For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித்துகள் குடியிருப்பு அருகே பள்ளிக்கூடம் கட்டுவதா? மாணவர்களை அனுப்ப முடியாது-ஆதிக்க ஜாதியினர் அடம்

பள்ளி கட்டிடம் கட்டுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் 200 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பள்ளியின் புதிய கட்டிடத்தை எங்கு கட்டுவது என்ற கருத்து வேறுபாட்டில் தலித் அல்லாதவர்கள் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் புதிய கட்டிடத்தை கட்டுவது தொடர்பாக தலித்துகளுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே எற்பட்ட சச்சரவால், கடந்த ஒருவாரமாக ஒரு பிரிவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர். இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா முன்னிலையில் இருதரப்பு பிரதிநிதிகளை அழைத்து இரண்டு முறை அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று சனிக்கிழமை இரண்டாவது அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும், இந்த விவகாரத்தில் திங்கள்கிழமைதான் இறுதி முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 200 Non Dalits students stayed off go to school

இந்த அரசு பள்ளிக்கூடம் 1961 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2016 ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலின்போது இந்த 50 ஆண்டுகளைக் கடந்த பள்ளிக்கட்டிடம் சிதைந்தது. இதைத் தொடர்ந்து, இந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம சபை கூட்டம் இந்த பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுவது என்று முடிவெடுத்தது.

தற்போது நீர்நிலை புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடத்தை தலித்துகள் குடியிருப்புக்கு அருகே கட்ட திட்டமிடுவது ஏன் என்று பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரசு பள்ளியை கட்டுவதற்கு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி நபார்டு மூலம் ரூ.3.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் அந்த கிராமத்து தலித் அல்லாத பிரிவினரின் பிரதிநிதியுமான பரசுராமன் கூறுகையில், "அரசு விதிகளின்படி தற்போது பள்ளி அமைந்துள்ள இடம் நீர்நிலை புறம்போக்கு என்பதால் அதை ஒழுங்குப்படுத்த முடியாது. அதனால், நாங்கள் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இருவேறு இடங்களை பரிந்துரை செய்தோம்." என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தலித் தரப்பு பிரதிநிதியாக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட ஜெயகுமார் கூறுகையில், "அவர்கள் எங்களை ஆலோசிக்கவே இல்லை. தலித் அல்லாதவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையின் விபத்துப் பகுதியில் அரசு பள்ளி கட்டடத்தைக் கட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.

கோவிந்தவாடி கிராம தலித் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் கூறுகையில், "ஏற்கெனவே ஊர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் சாதி ரீதியான பாகுபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி கட்டிடமும் அந்தபகுதிக்கு சென்றுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்" என்றார்.

கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக இருதரப்புக்கு இடையேயான பிரச்சனையில், மாவட்ட நிர்வாகம் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில், தலித்துகள் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு இருவேறு இடங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், இதை தலித் அல்லாதவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து தலித் அல்லாதவர்கள் அந்த பள்ளியில் படிக்கும் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்புவதை ஜூன் 11 ஆம் தேதி முதல் நிறுத்தி போராட்டம் செய்தனர். இதன் பிறகே மாவட்ட நிர்வாகம் இருதரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பிரச்சனை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அங்கே அரசு மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை விரைவில் பரிந்துரை செய்து அனுப்ப உள்ளோம். இதற்குப் பிறகு கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதாக உறுதியளித்து பள்ளிக்கூடம் அனுப்பிவருகிறார்கள். மேலும், நபார்டு வங்கியின் பணம் இதற்காக பயன்படுத்திக்கொள்ளப்படும்" என்று கூறினார்.

English summary
Above 200 students of government school at Govindavadi village in Kanchipuram District have stayed off from attending classes for a week due to a conflict between dalits and non-dalits becauce of new contruction of school building.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X