தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டதால் விரக்தி.. ஹோட்டலுக்கு தீ வைத்த பெண்.. எங்கே தெரியுமா?
சிட்னி: கொரோனா முதல் அலையை மிக எளிதாக சமாளித்த ஆஸ்திரேலியா, டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாக கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கணிசமாக இருந்தாலும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியில் பாதிப்பு அதிகமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
இது போதாதென்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவிலிருந்து சிட்னிக்கு வந்த இரண்டு பயணிகளிடம் ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூரில் ஷாக்.. இஎஸ்ஐ மருத்துவமனையில் 1 வருடம் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி சடலங்கள்

ஓமிக்ரான் வைரஸ்
இதுவரை ஆஸ்திரேலியாவில் மொத்தம் 3 பேரிடம் ஓமிக்ரான் வைரஸ் கண்டறிப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள். அவர்களிடம் எந்த அறிகுறியும் காணப்படவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது ஓமிக்ரான் காரணமாக கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பெண் செய்த செயல்
ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 9 நாடுகளில் இருந்து ஐந்து விமானங்களில் 141 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு இருந்ததால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் ஹோட்டலை தீ வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது.

தனிமையில் வைக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரம்
குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் வடகிழக்கு நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள 11 மாடி ஹோட்டலில் 31 வயது பெண்ணும், அவருடைய இரண்டு குழந்தைகளும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிக தனிமையில் வைக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த அவர் ஹோட்டலுக்கு தீ வைத்தார்.

பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
இதனால் ஹோட்டலில் இருந்த 160-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நல்ல வேளையாக யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அதிகாரிகள், ' அந்த பெண்ணை ஹோட்டலுக்குள் கட்டாயமாக இரண்டு வார தனிமைப்படுத்தலில் இருக்க சொன்ன நிலையில் வெறும் 2 நாட்களில் அவர் ஹோட்டலுக்கு தீ வைத்துள்ளார். ஹோட்டல் ஊழியர்களுக்கு அவர் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தினார்' என்று கூறியுள்ளனர்.