• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அண்ணா உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50ஆம் ஆண்டில்... அயராது உழைப்போம்.. மு.க. ஸ்டாலின் உறுதி

|

சென்னை: "மீண்டும் தி.மு.கழக அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம். விழிப்புடன் செயலாற்றி விரைவில் வெற்றி காண்போம்" என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி அரியணையில் அமர்ந்த 50வது ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை போற்றும் வகையிலும் திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அண்ணா சாதனை தொடர அயராது உழைப்போம் என்று கூறியுள்ள ஸ்டாலின் கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வரலாற்றுச் சிறப்பு நாள் மடல்:

இழி நிலையை ஒழித்த நீதிக்கட்சி

இழி நிலையை ஒழித்த நீதிக்கட்சி

கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவில் தான் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக திராவிட இனத்தின் சமுதாய அந்தஸ்தும், கல்வி-வேலை வாய்ப்புகளும் பாதகமான நிலையில் இருந்து வந்தன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த இழிநிலையைப் போராடித் தகர்த்த பெருமை நீதிக்கட்சி வழிவந்த திராவிட இயக்கத்திற்கு உண்டு.

சிந்தனையின் செயல்வடிவம் அண்ணா

சிந்தனையின் செயல்வடிவம் அண்ணா

தந்தை பெரியார் எனும் பகுத்தறிவு பூகம்பத்தால் பழமையும் அடிமைத்தனமும் நொறுங்கி வீழ்ந்து, புத்துலகம் நோக்கிய சிந்தனைகளுடன் செயல்படத் தொடங்கினர் திராவிட இன மக்கள். அந்த சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதை உணர்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.

அண்ணாவின் லட்சியப் பயணம்

அண்ணாவின் லட்சியப் பயணம்

கரடுமுரடான பாதை, அதில் கடுமையானப் பயணம், எதிர்ப்புகளுக்கு அஞ்சாத மனதிடம், எதிரிகளையும் இணங்கவைக்கும் குணநலம் கொண்டவர் நம் அண்ணா. அவர் தனது தம்பிமார்களுடன் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டார். டெல்லிப் பட்டணம் வரை திராவிடத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். தமிழினத்தின் தனித்தன்மையை இந்தியத் துணைக்கண்டம் உணரும் வகையில் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.

மகத்தான வெற்றி

மகத்தான வெற்றி

இயக்கத்தைத் தொடங்கிய 18 ஆண்டுகாலத்தில் எதிர்க்கட்சி என்ற நிலையிலேயே அரசியல்-சமுதாயத் தளத்தில் பேரறிஞர் அண்ணாவும் அவரது தம்பிகளான நம் தலைவர் கலைஞர் உள்ளிட்டோரும் ஏற்படுத்திய மாற்றங்களும் மறுமலர்ச்சிகளும் இதுவரை எந்த இயக்கமும் சாதித்திராத பெருமைக்குரியவை. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

பொறுப்பேற்ற திருநாள்

பொறுப்பேற்ற திருநாள்

6-3-1967 அன்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் அறிஞர் அண்ணா. அவருடன் நாவலர், தலைவர் கலைஞர், கே.ஏ.மதியழகன், பண்பாளர் சாதிக் , பாவலர் முத்துசாமி, அம்மையார் சத்தியவாணிமுத்து , திரு மாதவன், திரு ஏ.கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற திருநாள் இது.

சுயமரியாதை திருமணச் சட்டம்

சுயமரியாதை திருமணச் சட்டம்

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா படைத்த மகத்தான இந்த சாதனை, இந்தியத் துணைக்கண்டத்திற்கே இன்றுவரை அரசியல் வழிகாட்டியாக உள்ளது. திராவிட இனத்தின் மாண்பு காக்கும் வகையில், சுயமரியாதை திருமணச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி அதனைத் தந்தை பெரியாருக்கு காணிக்கை என முழங்கியவர் நம் அண்ணா.

‘தமிழ்நாடு’ பெயர் சூட்டிய பெருந்தகை

‘தமிழ்நாடு’ பெயர் சூட்டிய பெருந்தகை

அதுபோல, ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்தி மொழிக்கு இடமில்லை எனத் தடுத்து, தாய்மொழியைக் காக்கும் வகையில் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டினார். பெருமைமிக்க தமிழினத்தின் அடையாளத்தைக் குறிக்கும் வகையில், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியவர் அவர். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற சிறப்புப் பெருமையும் அறிஞர் அண்ணாவுக்கே உரியது.

