For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒகேனக்கல் பரிசல் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி-3பேர் உயிருடன் மீட்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தருமபுரி: ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தனர். ஒரு சிறுவன் உட்பட 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, பரிசல் ஓட்டி கஜா முருகேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராயநகர் சவுத் உஸ்மான் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் தி.நகரில் தனியார் செல்போன் ஷோரூம் வைத்துள்ளார். இவரது மனைவி கோமதி (29). இவர்கள் தங்கள் திருமண நாளை கொண்டாடுவதற்காக மகன்கள் சச்சின் (6), தர்ஷன் (2) மற்றும் உறவினர் களுடன் ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்தனர். அவர்களுடன் ராஜேஷின் மாமனார் கிருஷ்ணமூர்த்தி (60), மாமியார் கவுரி (55), மைத்துனர் ரஞ்சித் (35), இவரது மனைவி கோகிலா (30), இவர்களது 10 மாத குழந்தை சுபிக்‌ஷா ஆகியோரும் வந்திருந்தனர்.

6 dead 3 rescue as coracle capsizes at Hogenakkal Falls

சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று காலை மொரப்பூர் வந்த அவர்கள் வாடகை கார் மூலம், காலை 11 மணிக்கு ஒகேனக்கல்லுக்கு சென்றனர். அங்கு மெயினருவி, சினிபால்ஸ், எடத்திட்டு, கண்காட்சி கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர்.

இதனைத் தொடர்ந்து மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஊட்டமலையை சேர்ந்த கஜா முருகேசன் என்பவருடைய பரிசலில், 9 பேரும் சென்று பெரியபாணி, ஐவர்பாணி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து விட்டு தொம்பச்சிக்கல் பரிசல் துறைக்கு வந்தனர். அங்கிருந்து சுமார் 20 அடி தூரம் பரிசலில் பயணம் செய்த போது, பரிசல் திடீரென காவிரி ஆற்றில் கவிழ்ந்தது. இதில், பரிசல் ஓட்டி உள்பட 10 பேரும் ஆற்றில் மூழ்கினர்.

மூன்று பேர் மீட்பு

தண்ணீரில் தத்தளித்த ராஜேஷ், தனது மனைவி கோமதி மற்றும் 6 வயது மகன் சச்சின் ஆகியோரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். பரிசல் ஓட்டி கஜா முருகேசன், மற்றவர்களை காப்பாற்ற முயன்றும் பலனளிக்காததால், அவர் மட்டும் நீந்தி கரைக்கு வந்தார். பின்னர், ஆற்றில் மூழ்கிய 6 பேரை பரிசல் ஓட்டிகள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டார்.

தேடுதல் வேட்டை

தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆற்றில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தி, கவுரி, ரஞ்சித், கோகிலா, சுபிக்‌ஷா, தர்சன் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி கவுரி, தர்ஷன் ஆகியோர் சடலத்தை மட்டும் மீட்டனர். தொம்மச்சிக்கல் பரிசல் துறையில் காவிரியில் மூழ்கியவர்களை தேடும் பணியில், 50க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு, மீட்பு பணிகளை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

9 பேர் பயணம்

ஒரு பரிசலில், பரிசல் ஓட்டி உள்பட 7 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் அறியும் வகையில், அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. நேற்று பரிசலில், 3 குழந்தைகள் உள்பட 9 பேரை ஏற்றிக்கொண்டு பரிசல் ஓட்டி பரிசலை இயக்கியுள்ளார். இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

கூடுதல் பாரம்

பரிசலில் பயணம் செய்த ராஜேசின் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, பரிசலில் சாய்ந்து உட்கார்ந்தார். அப்போது திடீரென பரிசல் ஆற்றில் ஓரமாக சாய்ந்து, அதில் தண்ணீர் ஏறியது. சிறிது நேரத்தில் அழுத்தம் தாங்க முடியாமல், பரிசல் கவிழ்ந்து, 10 பேரும் ஆற்றில் மூழ்கினர். இதையடுத்து நான், ராஜேஷ் மற்றும் அவரது மனைவி, குழந்தையை மீட்க போராடினேன். அவர்கள் கரைக்கு வந்ததும், மற்றவர்களை மீட்க சென்றேன். ஆனால் மீட்கமுடியவில்லை என்று விபத்தை நேரில் பார்த்த ஆனந்தன் என்ற பரிசல் ஓட்டி கூறியுள்ளார்.

