For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதிகரிக்கும் ஜாதி ஆணவக் கொலைகள்... 3 ஆண்டுகளில் 81 பேர் படுகொலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரி இளவரசனின் உடலில் இருந்து ரத்தம் குடித்த ஜாதி வெறியர்கள், அடுத்ததாக ஓமலூர் கோகுல்ராஜ் தலையை துண்டித்து ரயில் தண்டவாளத்தில் போட்டார்கள். அந்த ரத்தம் காயும் முன்பே இப்போது நடு ரோட்டில் பலரின் கண் முன்பே துள்ளத் துடிக்க கத்தியால் கழுத்தில் குத்தி, அரிவாளால் கையை வெட்டி உடுமலைப் பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞரை மண்ணில் சாய்த்திருக்கின்றனர்.

இந்த மூன்று கொலைகளுமே ஜாதி ஆணவக்காரர்களால் நடத்தப்பட்டதுதான். தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 81 ஜாதி ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக கூறுகிறது புள்ளிவிபரம்.

ஞாயிறன்று உடுமலைப்பேட்டையில் நடந்த ஜாதி ஆணவக்கொலைக் காட்சி சிசிடிவியில் பதிவாகி அது ஊடகங்களில் வெளியானதால் தமிழகத்தில் நிலவும் ஜாதி வெறியின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது.

பெண் எரித்துக்கொலை

பெண் எரித்துக்கொலை

கடந்த 2014ம் ஆண்டு உசிலம்பட்டி விமலாதேவியை எரித்துக்கொன்றது இதுபோன்ற ஜாதி வெறியர்கள்தான். தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் திலீப் குமாரை காதலித்த குற்றத்திற்காக அவரது குடும்பத்தினலே விமலாதேவியை உயிரோடு எரித்துக்கொன்றனர்.

கர்ப்பிணி பெண் கொலை

கர்ப்பிணி பெண் கொலை

இதே போல 2014ம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஜாதி மாறி திருமணம் செய்த வைதேகியை, கர்ப்பிணி என்றும் பாராமல், பெண்ணின் குடும்பத்தினரே விஷம் கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்று புதைத்து விட்டனர். தாய்மாமன் கழுத்தை நெரிக்க, தம்பியே குழிதோண்டி புதைத்த கொடூர சம்பவமும் நிகழ்ந்தது.

பெண்கள் படுகொலை

பெண்கள் படுகொலை

இதுபோன்ற ஜாதி ஆணவக் கொலை பற்றி கருத்து கூறும் எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர், ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதில் பாதிக்கு மேல் காதல் சம்பந்தப்பட்ட கவுரவக் கொலைகளே என்று பதற வைக்கிறார்.

ஜாதி ஆணவக்கொலைகள்

ஜாதி ஆணவக்கொலைகள்

இதேபோல் ஆண்டுக்கு 700 பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதிலும் பாதிக்கு மேல் கவுரவக் தற்கொலைகள்தான். தலித் இளைஞர்களை காதலித்த குற்றத்துக்காக பெரும்பாலும் பெண்கள்தான் ஜாதி ஆணவக் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

தடுக்க தனி சட்டம்

தடுக்க தனி சட்டம்

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக தனியாக சட்டம் இயற்றப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், இத்தனை வருடங்களுக்கு மேலாகியும் சட்டம் வந்தபாடில்லை. வட மாநிலங்களில் 'காப்' பஞ்சாயத்துகள்தான் இது போன்ற ஜாதி ஆணவக்கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதே போல் தமிழகத்தில் சாதிப் பஞ்சாயத்துகள் ஜாதி ஆணவக் கொலைகளும் தற்கொலைகளும் நடப்பதற்கு உந்துதலாக இருக்கின்றன என்று கதிர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் ஜாதி ஆணவக் கொலைகள்

உலகம் முழுவதும் ஜாதி ஆணவக் கொலைகள்

2010ஆம் ஆண்டில் உலகில் 5,000 ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த ஆணவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுவதாகவும் கூறுகிறது ஒரு புள்ளி விபரம்.

வட இந்தியாவில்

வட இந்தியாவில்

90 சதவிகித ஜாதி ஆணவக் கொலைகள் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர் பிரதேசத்தில் மட்டுமே நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. இவை பெரும்பாலும் காப் பஞ்சாயத்துக்களின் தீர்ப்பை ஒட்டி நிகழ்த்தப்பட்டவை.

தமிழகத்தில் மூடி மறைப்பு

தமிழகத்தில் மூடி மறைப்பு

தமிழகத்தில் கடந்த ஜனவரி 2008ம் ஆண்டிலிருந்து ஜூன் 2010 வரைக்குமான காலகட்டத்தில் 22 மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 1,971 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

காவல்துறையினரின் பங்கு

காவல்துறையினரின் பங்கு

இந்தக்காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 90 சதவிகிதத்தினர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தற்கொலைகளில் ஜாதி ஆணவக்கொலைகளும் அடங்கியிருக்கலாம். இது போன்ற ஆணவக்கொலைகளை தற்கொலைகள் என்று மூடிமறைப்பதில் குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் தவிர காவல்துறைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது

சங்கர் கவுசல்யா

சங்கர் கவுசல்யா

இளவரசன் மரணத்தின் போது பரபரப்பாக பேசப்பட்ட ஜாதி ஆணவக்கொலை, லோக்சபா தேர்தலின் போது அடங்கியது. கோகுல்ராஜ் கொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ஆணவக்கொலை, சிலரால் அமுக்கப்பட்டது. தற்போது தலித் இளைஞர் சங்கரின் படுகொலையால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அகோர கொலைகள்

அகோர கொலைகள்

இப்படி ஜாதி ஆணவம் பிடித்த வெறியர்களின் கொலை வெறியாட்டம் அகோரமாகவே இருக்கிறது. ஆணின் தலையை துண்டிப்பது, மர்ம உறுப்பை சிதைப்பது, பெண்ணின் கைகளை துண்டிப்பது, எரிப்பது என்று பலரும் அஞ்சும் வகையில் கொல்கின்றனர். இது தங்கள் இன பெண்களை காதலிக்கும் பிற ஜாதி இளைஞர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாம்!

சட்டம் சாட்டையை சுழற்றுமா?

சட்டம் சாட்டையை சுழற்றுமா?

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சம் அரசுக்கு உள்ளதால் இந்த விவகாரங்களை கண்டும் காணாமல் இருக்கின்றன அரசும், காவல் துறையும். இத்தனைக்கும் இதுபோன்ற ஆணவக் கொலைகளை ஆதரிப்போர் மிக மிக மிகச் சிறிய சதவீதத்தினர் தான். எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதில் உள்ள பெரும்பாலானோர் இது போன்ற வன்முறையை ஆதரிப்பதே இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட மறுக்கும் நிலையில், நீதித்துறை தான் தலையிட்டு அப்பாவி உயிர்களைக் காக்க வேண்டும்.

English summary
In less than three years, Tamil Nadu has witnessed 81 incidents of honour killings with the ghastly murder of Dalit youth Shankar in Udumalpet in neighbouring Tirupur district being the latest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X