அணைந்த விளக்கு

அணைந்த விளக்கு

இனத்தின் பெருமையை மீட்டெடுத்த அந்தத் தலைமகனை இயற்கை நம்மிடமிருந்து 1969ஆம் ஆண்டு பறித்துக் கொண்ட பிறகு, இயக்கத்தையும் ஆட்சியையும் தன் தோளில் சுமந்து திராவிட இயக்க இலட்சியப் பயணத்தை இன்றளவும் தொடர்ந்து வருபவர் நம் அருமைத்தலைவர் கலைஞர் அவர்கள். பெரியாரின் மாணவனாக, அண்ணாவின் தம்பியாக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திராவிட இயக்கக் கொள்கைகளை நிலைநாட்டிய பெருமைக்குரியவர் நம் அருமைத் தலைவர் கலைஞர் அவர்கள்.

புறக்கணிக்க முடியாத சமூக நீதி

புறக்கணிக்க முடியாத சமூக நீதி

சமூக நீதித் தளத்தில் 69% இடஒதுக்கீட்டினை வழங்கி, மிகபிற்படுத்தப்பட்டோர்- இஸ்லாமியர்-அருந்ததியர் என அனைத்துத் தரப்பினரும் அதன் உண்மையானப் பலனைப் பெறச் செய்தவர். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவுக்கே சமூக நீதிக் கொள்கையை பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கத்தின் மூலம் கொண்டுவர துணை நின்றவர் தலைவர் கலைஞர் அவர்கள். இந்தியாவில் இன்று எந்த ஒரு தேசிய கட்சியும்-மாநிலக்கட்சியும் சமூக நீதிக் கொள்கையைப் புறக்கணித்துவிட முடியாது என்ற நிலையை ஏற்படுத்திய மகத்தானத் தலைவராக கலைஞர் அவர்கள் விளங்குகிறார்.

இந்தியாவிற்கு முன்னோடி தமிழகம்

இந்தியாவிற்கு முன்னோடி தமிழகம்

பெண்களுக்கான சொத்துரிமை, சிறுபான்மையினர் நலன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, திருநங்கையர்-மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தால் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான். விவசாயிகள்-நெசவாளர்கள்-தொழிலாளர்கள் ஆகியோரின் நலவாழ்வுக்கான திட்டங்கள், தொழுநோயாளர்கள்-பார்வையற்றோர்-பிச்சைக்காரர்கள் ஆகியோரின் மறுவாழ்வுக்கானத் திட்டங்கள், கல்வி-மருத்துவம்-மின்சாரம்-குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், தொழில்-போக்குவரத்து-சாலைகள்-பாலங்கள்-உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் என அரசியல்-சமூக-பொருளாதார முன்னேற்றங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்குக் காரணம், பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட திராவிட இயக்க ஆட்சியும், அதன் தொடர்ச்சியாகத் தலைவர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட திட்டங்களுமேயாகும்.

போலி கட்சியால் பின்னடைவு

போலி கட்சியால் பின்னடைவு

அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி கட்சியை உருவாக்கி ஆட்சி நடத்தியவர்களும் உண்டு. அந்த போலித் திராவிடத்தால் ஏற்பட்ட பின்னடைவுகளும் நிறைய உண்டு. எனினும், அவர்களாலும் கூட திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையும் சமூக மாற்றங்களையும் புறக்கணிக்க முடியவில்லை.

மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி

இன்றைக்கு இந்தியாவின் வடமுனையில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் தொடங்கி நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா-தெலங்கானா வரை பல மாநிலங்களிலும் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் தகர்ந்து, மாநிலக் கட்சிகளின் ஆட்சி நடைபெறுவதைக் காண்கிறோம். அரை நூற்றாண்டுக்கு முன்பே இதற்கானப் பாதையை வகுத்து, வெற்றி பெற்றவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அணையா விளக்கு என்பது அண்ணாவின் நினைவிடத்தில் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை ஏந்தியுள்ள நம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி என்ற உயர்ந்த நோக்கத்துடனான நம் இலட்சியப் பயணத்தின் இலக்கை அடையும் வரை ஓய்வில்லை.

தமிழ்ப் பயிர் செழிக்க…

தமிழ்ப் பயிர் செழிக்க…

இடையிடையே திராவிடத்தையும் அண்ணாவையும் போலியாகப் பயன்படுத்துவோரும், திராவிட இயக்கம் அழிந்துவிட்டதாக மனப்பால் குடிப்போரும் களைகளாக முளைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். அந்தக் களைகளை அகற்றி, திராவிட நிலத்தில் தமிழ்ப் பயிர் செழிக்கச் செய்ய, அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் முடியும். அண்ணா உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50ஆம் ஆண்டில், மீண்டும் தி.மு.கழக அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம். விழிப்புடன் செயலாற்றி விரைவில் வெற்றி காண்போம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK working leader M.K. Stalin writes letter to cadres to take vow in 50th year anniversary of DMK rule here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more