சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தேதி அறிவித்தபொழுது உங்கள் மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டபொழுது நான் முதன் முதலாக மனதார பகிர்ந்துகொண்டவர்கள் எனது அன்பு பெற்றோரும், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் எனது குரு நவரட்ணம் ரகுராம் ஆசிரியரும் என்கிறார் ஹரிஷ்ணா பெருமையோடு.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

உயர்தர தேர்வில் ஒவ்வொரு பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரினால் கௌரவிக்கப்படுவது மரபு. அதற்கமைய இவர்களிற்கான பாராட்டு விழா புதன்கிழமை (12/12/18) அன்று UNSW பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சான்றிதழ்களை பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்திருந்தார்.

வீட்டிலும், வெளியிலும் தமிழ் நண்பர்களுடன் இயன்றளவு தமிழில் பேசுங்கள் என இளையோர்களிற்கு அறிவுரை கூறும் இவர், தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்திய பெற்றோர்களிற்கும் நன்றிகளை கூறத் தவறவில்லை. தனது நண்பர்களும், ரகுராம் ஆசிரியரும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் இந்த நிலையில் நிற்பதாக பெருந்தன்மையோடு கூறுகின்றார். மாநிலத்தில் தேர்வு எழுதிய 32மாணவர்களில் 20பேர் அதியுயர் சித்தி பெற்றது பெருமையானா விஷயம். பாடசாலைக்கு அப்பால் பிரத்தியேகமாக இலவச தமிழ் வகுப்புக்களை உயர்தர மாணவர்களிற்கு நடாத்திய ஆசிரியர் நவரட்ணம் ரகுராமால், ஒன்பது மாணவர்களில் இருவர் முதலாம், இரண்டாம் இடங்களில் வந்திருப்பதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் அதியுயர் சித்தி பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹரிஷ்ணா வழங்கிய பேட்டியை பாருங்கள்.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: பரீட்சை திணைக்களம் (NESA) உங்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது.

பதில்: அடக்க முடியாத ஆனந்தம். அந்தச் செய்தியை கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. இது கனவா? நனவா? என்று என்னையே பல தடவைகள் கேட்டேன். அந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

கேள்வி: இந்த தேர்வு பெறுபேறை எதிர்பார்த்தீர்களா?

பதில்: எனது திறமைகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், மற்றைய மாணவர்களின் திறமையை நான் அறியவில்லை. அத்தோடு, இந்த வருடம் வழமையையும் விட மிகக் கடினமாக படித்ததால் இந்த வருடமும் வேறு பள்ளி மாணவர்கள்தான் அதியுயர் சித்தி பெறுவார்கள் என்று நினைத்தேன். அதனால், இந்த செய்தி எதிர்பார்க்காததுதான்.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: இந்த மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள்?

பதில்: இந்த செய்தி கேட்டவுடன் எனது நண்பர்கள் (அருகில் இருந்த) பலரிடம் சொல்லி விட்டார்கள். ஆனால், நான் முதன் முதலாக மனதார பகிர்ந்து கொண்டவர்கள். எனது அன்பு பெற்றோர்களும் தந்தை ஸ்தானத்தில் இருக்கின்ற எனது குரு நவரட்ணம் ரகுராம் மாமா தான்.

கேள்வி: உங்களின் வெற்றிக்கு காரணமானவர்கள் யார்?

பதில்: எனது வெற்றிக்கு காரணமானவர்கள் எனது பெற்றோர், ஆசியர்கள் மற்றும் நண்பர்கள்தான். ஊக்கமளித்த பெற்றோரும் கல்வி புகட்டிய நண்பர்களும் ஆசிரியர்களும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்தார்கள். இவர்களிலும் முக்கிய பங்கை வகிக்கும் ஒருவர் ரகுராம் மாமா.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: பெற்றோரின் ஊக்கம் எந்தளவில் உங்களை உந்தியது?

பதில்: எனக்கு என்மீது நம்பிக்கை இல்லாத போது எனது பெற்றோர் தான் உந்துதல் கொடுத்தார்ககள். என்னை தமிழ்ப் பாடசாலையில் சேர்த்து, தமிழ் மீது ஒரு விருப்பத்தை வரவழைத்தவர்களே அவர்கள்தான். மற்றும், தமிழ்ப் பள்ளியை விட்டு ஆசிரியர் ரகுராம் மாமா விலகிச் சென்ற போது எனது பெற்றோர்கள்தான் மீண்டும் அவரது பிரத்தியேக வகுப்புக்களில் சேர்த்துவிட்டார்கள்.

