"நிலவில் இருக்கிறது 800 கோடி பேருக்கான ஆக்சிஜன், ஆனால்.." கடைசியில் ட்விஸ்ட் வைத்த ஆய்வாளர்கள்
சிட்னி: நிலவில் இருக்கும் ஆக்சிஜன் குறித்து ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சில புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
பல ஆண்டுகளாகவே நிலவு குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது, செயற்கோளை அனுப்புவது போன்ற ஆய்வுப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நிலவில் நீர் மற்றும் ஆக்சிஜன் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலவில் ஆக்சிஜன் நிலை குறித்து ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

800 கோடி மனிதர்கள்
அதாவது நிலவின் மேல் அடுக்கில் மட்டும் 800 கோடி மனிதர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்குத் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் மேல் அடுக்கு ரெகோலித் என்ற பொருளால் ஆனது. இது சுமார் 45 சதவீதம் ஆக்ஸிஜனை கொண்டுள்ளது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது நிலவில் ஏராளமான ஆக்சிஜன் உள்ள நிலையிலும், அது வாயு வடிவத்தில் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் வளிமண்டலம்
இது தொடர்பாக ஆஸ்திரேலியா ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலவில் வளிமண்டலம் இருந்தாலும், அது மிகவும் மெல்லியதாக உள்ளது. மேலும், அதில் பெரும்பாலும் ஹைட்ரஜன், நியான் மற்றும் ஆர்கான் ஆகிய வாயுக்களே உள்ளன. மனிதர்கள் இந்த வாயு கலவையை வைத்துக் கொண்டு வாழ முடியாது" என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் கடந்த அக்டோபரில், நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறைகளில் ஆக்சிஜன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பறை தாதுக்கள்
பூமியில் கூட நம்மைச் சுற்றியுள்ள பல பறைகளில் இருக்கும் தாதுகளில் ஆக்சிஜன் இருக்கும். இப்போது இதேபோன்ற பறைகள் தான் நிலவிலும் கண்டறியப்பட்டுள்ளது. நிலவின் நிலப்பரப்பில் சிலிக்கா, அலுமினியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆக்சைடுகள் ஆகிய தாதுகளே அதிகம் உள்ளது. இந்த கனிமங்கள் அனைத்தும் ஆக்சிஜனைக் கொண்டிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இவை நமது நுரையீரலால் சுவாசிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Electrolysis முறை
அதேநேரம் நிலவில் காணப்படும் சிலிக்கா, அலுமினியம், இரும்பு மற்றும் பிற கனிமங்களிலிருந்து Electrolysis எனப்படும் மின்னாற்பகுப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்சிஜனை பிரித்து எடுக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்படும். நிலவில் சூரிய சக்தி மூலம் இந்தப் பணிகள் செய்தால் மட்டுமே இதை நிலையாக மேற்கொள்ள முடியும்.

உபகரணங்கள்
மேலும் இதற்குப் பெரிய தொழில்துறை உபகரணங்களும் தேவைப்படும் என்று ஆஸ்திரேலியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம், மின்னாற்பகுப்பு மூலம் ஆக்சிஜனை உருவாக்கும் செயல்முறையை மேம்படுத்த மூன்று சோதனை உலைகளை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்தது. இந்த உபகரணத்தை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு அனுப்பி சோதனை செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.