பாதுகாப்பு வசதியில்லை

ஒகேனக்கல்லில் மாமரத்துக்கடவு, கோத்திக்கல், தொம்மச்சிக்கல், ஊட்டமலை, ஆலாம்பாடி, கர்நாடக மாநிலம், மாறுக்கொட்டாய் ஆகிய 6 பரிசல் துறைகள் உள்ளன. இவற்றில் இருந்து 500க்கும் மேற்பட்டோர், பரிசல் இயக்கி வருகின்றனர். விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் ஷிப்ட் முறையில் பரிசல்கள் இயக்கப்படுகிறது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு லைப்ஜாக்கெட் வழங்கப்படுகிறது. தற்போது அங்கு 300 லைப்ஜாக்கெட் மட்டுமே உள்ளது.

கண்டுகொள்ளாத காவல்துறை

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தால், அதிகளவில் பரிசல் இயக்கப்படும். அப்போது லைப்ஜாக்கெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை கண்டுகொள்வதேயில்லை. சுற்றுலா தலங்களில் படகு, பரிசல் சவாரியில் பயணிகள் ஈடுபடும்போது தண்ணீரில் விழுந்தாலும் மூழ்காமல் இருக்க லைப் ஜாக்கெட் பயன்படுத்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால் நேற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட யாரும் லைப் ஜாக்கெட் அணியவில்லை.

4 நாட்களுக்கு தடை

இந்நிலையில், தமிழக பகுதியில் உள்ள 5 பரிசல் துறைகளில் இருந்து பரிசல் இயக்க 4 நாட்களுக்கு தடை விதித்து டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக, பரிசல் ஓட்டி கஜா முருகேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிக்கத் தடை

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்த விபத்தை தொடர்ந்து 6 மணிக்கு மேல், அருவி அருகே கூட்டமாக இருந்த சுற்றுலா பயணிகளை குளிக்க விடமால் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஒனேக்கல் அருவியில் மாலை 6 மணிக்கு மேல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதே போல், பரிசல் இயக்கவும் 4 நாள் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாலை 6 மணியானதால், தேடும் பணி நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

முதல் சம்பவம்

பரிசல் மூழ்கிய பகுதியில் பெரியபாணி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் இருந்து கொட்டும் தண்ணீர், இந்த வழியாக காவிரியில் பாய்கிறது. இப்பகுதியில் உள்ள காவிரி, சுமார் 70 அடி ஆழம் கொண்டது. அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர், அதில் இருந்து வரும் ஜில்லென்ற காற்று, உடலில் தெறிக்கும் நீர் திவலைகள் உள்ளிட்டவற்றை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் பரிசல் பயணம் செய்கின்றனர். பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் இங்கு நடந்துள்ளது. இப்பகுதியில் இதுவரை விபத்து நடந்ததில்லை. முதல் முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது, சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 பேர் மரணம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஆலம்பாடி காவிரியில் பரிசல் பயணம் செய்த போது சுழலில் சிக்கி விபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெங்களூரில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வந்த இளைஞர்கள் பரிசலில் சென்ற போது 14 பேர் உயிரிழந்தனர்.

English summary
A family from Chennai to Hogenakkal Falls turned tragic after the coracle in which they took a ride capsized in the Cauvery on Sunday afternoon, 6 dead including a 10-month-old baby. Oarsmen rescued three members of the family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X