வேலையை காட்டிய சீனா.. ஆஸ்திரேலியா போர் ஜெட்டில் திடீரென விழுந்த லேசர் ஒளி.. பரபர சம்பவம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் ராணுவ விமானத்தின் மீது சீனக்கடற்படையின் கப்பல் லேசர் ஒளியை செலுத்தி விவகாரம் வெளிவந்துள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனா இந்தியாவுடன் அடிக்கடி வாலாட்டுகிறது. இதேபோல் பிற நாடுகளை உளவு பார்ப்பது, வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்நிலையில் 2018 க்கு முன்பு தொழில் ரீதியாக நட்பு நாடுகளாக இருந்த சீனா, ஆஸ்திரேலியா இடையே பிரச்சனை ஏற்பட்டது. 2019 ல் தென் சீனக் கடலில் பறந்த ஆஸ்திரேலிய விமானங்கள் மீது சீனக்கப்பல்கள் லேசர் ஒளியை பாய்ச்சின. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
படுத்த படுக்கையாக இருந்த மனைவி.. மனநலம் பாதித்த மகள்.. கழுத்தை அறுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

மீண்டும் லேசர் ஒளி
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலியாவின் ராணுவ விமானத்தின் மீது சீன கடற்படை கப்பல் லேசர் ஒளியை செலுத்தியுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் இத்தகைய செயல் உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என அதிருப்தியை பதிவு செய்தார்.

நடந்தது என்ன
மேலும் சீனாவின் இத்தகைய செயலுக்கு ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛பிப்.,17ல் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் கடல் ரோந்துக்கான எங்கள் ராணுவ விமானம் பி 8ஏ போசிடான்(P-8A Poseidon) பறந்தது. சீனக் கடற்படைக் கப்பல் பிஎல்ஏ- என் (PLA-N) லேசர் ஒளியை விமானத்தில் செலுத்தியது. லேசர் ஒளியை பாய்ச்சிய கப்பல் இன்னொரு கப்பலுடன் சேர்ந்து அரபுரா கடல் வழியே கிழக்கு நோக்கி பவளக் கடல் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடும் கண்டனம்
சீனாவின் இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்குரியது. தொழில்சார் மற்றும் பாதுகாப்பற்ற இராணுவ நடத்தையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது பாதுகாப்புகள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தும்'' என கூறியுள்ளது. இந்த சம்பவமானது ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைக்கும் நியூ கினியாவின் தெற்கு கடற்கரைக்கும் இடையேயான கடலில் நடந்துள்ளது.

சீனா, ஆஸ்திரேலியா மோதல்
சீனா, ஆஸ்திரேலியா இடையே வர்த்தக ரீதியாக நல்ல உறவு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஹூவாய் 5G பிராட்பேண்ட் தொழில்நுட்பம் 2018 ல் தடை செய்ததில் இருந்து இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இதனால் கொரோனா பரவிய நிலையில் வைரஸின் பிறப்பிடம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தி வந்ததும் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.