For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரணி அருகே 1000 ஆண்டு பழமையான அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் கே.கே.தோப்பு பகுதியில் வயல் வெளியில் ஆயிரம் வருடம் பழமையான அய்யனார் சிலை ஒன்று பாதி புதைந்த நிலையில் கண்டறியபட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் தொல்லியல் எச்சங்களை ஆவணபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் "திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு" மூலம் ஆரணி பகுதியில் கள ஆய்வு பணி மேற்கொள்ளபட்டது. அமைப்பின் தலைவரும் தொல்லியல் ஆர்வலருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் அவர்களின் கள ஆய்வின் பொழுது கே.கே. தோப்பு பகுதியில் ஒரு வயல்வெளியில் பாதி புதையுண்ட நிலையில் ஒரு சிலையை கண்டறிந்தனர்.

 1000 year old Ayyanar statue found near Arani

நிலத்தின் உரிமையாளரிடம் விசாரித்த பொழுது, அச்சிலை என்னவென்று தங்களுக்கு தெரியாது என்றும், ஆனால் எல்லை சாமியாக தாங்கள் கருதுவதால் தை மாதத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபடுவோம் என்ற தகவலை கூறினார். அச்சிலையை மேலும் ஆய்வு செய்வதற்காக நிலத்தின் உரிமையாளர் ஒப்புதலுடன் சுத்தம் செய்து பார்க்கையில், அச்சிலை அய்யனார் சிலை என்று கண்டுபிடிக்கபட்டது.

சுமார் 4 அடி உயரமும், 3 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக இந்த அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடாபாரம் அலங்கரிக்கிறது. மேலும் இருகாதுகளிலும் வட்டமான பத்ர குண்டலம் அணிந்து, எடுப்பான மூக்கு, தடித்த உதடுகளை உடைய திருவாய் , அகன்ற தோள் ஆகிய அம்சங்களுடன் ஜடாபாரத்தின் இடதுபுறம் பிறை நிலாவுடன் அழகாக காட்சி தருவதே இச்சிற்பத்தின் சிறப்பம்சமாகும்.

 1000 year old Ayyanar statue found near Arani

மேலும் அய்யனாரின் இரு கைகளின் மேல் புஜங்களில் உருளை வடிவுடைய இரு தோள் வளைகளும், முன்கைகளில் கைவளைகளும் அலங்கரிக்கின்றன. இது போன்று பிறை நிலவுடன் வெகு சில இடங்களில் மட்டுமே அய்யனார் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அய்யனாரின் மார்புகள் சற்று விரிந்த நிலையில் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இதைதவிர வழக்கமாக அய்யனாருக்கு சொல்லப்படும் கையில் உள்ள ஆயுதமான செண்டையை வலகரத்தில் உயர்த்திப்பிடித்தும், இடக்கையை நீட்டியும், தனது வாகனமான யானையின் மீது "உட்குதிகாசன" முறையில் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. அய்யனாரின் வாகனமான யானையும் முன்புறத்தோற்றத்தில் சிறிய தந்தங்களுடன் தனது தும்பிக்கையை இடது புறம் மடித்தவாறு அமைத்துள்ளது. இந்த காரணிகளை வைத்து பார்க்கையில் இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமாக கருதலாம் என்று உருவ இயல் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் அவர்களின் கருத்து ஆகும்.

 1000 year old Ayyanar statue found near Arani

பெரும்பாலும் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 13 ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த சம்புவராயர்கள் காலத்திய சிற்பங்களும் கல்வெட்டுகளும் அடக்கிய தடயங்களே ஏராளமாக கிடைக்கும் நிலையில், இது போன்ற சம்புவராயர் காலத்திற்கு முந்தைய காலத்தை சார்ந்த சிற்பங்கள் கிடைப்பது அபூர்வமாகும். எனவே இப்பகுதியில் மேலும் கள ஆய்வு செய்தால் ஆரணி மற்றும் அதன் சுற்ற வட்டாரத்தின் தொன்மையை சம்புவரயர் காலத்தில் இருந்து மேலும் பின்னுக்கு எடுத்து செல்லலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜ் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ஆயிரம் வருட பழமையான சிறப்பு வாய்ந்த இந்த அய்யனார் சிலையை பற்றி ஊர் மக்களிடம் எடுத்து கூறியதும், அதனை பாதுகாப்பாக வைத்து கொள்வதாக மக்கள் உறுதி அளித்தனர்.

English summary
A 1000 year old Ayyanar statue has been found in KK Thoppu near Arani in Thiruvannamalai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X