For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர்ப் பஞ்சத்தில் தொடங்கி தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடித்த கண்ணீர் ஆண்டு 2015 ...!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. தண்ணீர் பஞ்சத்திலும் அரசியல், வெள்ளம் வந்தாலும் அரசியல் செய்வது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் பல மாவட்டங்களில் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. ஆனால் தற்போது எரிகள், அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

174 சதுர கிலோ மீட்டர் பரப்பள வாக இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது, 426 சதுர கிலோ மீட்டராக பரந்து விரிந்துள்ளது. மக்கள் தொகை 80 லட்சத்தை தாண்டி விட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 900 முதல், 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை, செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய 4 பிரதான ஏரிகள் நிறைவு செய்கின்றன. மேலும், வீராணம் ஏரி மூலமும் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. மழை இல்லாத காலங்களில், தெலுங்கு கங்கை திட்டம் மூலம், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறக்கூடிய கிருஷ்ணா நீர், ஓரளவு வீராணம் ஏரியில் இருந்து கிடைக்கும் நீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே போதிய அளவு மழை பெய்யவில்லை. மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே அபாய கட்டத்தை எட்டியது. ஜனவரி 2ம் தேதி நிலவரப்படி நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,057 மில்லியன் கன அடி இருக்க வேண்டும். ஆனாலும் நான்கு ஏரிகளிலும் சேர்த்தே மொத்தம் 3,152 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருந்தது.

பருவமழை பெய்தால் மட்டுமே இனி ஏரிகள் நிரம்பும் என்ற அச்சம் உருவானது. இதனால் தண்ணீர் விநியோகம் தடுமாற்றம் அடையவே, சென்னைவாசிகள், 12 ஆண்டுகளுக்குப் பின் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை இந்த 2015ம்ஆண்டில் சந்தித்தனர். ஏரிகள் நீர் இருப்பு, இயல்பை விட குறைந்து போனதால் குடிநீர் வினியோகத்திலும் சிக்கல் ஏற்படவே பிரச்னையை சமாளிக்க முடியாமல், குடிநீர் வாரியம் திண்டாடியது.

வறண்ட ஏரிகள்

வறண்ட ஏரிகள்

சோழவரம் ஏரி கடந்த மார்ச் மாதம் முதலே வறண்டு விட்டது. 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர் இருப்பு பூஜ்யமாகிவிட்டதால், ஏரியில் மாடுகள் மேய்ப்பதும், கிரிக்கெட் விளையாடியும் சிறுவர்கள் பொழுது போக்கினர். 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு செப்டம்பர் மாதமே 57 மில்லியன் கன அடியானது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து, சென்னைக் குடிநீருக்கு நீர் எடுப்பது, ஆகஸ்ட் மாதமே நிறுத்தப்பட்டது.

குறைந்து போன நீர்மட்டம்

குறைந்து போன நீர்மட்டம்

3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, செப்டம்பர் மாதம் 9ம் தேதி நிலவரப்படி 132 மில்லியன் கன அடியாகும். இதனால், வினாடிக்கு 46 கன அடி நீர் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டது. 3,300 மில்லியன் கன அடி கொள் ளளவு கொண்ட புழல் ஏரியின் நிலையும் செப்டம்பர் மாதத்தில் 132 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பாக இருந்தது.

வற்றிய கிணறுகள்

வற்றிய கிணறுகள்

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் பல இடங்களில் குறைந்து விட்டது. இதனால் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வறண்டு விட்டது. கோடம்பாக்கம், கே கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், மடிப்பாக்கம், மேடவாக்கம், நெற்குன்றம், பாடி, அம்பத்தூர், பெரம்பூர், ஆழ்வார் திருநகர், மேட்டுக்குப்பம், வளசரவாக்கம், மாதவரம், புத்தகரம் உள்பட பல பகுதிகளில் கிணறுகள் மட்டுமின்றி போர்வெல் கிணற்றிலும் தண்ணீர் வற்றி 400 அடிக்கு கீழே தண்ணீர் சென்று விட்டது.

போராடிய மக்கள்

போராடிய மக்கள்

இதனால் குடிநீர் தேவையை சமாளிக்க கடும் சிரமத்திற்கு ஆளாகினர் குடிநீர் வாரியத்துறையினர். குடிநீர் மட்டுமல்லாது குளிக்கவும் கூட தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். பல இடங்களில், தண்ணீர் கேட்டு, மக்கள் வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் சென்னை குடிநீர் வாரியம் கடும் சிக்கலை சந்தித்தது.

