• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

96 சினிமாவில் காட்டப்பட்டுள்ளது இனக் கவர்ச்சி இல்லை.. மானுட பேரன்பின் சிறுதுளி!

|
  உங்களோட '96' அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே!- வீடியோ

  சென்னை: அறிமுக இயக்குநர், பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 திரைப்படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆகி தமிழகம், பிற மாநிலங்கள், அமெரிக்கா என எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடியை பறக்கவிட்டு வருகிறது.

  Nostalgia எனப்படும் கடந்த கால இனிமையான நிகழ்வுகளை நினைத்து பார்ப்பதில் இருக்கும் மனதின் திருப்திக்கு தீனி போடுகிறது இந்த படம். ஆட்டோகிராப், பிரேமம் படங்களின் எவர்கிரீன் வெற்றி வரிசையில், 96 சேர்ந்துவிட்டது.

  இதுதொடர்பாக பல்வேறு பேஸ்புக் பதிவுகள் உலா வருகின்றன. தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களை அவர்களே ஷேர் செய்கிறார்கள். இதில்தான் படத்தின் இயக்குநர் வெற்றியும் பறைசாற்றப்படுகிறது. படத்தை அடி நெஞ்சின் ஆழத்தில் இருந்து புகழ்ந்து உருகுகிறார்கள். அப்படியான ஒரு பேஸ்புக் பதிவுதான் இது. முகமது ரஃபீக் என்ற எழுத்தாளர், மானசீகன் என்ற பெயரில் எழுதிய இந்த பேஸ்புக் பதிவை வாசியுங்கள். இல்லை.. இல்லை.. அனுபவியுங்கள்.

  [ வாழ்வின் அத்தனை கட்டங்களையும் அனுபவிப்போம், மகிழ்வுடன் அசைபோடுவோம் #96 ]

  விலங்குகளில் இருந்து மாறுபடுத்தும் காதல்

  விலங்குகளில் இருந்து மாறுபடுத்தும் காதல்

  சமீபத்தில் ஒன்றைக் கவனிக்கிறேன். நேர்மறையான எல்லா உணர்வுகளையும் நாம் அதிகமாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் . கேலி செய்கிறோம் . இதுதான் யதார்த்தம் என்பதல்ல. தவற விட்டிருக்கிற ஒரு வாழ்க்கையை கண்ணை மூடிக் கொண்டு கேலி செய்வதன் வழியாக நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்று நமக்கே ஆறுதல் சொல்லிக் கொள்கிறோம் . அப்படிப்பட்டவர்களுக்கு ' 96 'பிடிக்காதுதான். ஒரு சமூகத்தில் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருப்பது மட்டுமே யதார்த்தம் இல்லை . காமம் இயல்பானது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மனிதன் காமத்தை காதலாக்கிக் கொண்டதால்தான் விலங்கிலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறான்.

  [அடேங்கப்பா என்ன ஒரு பூரிப்பு மோடி முகத்தில்.. அப்போ, 'ஓகேயாகிவிட்டதா?' ]

  நிஜத்திலும் நடக்கிறது

  நிஜத்திலும் நடக்கிறது

  ராமுவும், ஜானுவும் அப்படித்தான் இருக்க முடியும். ஏனென்றால் அவர்கள் நீங்களோ, நானோ இல்லை. மதுரையில் இரண்டு பேராசிரியக் காதலர்கள் தங்கள் காதலுக்காக இன்னும் வேறுஒருவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து கொண்டிருப்பதை நானறிவேன். அநேகமாக அவர்கள் ஓய்வே பெற்றிருக்கக் கூடும் . இதே படத்தை செல்வராகவன் எடுத்திருந்தால் வேறுமாதிரி எடுத்திருப்பார் . அதைத் தவறென்று கூட நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவருடைய கற்பனையில் ஜானுவோ , ராமோ ஒருபோதும் வரமுடியாது என்பதே நிஜம். பொதுவாக நான் பள்ளிக்காதல் படங்களை எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆனால் இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பது இனக்கவர்ச்சி இல்லை. மானுடப் பேரன்பின் சிறுதுளி. தான் நேசிக்கிற பெண் மீது ஒரு ஆண் வைத்திருக்கிற மரியாதைதான் காதலின் அளவுகோல். ஆண்களுக்கு பெண்கள் எப்போதுமே மரியாதை தருவார்கள் . அதை சமூகம் சொல்லித் தந்து விடும் . ஆனால் பெண்களை மதிக்கிற எல்லா ஆண்களுக்குப் பின்னாலும் ஒரு ஜெயித்த காதலோ , தோற்ற காதலோ கண்டிப்பாக இருக்கும் . இந்தப் படத்தின் பலமே காதலியின் மீது அவன் வைத்திருக்கிற மரியாதைதான் .

