"உக்ரைனில் போர், ஐரோப்பாவில் நெருக்கடி.. இக்கட்டான நேரத்தில் செக் வைக்கும் சீனா?" ஆஸ்திரேலிய பிரதமர்
சிட்னி: உக்ரைன் போர் 2ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சீனாவின் திட்டம் குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இப்படி முழு வீச்சிலான போரை ஆரம்பிக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர் 2ஆவது வாரமாக இப்போதும் தொடர்கிறது.
ரஷ்ய அதிபர் புதினின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும், போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
1 நிமிடம் எலான் மஸ்கையே.. திக்கி திணறடித்த ரஷ்யா.. மொத்த டீமையும் இறக்கிய Space X.. என்ன நடந்தது?

உக்ரைன் போர்
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கை வெறும் தொடக்கமாக மட்டும் கூட இருக்கலாம் என்றும் உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், இதே பாணியைப் பின்பற்றி சீனா கூட தைவான் மீது படையெடுப்பை நடத்த வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் இந்தப் போர் நடவடிக்கைக்குச் சீனா எப்படி அமைதியாக இருந்து ஆதரவு தெரிவிக்கிறதோ, அதேபோல சீனா போரை ஆரம்பிக்கும் போது ரஷ்யாவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன்
இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், "ரஷ்யாவுக்கு எதிராகச் சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சர்வதேச அமைதி மற்றும் இறையாண்மையைக் காக்க உறுதி பூண்டுள்ளதைச் சீனா நிரூபிக்க வேண்டும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையால் சீனாவை விட வேறு எந்த நாடும் இப்போது பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்காது. ஐரோப்பாவும் இப்போது சில நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் சீனா எடுக்கப் போகும் முடிவு முக்கியமானதாக இருக்கும்.

காப்பாற்றும் சீனா
ரஷ்யக் கோதுமை இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக ரஷ்யாவைத் தொடர்ந்து சீனா காப்பாற்றியே வருகிறது. மேலும், விசா மற்றும் மாஸ்டர்கார்டு சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலாகச் சீன நிறுவனமான யூனியன்பே தனது சேவையைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ரஷ்யாவைக் காக்கச் சீனா எடுத்து வரும் நடவடிக்கைகள் வரும் காலத்தில் சர்வதேச அளவில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.

அடுத்து சீனா?
கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனிப்போருக்கு இது புரியும். தென் சீனக் கடல் பகுதியை ராணுவ மயமாக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கி உள்ளது. தைவான் உடன் சீனாவின் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

சீனா அஸ்திரேலியா உறவு
சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாதுகள் ஆஸ்திரேலியாவில் இருந்து தான் சீனா இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு தொடர்ந்து சீனாவை விமர்சித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குச் சீனா அதிரடியாக வரியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.