கேள்வி: நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

பதில்: தமிழோடு ரசாயனத்தையும் ஒரு பாடமாக இந்த வருடம் எடுத்தேன். அதனால் மற்றவர்களைப் போல் முழுக் கவனத்தை தமிழில் மட்டும் செலுத்தாமல், பாதி கவனத்தை இரசாயனவியலிலும் செலுத்த வேண்டியதாக இருந்தது. அத்தோடு, பரீட்சையின் இறுதி நாட்களில் அதிகளவு நேரம் தமிழ்ப் பாடசாலையில் செலவிடப்பட்டது. அதனால் சுயமாக தமிழ்ப் பரீட்சைக்கு என்னை தயார் செய்ய கடினமாக இருந்தது. அதனால், இதுதான் மிகப்பெரிய சவால் என நினைக்கிறேன்.

கேள்வி: ஆஸ்திரேலியாவில் உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுப்பதால் என்ன நன்மை?

பதில்: எனது இயல்பான திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்தது. அத்தோடு. எனது பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சமூகம் மத்தியில் பெருமை தேடிக் கொடுப்பதே மிகப் பெரிய நன்மையென கூறலாம். இது எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கோ, வேலைக்கோ விண்ணப்பிக்கும் பொழுது தமிழ் நிச்சயமாக உதவும் என நம்புகிறேன்.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: எதிர்காலத்தில் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: தமிழை விரும்பிப் பயிலுங்கள். தமிழ் மீது பற்று இல்லாவிட்டால் தமிழை கற்பது வீண். ஆனால், இளமையில் தமிழை கற்றிருக்கலாமே என்ற எண்ணம் எதிர்காலத்தில் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு, வீட்டிலும் வெளியே தமிழ் நண்பர்களுடனும் இயன்றளவுக்கு தமிழில் பேசுங்கள். தமிழ் உச்சரிப்பும் பிழைக்காமல் இருந்தால் உங்களுடைய சொற்களஞ்சியமும் பெருகும். தமிழை எழுதுவதும் சுலபமாக இருக்கும்.

கேள்வி: நீங்கள் வாய்மொழி பரீட்சைக்கு எடுத்த தலைப்பு 'நட்பு'. ஆகவே, நண்பர்கள் எவ்வாறு உங்கள் வெற்றிக்கு உதவினார்கள்?

பதில்: வஞ்சகமின்றி எனக்காக பலதை அர்ப்பணித்த நண்பர்களும் எனது வெற்றிக்கு காரணமானவர்கள். அவர்களுடன் ஒவ்வொரு முறை அளவளாவும் போதும் புதிய புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். எனக்காக அவர்களும், நான் அவர்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளோம். அத்தோடு, நானும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவன் போல் என்னை அரவணைத்தார்கள். ஆகவே, எனது நண்பர்களும், ரகுராம் மாமா வும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளோம். இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் நான் இந்த நிலையில் நிற்கின்றேன்.

கேள்வி: இறுதியாக தமிழ் சார்ந்த உங்கள் எதிர்கால லட்சியமென்ன?

பதில்: தமிழை வளர்ப்பது எந்தளவு முக்கியமோ தமிழை பரப்புவதும் அந்தளவு முக்கியம்தான். எனது நீண்ட கால ஆசை என்னவென்றால், எனது நண்பர்களுடன் ஒன்றிணைந்து சமூக ஊடகங்கள் மூலமாக தமிழின் புகழைப் பரப்புவதுதான். உதாரணமாக, வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக புதிய தலைமுறைக்கு தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டலாம். அத்தோடு, படவரி, முகநூல் போன்ற வலைத்தளங்களினூடாகவும் தமிழைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கலாம் என நம்புகின்றேன். அத்தோடு, பிற இனத்தை சேர்ந்தவர்களிடம் நாட்டம் இருந்தால், தமிழை கற்றுக் கொடுக்க முயற்சி செய்வேன். ஆதலால், தமிழை நான் பரீட்சை முடிந்தவுடன் கைவிடப் போவதில்லை. தமிழை வளர்க்கவும் பரப்பவும் என்னால் இயன்றளவுக்கு முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
There are two students who achieved 1st and 2nd places in the New South Wales state,Australia for the High school Tamil language exam 2018. This is a big achievement for them as they are born and bread in this country. They scored 95 and 94 marks in Tamil language and 1st place student was honoured by the education minister yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X