ஊரடங்குக்கு எதிர்ப்பு.. மாஸ்க் அணியாமல் வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.. ஆஸி.யில் பரபரப்பு!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா முதல் அலை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
ஆனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வைரசே அங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, கான்பெர்ரா நகரங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சிட்னி நகரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 163 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இதனால் சிட்னியில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை தவிர பிற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை. இந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சிட்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் மாஸ்க் அணியாமல் வீதிகளில் திரண்டனர்.

மக்கள் போராட்டம்
சிட்னியின் விக்டோரியா பூங்காவிலிருந்து மத்திய வணிக மாவட்டத்தின் டவுன்ஹால் வரை பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். சுதந்திரம் வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியடி அவர்கள் பேரணியாக சென்றனர். சிட்னி மட்டுமில்லாது பிற ஆஸ்திரேலிய நகரங்களிலும் மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டனர். மெல்போர்னில் மாஸ்க் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு 'சுதந்திரம்" என்று கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

போலீசார் கைது செய்தனர்
தற்போது ஊரடங்கு காரணமாக எந்த வித போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி கொடுக்காததால், விதிமுறைகளை மீறி திரண்டவர்களை போலீசார் கைது செய்தனர். ''சுதந்திரமான பேச்சு மற்றும் அமைதியான கூட்டத்தின் உரிமைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் இப்போது மக்கள் கூட்டமாக திரள்வது பொது சுகாதார உத்தரவுகளை மீறுவதாகும்'' என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண போலீசார் தெரிவித்தனர்.

உரிமை உண்டு
இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண அமைச்சர் பிராட் ஹஸார்ட் கூறுகையில், நாம் ஒரு ஜனநாயகத்தில் வாழ்கிறோம், பொதுவாக நான் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமைகளை ஆதரிப்பவன். ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்' என்று கூறினார்.