ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!
சிட்னி: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார்.
டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார். உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு 46 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்தான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 90 களில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

பேட்டிங் ஆல் ரவுண்டர்
பேட்டிங் ஆல் ரவுண்டரான இவர் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதேபோல் 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார். 14 டி 20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் இருந்த ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2012ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் மொத்தமாக ஓய்வு பெற்றார்.

கார் விபத்து
இந்த நிலையில் டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார். சில மணி நேரங்களுக்கு முன்பு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் ஆஸ்திரேலியாவின் ஹெர்வி ரேஞ்ச் ரோடு பகுதியில் செல்லும் போது விபத்துக்கு உள்ளானது. இவரின் கார் வலையில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பல முறை உருண்டு, புரண்டு விபத்துக்கு உள்ளானது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம் கிரிக்கெட் உலகை உலுக்கி உள்ளது. இவருக்கு வெறும் 46 வயதே ஆகிறது. உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷென் வார்னே மாரடைப்பு காரணமாக பலியானார். இப்போது இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேரும் ஆஸ்திரேலிய அணியில் ஒரே சமயத்தில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனை
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 1462 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 5088 ரன்கள் எடுத்துள்ளார். டி 20 போட்டிகளில் 337 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் 24 விக்கெட் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 133 விக்கெட் எடுத்துள்ளார். டி 20 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.