  சினிமா விமர்சனம்

  சினிமா விமர்சனம்

  எனக்கு த்ரிஷாவின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி என்றவுடன் சரியாக வருமா ? என்று கொஞ்சம் யோசித்தேன் . ஆனால் மனிதர் கிளப்பி விட்டார் . தயக்கமும், பேரன்பும், நிறைந்த உடல்மொழியை காதல் மன்னன் கமலிடம் கூட இத்தனை யதார்த்தமாக நான் பார்த்ததில்லை. இது வேறு வி .சே . த்ரிஷாவுக்கு இது மிக முக்கியமான படம் . படம் மெதுவாகவே நகர்கிறது . இயக்குநர் எந்த சமரசங்களும் செய்து கொள்ளவில்லை . நண்பர்கள் கதாபாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருந்தது . குறிப்பாக தேவதர்ஷினியின் பாத்திரம். நிஜமான காதலில் சக பயணியாக இதுபோன்ற தேவதைகள் கண்டிப்பாக இருப்பார்கள். பள்ளிக்காட்சிகளில் போதுமான செறிவு இல்லையென்று தோன்றியது. அவை இன்னும் கூட ஆழமாக இருந்திருக்கலாம் . பிரிவிற்குச் சொல்லப்பட்ட காரணமும் வலுவாக இல்லை. அது மிக முக்கியமான லாஜிக் குறைபாடு . இசையும், ஒளிப்பதிவும் விசே , திரிஷாவை கதாபாத்திரங்கள் என்ற நிலையிலிருந்து கவிதைகளாக்கி விட்டன .

  ராஜா ராஜாதான்

  ராஜா ராஜாதான்

  படத்தின் இன்னொரு மிக முக்கியமான கதாபாத்திரம் இளையராஜா. தமிழர்களின் வாழ்வில் இளையராஜா ஒரு ரகசிய கண்காணியாய் வீடுகளில் மட்டுமல்ல பள்ளிகளில் கூட ஒளிந்திருக்கிறார் . அந்த உணர்வை இயக்குநர் சரியான கலவையில் தந்திருக்கிறார் . ' நீதானே என் பொன்வசந்தத்தில் ' கௌதம் மேனன் தவற விட்ட இடம் இது . இத்தனைக்கும் இளையராஜா கூடவே இருந்தார் . ஒப்பீட்டளவில் கல்லூரி படத்தில் வரும் ' உன் பார்வையில் ஓராயிரம் ' அதற்கும் மேலேதான் . பல பாடல்களில்' யமுனை ஆற்றிலேக்கு' மட்டும் ஒரு தனிக்கதை வைத்து அது பாடப்பட்ட சூழல் அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தது . பலரும் சொல்லியிருந்தது போல் ஜானுவின் பாடல் தொடர்பான காட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ' எங்கே இருக்கிறாய் கேத்தரின்? ' சாயலில்தான் இருந்தது . நல்லவேளை படத்திற்கு முன்பாகவே நூல் வெளிவந்து விட்டது .

