காடு வெட்டேரி கால்வாயில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளீர்கள்.
உங்கள் கோரிக்கை அனைத்தும் இத்தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வந்து திரு. ரெட்டியார்பட்டி வி.நாராயணன் அவர்கள் நிச்சயம் நிறைவேற்றித்தருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட, ஜெயலலிதா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், என்று பிரச்சாரம் செய்துள்ளார்.

திமுகவை முதல்வர் பழனிசாமி மிக கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வரின் இந்த பிரச்சாரமும் அதற்கு கிடைத்த வரவேற்பும், திமுக தரப்பை கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X