சிக்கன நடவடிக்கை

சிக்கன நடவடிக்கை

குடி தண்ணீர் 1 குடம் 6 ரூபாய்க்கும், சாதா தண்ணீர் 1 குடம் 2 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வளசரவாக்கம் பகுதியில் 1 குடம் தண்ணீர் 6 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் ஆலோசனை நடத்திய அமைச்சர் வேலுமணி, பொது மக்களும் குடிநீர் பற்றாக்குறையினைக் கருத்தில் கொண்டு தாங்கள் உபயோகப்படுத்தும் நீரின் அளவை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

தண்ணீர் அரசியல்

தண்ணீர் அரசியல்

செம்டம்பர் முதல் அக்டோபர் மாத இறுதிவரையில் சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடியது. பல பகுதிகளில் லாரிகள் மூலம் கூட குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உருவானது. இதை அரசியலாக்க நினைத்த எதிர்கட்சியினர், புது குடங்களை வாங்கிக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

அபாய கட்டத்தை எட்டிய ஏரிகள்

அபாய கட்டத்தை எட்டிய ஏரிகள்

கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி நிலவரப்படி குடிநீர் தரும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11057 மில்லியன் கனஅடியில் நீர் இருந்தது 324 மில்லியன் கனஅடியாக குறைந்து அபாய கட்டத்தை எட்டியது. வடகிழக்குப் பருவமழை பெய்தால் மட்டுமே குடிநீர் பஞ்சத்தில் இருந்து சென்னை தப்பும் என்ற நிலை உருவானது.

வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில்தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. எனினும் நவம்பர் 8ம் தேதி முதல் தீவிரமடைந்தது. கடலூரை கதி கலங்க வைத்த மழை சென்னையை குறிவைத்தது. நவம்பர் 23ம் தேதி கொட்டித்தீர்த்த மழையால் குடிநீர் ஏரிகளின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து நிரம்பின. இதனால் சென்னையை மிரட்டி வந்த குடிநீர் தட்டுப்பாடுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தினசரி குடிநீர் விநியோகம்

தினசரி குடிநீர் விநியோகம்

கடந்த நவம்பர் 24ம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இனி நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுதவிர, அம்பத்தூர், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் பணிகள் முடிவடைந்துவிட்டதால், அங்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறி சென்னைவாசிகளின் உள்ளங்களில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

வரலாறு காணத மழை

வரலாறு காணத மழை

நவம்பர் மாதம் பெய்த மழையை விட டிசம்பர் 1,2ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கனமழையால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியது. சிறு குளங்களும், பெரிய ஏரிகளும் நிரம்பி வழிந்தன. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரினாலும், அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் பெருகியது. நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளால் புறநகரில் மட்டுமல்லாது வெள்ளநீர் சென்னை நகருக்குள்ளும் புகுந்தது.

மிதக்க வைத்த வெள்ளம்

மிதக்க வைத்த வெள்ளம்

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை, புறநகர்வாசிகளின் வாழ்வாதாரத்தையை கேள்விக்குறியாக்கியது. தண்ணீர் பஞ்சத்தால் தவித்த மக்களை வெள்ளம் வந்து ஊரை விட்டு விரட்டியது. தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், குழாய்கள் உடைந்து பல பகுதிகளில் கழிவுநீருடன் குடிநீர் கலந்தது. இதனால் குழாய்களில் துர்நாற்றம் கலந்த தண்ணீர் வரவே மீண்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

நிரம்பிய ஏரிகள்

நிரம்பிய ஏரிகள்

35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்தேக்கத்தில் தற்போதைய நிலவரப்படி 33.35 அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 2,885 ஆக உள்ள நிலையில், 3,169 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.50 அடியாக உள்ளது. ஏரிக்கு 2,472 கனஅடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், 2,480 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் 19.27 அடி நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 16.86 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து 400 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

தண்ணீர் பஞ்சம் இனி வராது

தண்ணீர் பஞ்சம் இனி வராது

2015ம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னையை மிரட்டிய தண்ணீர் பஞ்சம் வருணபகவானின் கருணையினால் நவம்பர் இறுதியிலேயே சரி செய்யப்பட்டது. எனினும் டிசம்பர் மாதத்தில் பெய்த வரலாறு காணாத மழைதான் தண்ணீர் என்றாலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் நகரவாசிகளை அச்சத்தில் ஆழ்த்திவிட்டது.

தமிழகம் முழுவதும் நிரம்பிய ஏரிகள்

தமிழகம் முழுவதும் நிரம்பிய ஏரிகள்

சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே அணைகள், ஏரிகள், குளங்கள், கோவில் குளங்கள் நிரம்பி வழிகின்றன. தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் முழுவதுமே முழுவதும் நிரம்பியுள்ளன. 2015ம் ஆண்டு சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சத்தில் தொடங்கி வெள்ளத்தில் முடிந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாத நிலை உருவாகியுள்ளது.

English summary
Chennai faced water scarcity in the summer but the year ended with a massive flood which scattered the capital city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X