  காட்சி தெரிந்தாலும் சலிக்கவில்லை

  காட்சி தெரிந்தாலும் சலிக்கவில்லை

  பொதுவாக இதுமாதிரியான படங்களில் அதுவா ? இதுவா? என்கிற கேள்வி வரும். இந்தப்படத்தில் அப்படி ஒன்று கிடையவே கிடையாது. இருவருமே தெளிவாக இருக்கிறார்கள் . அவர்கள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய மாட்டார்கள்? என்று பார்வையாளர்களுக்கே தெரியும் . இந்தப் படத்தின் தனித்துவங்களில் அதுவும் ஒன்று . நிறைய பேர் ' சில்லுன்னு ஒரு காதல் ' படத்தில் வரும் ஒரே ஒரு காட்சியின் நீட்சிதான் படம் என்று சொன்னார்கள் . அது ஒரு செயற்கையான படம் . அந்தக் குறிப்பிட்ட காட்சியை பார்வையாளன் ஏற்றுக் கொள்வதற்கான எந்தத் தர்க்கமும் அந்தப் படத்தில் இருக்காது .எனக்கு ' சலங்கை ஒலி ' நினைவுக்கு வந்தது. திருமணமாகி விட்ட பெண் மீது ஒரு ஆண் வைக்கிற நிபந்தனையே இல்லாத பேரன்புதான் அந்தப் படமும் . ஆனால் அந்தப் படத்தில் எனக்கு குறையாகப் பட்டது அவள் கணவனையும் சேர்த்து கமல் கொண்டாடுவதுதான் . அதுதான் அந்த அழகிய படத்தை தடம் மாற்றி விட்டது . எவ்வளவு பேரன்பிருந்தாலும் ஒரு ஆணால் அப்படிச் செய்யவே முடியாது . அப்படியே செய்தாலும் அவனை நிஜமாக நேசிக்கிற பெண் அதை ரசிக்க மாட்டாள். இந்தப்படத்தில் த்ரிஷாவின் குடும்பம் சிங்கப்பூரில் இருக்கிறது என்பதைத் தாண்டி வேறெந்தக் குறிப்பையும் தரவில்லை . கண்டிப்பாக இயக்குநரின் புத்திசாலித்தனம் அது .

  காதலித்திருக்கலாம்

  காதலித்திருக்கலாம்

  படத்தில் 80 kids க்கான பல அம்சங்கள் இருந்தன. குறிப்பாக முழுப்பெயரை இன்ஷியலோடு சொல்வது . 2k kids எல்லாம் பெயர்ச்சுருக்கத்தைக் கூட சுருக்கித்தான் சொல்கிறார்கள். ராம் அப்படியேதான் இருந்தான் ; இருப்பான். ஜானு? இப்படி ஒரு கேள்வி எழலாம். எஸ். ரா வின் கதையொன்றில் ஒரு காட்சி வரும் . மனைவி ஆபிஸிலிருந்து தன்தோழிகளோடு வருவதை ரயில்வே ஸ்டேஷனில் வைத்து அவளுக்குத் தெரியாமல் கணவன் . பார்ப்பான் . அப்போது அவனுக்கு இவள் நம் மனைவியல்ல . வேறு யாரோ என்று தோன்றும் . அதுமாதிரிதான் . அந்த ஓர் இரவில் அவள் வேறு ஜானு. நான் கவனித்தவரை குடும்பத்தோடு வந்திருந்தாலும், தனியாக வந்திருந்தாலும் பெண்கள் அமைதியாகக் கூர்மையோடு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . ஆண்கள்தான் ' அவள முடிடா ' ' படுக்கப் போடு ' என்று ஓவராகச் சலம்பிக் கொண்டிருந்தார்கள் . யாரென்று பார்த்தேன் . பெரும்பாலும் முரட்டு சிங்கிள்கள் . எந்த தெய்வத்தாலும் இதுகளுக்கு சாபவிமோசனம் கிடைக்கப் போவதில்லை. என்வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் வந்து போயிருக்கின்றன . ராமைப் போலவோ , ஜானுவைப் போலவோ காதலித்திருக்கலாமோ ? என்றுதான் படம் முடிந்து வரும் போது தோன்றியது . இந்தப் படத்தின் பலம் அதுதான் .

   
   
   
  English summary
  A facebook page praising 96 the movie for it's love and Nostalgia feel.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more