For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுக்க மந்த நிலை, பருவமழையும் பற்றாக்குறை.. அப்படியும் பொருளாதார வளர்ச்சியில் கலக்கும் தமிழகம்

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட மழை பற்றாக்குறை மற்றும் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு, மாநிலத்தின் சில பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியிருந்த போதிலும், 2018-19 ஆம் நிதியாண்டில், தமிழகம், 8.17% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 6.81% என்ற தேசிய வளர்ச்சி விகிதத்தைவிட, அதிக அளவில் இருப்பதுதான். இதற்காக, முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.

Tamilnadu records good growth rates despite overall economic slowdown

வடகிழக்கு பருவமழையின் போது (அக்டோபர்-டிசம்பர்), மாநிலத்தின் இயல்பான மழை அளவு, 44 செ.மீ.. ஆனால், சுமார் 33 செ.மீ அளவுக்குதான் தமிழகம் மழையைப் பெற்றது. இது 24% பற்றாக்குறையாகும்.

வழக்கமாக இந்த, பருவமழை மாநிலத்தின் ஆண்டு சராசரி மழையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்ய கூடிய கால கட்டம் ஆகும். அதில் பற்றாக்குறை ஏற்பட்டது, விவசாய உற்பத்தியை பாதித்தது. இதையடுத்து, 2018 நவம்பரில், புயல் காரணமாக, மத்திய மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. இது கிராமப்புற மக்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், கடந்த ஆண்டு ஆறுதல் அளித்த ஒரே விஷயம் என்னவென்றால், ஜூலை மாதத்தில் முழு அளவை எட்டிய மேட்டூர் அணைதான். காவிரி நீர் போதுமான அளவு கிடைத்ததால், அது கடைமடைகளையும் சென்று சேர்ந்தது.

Tamilnadu records good growth rates despite overall economic slowdown

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, முதன்மைத் துறை (விவசாயத்துறை) இரண்டாம் நிலை மற்றும் சேவைத் துறைகளை விட மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது இரட்டை இலக்க வளர்ச்சிக்கு அருகில்தான் இருந்தது. அதாவது கடந்த ஆண்டு விவசாயத்துறை வளர்ச்சி 9.9% என்ற அளவுக்கு இருந்தது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானிய உற்பத்தி 104.02 லட்சம் டன் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை மற்றும் சேவை துறைகள் முறையே 6.59% மற்றும் 8.24% வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்தன.

மாநிலத்தின் செயல்பாடு குறித்து, டெல்லியிலுள்ள, தேசிய பொது நிதி மற்றும் பாலிசி இன்ஸ்ட்டிடியூட் பேராசிரியரான என்.ஆர்.பானுமூர்த்தி கூறுகையில், 2016-17ஆம் ஆண்டிலிருந்து தேசிய அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையையும் மீறி, தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்வது உறுதியாக தெரிகிறது. 2016ம் ஆண்டு நவம்பரில் செயல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் 2017 ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகும், தமிழக, பொருளாதார வளர்ச்சியில் அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவியது. அது தவிர, தொழில் மற்றும் மாநில அரசின் நிதி நிலைமை பற்றிய கவலைகள் இருந்தன. இந்த அனைத்து காரணிகளும் இருந்தபோதிலும், பொருளாதார விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை புள்ளி விவரம் உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல்கள், தமிழக சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்கள் என அரசியலில் சீரற்றபோக்கு காணப்பட்டாலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மாநில வளர்ச்சியை பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது.

அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், இதுபற்றி கூறுகையில், தமிழகத்தின் ஒவ்வொரு துறையும் அதன் வளர்ச்சியில் சரிசமமாக பங்களிப்பு வழங்கியுள்ளது. பல மாநிலங்களில் இந்த நிலை இல்லை. ஒரு துறை நன்றாக வளர்ந்தால் மற்றொரு துறை வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆனால் தமிழகம் சமச்சீர் வளர்ச்சி பெறுகிறது.

பல தொழில்துறை திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளார். ஒட்டுமொத்த பொருளாதார மந்தநிலையையும் மீறி இந்த ஆண்டு அரசு சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரும்பு பெண்மணி என புகழப்படும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, முதல் முறையாக முதல்வர் பொறுப்புக்கு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும், நீண்ட காலமாக அமைச்சராக பணியாற்றிய அவரது அனுபவம், இந்த இடர்பாடுகாலத்தில், தமிழகம் மீண்டெழ, வெகு சிறப்பாக கை கொடுத்துள்ளது. எனவேதான், அரசியல் பிரச்சினைகள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றுக்கு மத்தியிலும், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதில் வெற்றி பெற்று சாதித்து காட்டிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X