For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரட்டிய பேய்மழை பெருவெள்ளம்... விடிய விடிய ஊர்ந்த பேருந்து பயணம்....மறக்க முடியாத 2015 நவ. 25

கடந்த ஆண்டு மழை பாதிப்பு தொடர்பான எழுத்தாளர் விநாயக முருகனின் பதிவு இது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஓராண்டாகிப் போயும் கடந்த ஆண்டு இதே நவம்பர் 25-ந் தேதியன்று எதிர்கொண்ட பேய்மழை... பெருவெள்ளத்தை சென்னை பெருநகரவாசிகள் அவ்வளவு எளிதாக மறக்கவில்லைதான்...

சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரம் வரலாறு காணாத பெரும் துயரத்தை எதிர்கொண்டது...நகருக்குள் புகுந்த ஆறுகள்...அரைவாசி சென்னையை அப்படியே சுருட்டிக் கொண்டு வங்க கடலுக்குள் ஓடி பதுங்கியது...

A diary of the 2015 Chennai flood

சென்னைவாசிகள் முதன் முதலாக அகதி வாழ்க்கையின் அவலத்தை உணர்ந்தனர்... ஹெலிகாப்டர்கள் எப்போது வரும்? மீட்பதற்கு படகுகள் எப்போது வரும்? என நாட்கணக்கில் ஏங்கித் தவித்த துயரம் தோய்ந்த நாட்கள்...

இவற்றின் தொடக்க நாளான 2015 நவமபர் 25-ந் தேதி அனுபவம் குறித்து எழுத்தாளர் விநாயக முருகன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த வருடம் இதே நாள் சென்னை மழையில் மூழ்கியது. கொடுமையான போக்குவரத்து நெரிசல். எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

A diary of the 2015 Chennai flood

எட்டரை மணிக்கு சோழிங்கநல்லூர் சிக்னல். பிறகு ராஜீவ் காந்தி சாலையில் நத்தைபோல பேருந்து சென்றது.

பத்து மணிக்கு கந்தன்சாவடி. பதினோரு மணிக்கு எஸ்ஆர்பி டூல்ஸ். பன்னிரண்டு மணிக்கு டைடல் பார்க்.

ஒரு மணிக்கு மத்திய கைலாஷ். அண்ணா பல்கலைக்கழகம். இரண்டு மணிக்கு கிண்டி. மூன்று மணிக்கு போரூர் வந்தேன்.

போரூரில் மழை வெள்ளம்போல ஓடிக்கொண்டிருந்தது. ஆட்டோக்கள் இயங்கவில்லை. அந்த வழியாக இருசக்கரவாகனத்தில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு வளசரவாக்கம் சென்றேன்.

வீட்டுக்கு திரும்பவே முடியவில்லை.

ஆற்காடு சாலையிலிருந்து கிளைபிரியும் முதல்தெருவுக்குள் இடுப்பளவு நீர். இரண்டாவது தெருவை தாண்டி இரண்டாவது தெரு அனெக்ஸில் எங்கள் வீடு இருந்தது.

அங்கும் இடுப்பளவு நீர் நிற்கும். என்று தோன்றியது. ஏனெனில் அது இரண்டாவது தெருவை விட பள்ளம்.

டிரெயினேஜ் வேறு திறந்து கிடந்தது. இரண்டாவது தெருவில் இடுப்பளவு நீரில் நடந்துச்சென்று பின்வீட்டு வழியாக நுழைந்து மதில்சுவர் மீது ஏறி எனது வீட்டு காம்பவுன்ட் மேலே நடந்துச்சென்று வீட்டுக்குள் சென்றேன்.

வீட்டுக்குள் நுழைந்ததும் எனது மனைவி என்னை அலைபேசியில் அழைத்தாள். அலுவலகத்திலிருந்து சற்றுமுன்புதான் திரும்பியதாகவும், காரை தெருவுக்குள் எடுத்துவரமுடியவில்லை என்று சொன்னாள்.

காரின் பக்கவாட்டு கதவு மூழ்கும் அளவுக்கு தெருவில் மழைநீர் சென்றது. மின்சாரம் வேறு இல்லை ஆற்காடு சாலை தாண்டியிருக்கும் அவளது அலுவலக தோழியின் வீட்டிலேயே தங்கிகொண்டதாகவும் விடிந்ததும் வந்துவிடுவதாக சொன்னாள்.

சென்னை முழுக்க அநேகரின் நிலைமை இப்படித்தான் இருந்தது.

குறிப்பாக வேலைக்கு சென்ற பெண்கள் வீடு திரும்பவே இல்லை. கடும்போக்குவரத்திலும், வெளியில் பெய்யும் மழையிலும் இயற்கை உபாதைகளைகூட அடக்கிக்கொண்டு விடியவிடிய காருக்குள்ளே பொழுதை கழித்தார்கள்.

எனது வீட்டின் பீரோவில் ரெமிமார்ட்டின் பாட்டில் ஒன்று மிச்சம் இருந்தது. ஈரஆடைகளை மாற்றிவிட்டு தலையை துவட்டி ஒரு லார்ஜ் மதுவை அருந்திவிட்டு வாசலுக்கு வரும்போது ஐந்துமணி.

மீண்டும் மழை தொடங்கியது. இன்னும் சற்றுநேரம் மழைநின்றுவிடும். விடிந்ததும் வெளியில் சென்று மனைவியைபத்திரமாக அழைத்துவரவேண்டும்.

எப்போது விடியும் என்று வானத்தை பார்த்தபடி வாசலில் உட்கார்ந்திருந்தேன். என்னைபோலவே கடந்த வருடம் இதே நாள் இதே நேரத்தில் சென்னையில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உறங்கவில்லை.

இதை எல்லாம் எப்படி மறந்துபோனோம்? அவ்வளவு பெரிய விஷயத்தையே மறந்துவிட்டோம். புதிய இந்தியா பிறக்க இன்னும் முப்பத்துநான்குநாள்தான் இருக்குன்னு சொல்றாங்க.

முப்பதுநாள் கழிச்சு இப்ப நடந்துக் கொண்டிருக்கும் கூத்துக்களை எல்லாம் நாம நினைவில் வச்சிருப்போமா என்ன?

செருப்பால் அடித்தால்கூட நாம் அதை அடுத்த நிமிடமே மறந்துவிட்டு வேறு வேலையில் மூழ்கிவிடுவோம். ஒருவேளை புதியஇந்தியான்னு ஏதாச்சும் ஒண்ணு உண்மையில் பொறந்தா அதிலயாச்சும் எல்லாமே சரியாக நடக்கட்டும்.

English summary
Here the Writer Vinayaga Murugan's recall of 2015 Chennai flood memories.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X