For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘பொட்டு’ கொலை: ‘அட்டாக்’ பாண்டிக்கு 2 நாள் போலீஸ் காவல் - விசாரிக்க வரும் கூடுதல் எஸ்.பி குமாரவேல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை மேலும் 2 நாள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிபதி பால்பாண்டி,அனுமதி வழங்கியுள்ளார்.

மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இவரது மகன் துரை தயாநிதி ஆகியோரை சந்தித்தபோது அட்டாக் பாண்டி பேசியதை வெளிக்கொண்டு வர கூடுதல் எஸ்பி குமாரவேல் மூலம் விசாரணை நடத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

2 more Days of Custody of 'Attack' Pandi

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி மதுரையில் அழகிரியின் வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி கடந்த 21ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்டார். அட்டாக் பாண்டியை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

18 பக்க வாக்குமூலம்

தன்னை அரசியலைவிட்டே ஓடச்செய்ய திட்டமிட்டதால் பொட்டு சுரேஷை கொன்றதாக அட்டாக் பாண்டி 18 பக்கங்களில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. முதலில் இக்கொலையை அட்டாக் பாண்டி ஒப்புக்கொள்ளவே இல்லை என போலீஸார் தெரிவித்திருந்தனர். தற்போது ஒப்புக்கொண்டு விட்டதாகவும், அட்டாக் பாண்டி கூறுவது உண்மையா என விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

அன்பான விசாரணை

டி.சி., ஏ.சி. நிலை அதிகாரிகள்தான் விசாரித்து வந்தனர். போலீஸ் ரொம்ப சாப்ட் ஆகவே அட்டாக்கை ஹேண்டில் பண்ணி வருகிறார்கள். நல்ல உணவு வழங்கப்படுகிறது. உடல் வலிக்கு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினார்கள். வழக்கறிஞர்கள் மூலம் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

பேசியது என்ன?

போலீஸ் எதிர்பார்க்கும் தகவல் இன்னும் ‘அட்டாக்'கிடமிருந்து வரவில்லை என்பதால்தான் மீண்டும் 2 நாள் விசாரிக்க காவலில் எடுத்துள்ளனர் கொலைக்கு ஒரு மாதத்துக்கு முன் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியை அட்டாக் பாண்டி சந்தித்துள்ளார். அப்போது அவர் என்ன பேசினார் என்பது குறித்த முழு தகவல்களையும் வெளியிடவில்லை.

அம்புதானா அட்டாக்

அட்டாக் பாண்டிக்கு பின்னணியில் இக்கொலையில் யாரும் செயல்பட்டுள்ளனரா, அட்டாக் பாண்டி அம்பு என்றால் எய்தது யார்? பொட்டு சுரேஷ் வேறு யாருக்கும் இடையூறாக இருந்ததால், அட்டாக் பாண்டி மூலம் இக்கொலை நடந்துள்ளதா என பல கேள்விகளுக்கு விடை தெரியவேண்டியுள்ளது.

பணம் வந்தது எப்படி?

இதற்கு திமுக ஆட்சியின்போது அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலருடன் தொடர்புடைய ரவுடிகள், அட்டாக் பாண்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திமுகவின் முக்கிய நிர்வாகிகள், ஏற்கெனவே பொட்டு சுரேஷை 2 முறை கொலை செய்ய நடந்த முயற்சியின் பின்னணியில் உள்ளவர்கள், தற்போது அட்டாக் பாண்டிக்கு பண உதவி செய்தவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்.

கூடுதல் எஸ்.பி குமாரவேல்

இது வரை அட்டாக் பாண்டி கூறியவை மட்டுமே வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அது உண்மையா என்பதை சரிபார்க்கும் அளவுக்கு மதுரையில் நடந்த சம்பவங்களை முழுமையாக அறிந்த தகுதியான காவல்துறை அதிகாரிகள் யாரும் தற்போது மதுரையில் இல்லை. திமுக ஆட்சியில் அழகிரி குடும்பத்தினர், பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உட்பட கட்சியினரின் நடவடிக்கைகளை முழுமையாக அறிந்தவர் அப்போதைய உதவி ஆணையர் குமாரவேல். தற்போது கூடுதல் எஸ்பியாக திருநெல்வேலி குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றுகிறார். இவர் அழகிரி குடும்பத்தினருக்கு பாதுகாப்பளிக்கும் பணியையும் மேற்கொண்டார்.

பரபரப்பு தகவல்

மதுரையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவமும், விசாரணை திறமையையும் பெற்றவர் என்பதால் குமாரவேல் விசாரணை நடத்தினால் அட்டாக் பாண்டியிடமும், மேலும் சந்தேகத்துக்குரிய சிலரிடமும் இருந்து உண்மையை வெளிக்கொண்டு வரலாம் என்று போலீஸ் தரப்பில் நம்பப்படுகிறது.

2 நாள் போலீஸ் காவல்

2 நாள் காவலில் உள்ள அட்டாக் பாண்டியிடம் குமாரவேல் விசாரித்தால் இவ்வழக்கில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என்றும் தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே பொட்டு கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் இருக்கும் 17 பேர்களில், முக்கிய நபர்களை மட்டும் மீண்டும் விசாரணைக்குத் தூக்கி வந்து, ‘அட்டாக்'குடன் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தும் ஐடியா போலீஸுக்கு இருக்கிறதாம்.

குண்டாஸ் பாய வாய்ப்பு

அட்டாக் பாண்டி மீது மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் வாரன்ட் போடப்பட்டுள்ள நிலையில், இவற்றில் ஆஜராகாததை வைத்து குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யும் ஐடியாவும் போலீஸுக்கு உள்ளதாம். மொத்தத்தில் பொட்டு கொலை வழக்கில் அட்டாக் பாண்டி கொடுக்கப் போகும் வாக்குமூலம் திமுகவிற்குள் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
The Judicial Magistrate Court-II of Madurai on Tuesday granted two more days of custody of ‘Attack’ Pandi to the Madurai City police for interrogating him in the ‘Pottu’ Suresh murder case in which Pandi is the prime accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X