For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷம் கலந்த மதுவை குடித்து 4 பேர் பலி.. கொலையா?.. தலைமறைவான வாலிபருக்கு வலைவீச்சு

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே விஷம் கலந்த மதுவை குடித்த 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நால்வருக்கும் இளைஞர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சங்கராபுரம் அருகே உலகஉடையான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (30). எம்எஸ்சி, எம்பிஃல் படித்த இவர் கள்ளக்குறிச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டுடோரியல் சென்டர் நடத்தி வந்தார்.

4 people died due to poison in liquor…

இதை நடத்த அவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இதனால் கடனை அடைக்க சொத்தை பிரித்துக்கொடுக்குமாறு தன் பெற்றோரை ராமகிருஷ்ணன் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கிராம பஞ்சாயத்தார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதன்பின்னர் அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் ராமகிருஷ்ணன் பேசிவந்துள்ளார்.

மதுவிருந்து

இந்நிலையில் சனிக்கிழமையன்று ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் இருந்து மது வாங்கி வந்திருப்பதாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (42), முனியன் (58), மூர்த்தி (36), கள்ளக்குறிச்சி அருகே வேலாகுறிச்சியைச் சேர்ந்த பஞ்சாட்சரம்(40) ஆகியோரை அழைத்து மது விருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

வயல்வெளியில் மரணம்

அதை வாங்கிய 4 பேரும் இரவு நேரத்தில் வயல் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். இதையடுத்து ராமகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது. மது அருந்திய சற்று நேரத்தில் முனியன், மூர்த்தி, பஞ்சாட்சரம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கனகராஜ் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

ஊசலாடிய உயிர்

நேற்று காலை வயல்வெளி பக்கம் சென்றவர்கள் கனகராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கோழி சமைத்து

இறந்த நால்வரும் மது அருந்துவதற்கு முன்பு கோழி இறைச்சி சமைத்துள்ளனர். அந்த இடத்தில் வயல்வெளிக்கு உபயோகப்படுத்தும் பூச்சிகொல்லி மருந்து பாட்டில், ஊசி மற்றும் இறந்த கோழியின் உடலை போலீசார் கைப்பற்றினர்.

கோழிக்கு விஷம்

முதலில் கோழிக்கு விஷம் கலந்த மதுவை கொடுத்து சோதித்து பார்த்தபின்பு 4 பேருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றிருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்ட கொலை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. இக்கொலைகளை ராமகிருஷ்ணன் செய்தாரா? அல்லது வேறு யாரேனும் கொலை சம்பவத்தை அரங்கேற்றினரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான ராமகிருஷ்ணனை போலீசார் தேடிவருகின்றனர்.

குடிநீர் தொட்டியில் விஷம்

மேலும் ராமகிருஷ்ணன் அந்த ஊர் பொதுக்குழாயில் குடிநீர் சரியான நேரத்துக்கு விடவில்லை என்றால் அந்த ஊராட்சியின் குடிநீர் மேல்நிலைத்நீர்தேக்கதொட்டியில் விஷம் கலந்து விடுவேன் என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று ஊராட்சி ஊழியர்களிடம் அடிக்கடி மிரட்டுவார் என்று தெரியவந்தது.

சுத்தம் செய்யப்பட்ட தொட்டி

மேலும், குடிநீர் தொட்டியில் ராமகிருஷ்ணன் விஷத்தை கலந்து விடுவதாக கூறியதாக கிராம மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து அந்த தொட்டியில் உள்ள தண்ணீரை முழுமையாக திறந்து விட போலீசார் உத்தரவிட்டனர். அதன் பேரில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.

போலீசில் புகார்

இச்சம்பவம் குறித்து, கனகராஜின் உறவினர் மாயக்கண்ணன் சங்கராபுரம் போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது மனைவியின் சகோதரர் கனகராஜ் சனிக்கிழமையன்று தனது உறவினரிடம் ராமகிருஷ்ணன் எங்களுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாகவும், கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட தன்னை காப்பாற்றுமாறும் செல்போனில் கூறினார். எனவே கனகராஜ் உள்பட 4 பேர் சாவுக்கு காரணமான ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பட்டதாரி வாலிபர் ராமகிருஷ்ணனை வலைவீசி தேடிவருகின்றனர்.

தேடுதல் வேட்டை

ராமகிருஷ்ணன் மற்ற 4 பேருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தாரா? அப்படி என்றால் எதற்காக அவர் அப்படி செய்தார்? ராமகிருஷ்ணன் தலைமறைவானது ஏன்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான விடை, தலைமறைவாக இருக்கும் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டால் தான் தெரியவரும்.

English summary
Four People from Vilupuram drunken in a party and died. Police filed case and investigating about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X