For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைஞர் 94’ - ஒரு விவசாயி மகனாக நன்றியுடன் வணங்குகிறேன்! #HBDKarunanidhi

By Shankar
Google Oneindia Tamil News

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னதாக, ஊருக்குச் சென்றிருந்த போது தந்தையின் நண்பர் ஒருவர் வந்திருந்தார்.

'ஏய் சபாபதி, கருணாநிதி உன்னைக் கேட்டான்ப்பா. பெரிய மணி, சக்கையா, ராஜபாண்டி என நம்ம எல்லாத்தையும் கேட்டான்யா...'

A farmer's son wishing Kalaignar94

'அவன் பெரிய கில்லாடிப்பா. ஞாபகத்திலே அவனை அடிச்சிக்க முடியாது. வேறென்ன சொன்னான்'

'ஆபீசருங்க வந்துட்டாங்க, ரொம்ப நேரம் பேச முடியல்லே. எல்லாரையும் கூட்டிட்டு வா ன்னும் சொன்னான்'

அப்பாவின் நண்பர் 'ஆபீசருங்க வந்துட்டாங்க' ன்னு சொல்லும் வரையிலும், அன்றைய முதல்வர் கலைஞரைப் பற்றித்தான் இருவரும் பேசிக் கொள்கிறார்கள் என்று துளி கூட சந்தேகம் வரவில்லை..

வேறு யாரோ அவர்களின் பள்ளிக்கால நண்பர் கருணாநிதியாக இருக்கக்கூடும் என்று தான் நினைத்தேன்.

நண்பர் சென்ற பிறகு, அப்பாவிடம் கேட்டேன். 'ஆமாண்டா, கருணாநிதியைப் பத்தித் தான் பேசுனோம். மணி மெட்ராஸ் போயிருந்த போது பார்த்தானாம். அதைத்தான் சொன்னான்' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்.

ஒரு சாமானிய கிராமத்து மணி, எப்படி முதல்வரைச் சந்தித்தார் என்பது, வியப்பாகவே இருந்தது. ஆனாலும் அப்பா விவரித்துச் சொன்னபோது, எளிதில் யாரும் அணுகக் கூடியவர் கலைஞர் என்பது புரிந்தது.

அப்படியே மனசு சிறுவயது ப்ளாஷ்பேக்கிற்கு சென்றது.

'அந்த கம்பு, கிடுவு (தென்னங்கீற்று தட்டி) எல்லாம் வடக்கே கொண்டு போ'. அப்பா ஒருத்தருக்கு கட்டளை இட்டுக் கொண்டிருக்கிறார். வீட்டில் வாழைத் தோட்டத்திற்காக உள்ள கம்புகளும், வீட்டு உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த கிடுவுகளும் கிளம்பிப் போகிறது.

தாத்தா வருகிறார். 'என்ன அம்மாளு (அம்மாவிடம்), இவனுக்கு என்ன கிறுக்கா. ஏன் நம்மவீட்டு கிடுவு கம்பை எடுத்து கருப்புச் சட்டைக்காரன் (திமுக காரர்) கிட்டே கொடுத்து அனுப்புறான். அவங்க மீட்டிங்கிற்கு நம்ம வீட்ல இருந்துதான் போனுமா?'

அம்மா வழியாக, தாத்தாவின் கோபம் அப்பாவுக்குப் போய் சென்று விடும் என்று அப்படிச் சொல்கிறார்.

அடுத்த வாரமே, அப்பா பண்ணினதை தாத்தா பண்ணுகிறார். வந்தது காங்கிரஸ்காரர், கம்பும் கிடுவும் போனது காங்கிரஸ் கூட்டத்திற்கு, அம்மாவிடம், அப்பா ஏதும் சொன்னதும் இல்லை. தாத்தாவிடம் கேட்டதும் இல்லை.

ஒரே வீட்டிலிருந்து இரண்டு கட்சிக் கூட்டத்திற்கும் அதே கம்பு, கிடுவு போனது எங்க வீடாக மட்டுந்தான் இருக்கக் கூடும்.

எங்க ஊரில் திமுகவை வளர்த்த இளைஞர்கள் கூட்டத்தில் எங்கப்பாவும் ஒருவராம். திமுக முதல் தடவையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது, எப்போதும் ஊரில் முதல் ஓட்டுப் போடும், அப்பாவின் பெரியப்பாவுக்கு முன்னதாக முதல் ஓட்டுப் போட்டதும் எங்கப்பாதானாம்.

ஒரு இடைத்தேர்தலுக்காக, அப்போது அமைச்சராக இருந்த கலைஞர், எங்க ஊரிலும் தங்கி தேர்தல் வேலை செய்த போது ஏற்பட்ட நெருக்கம்தான், மேலே சொன்ன உரையாடலுக்கான காரணம்.

அதற்குப் பிறகு கலைஞர் பல களம் கண்டு எட்டாத உயரத்திற்குச் சென்றாலும், ஏதோ ஒரு சிற்றூரில் ஒரு இடைத்தேர்தலில் எத்தனையோ வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட குறுகிய கால நட்பைக் கூட மறக்காதவர்.

இன்னும் ஒரு சிறுவயது சம்பவம் நினைவில் ஆடுகிறது.

கலைஞர் மீண்டும் எங்கள் கிராமத்திற்கு பிரச்சாரத்திற்காக வந்திருக்கிறார். கையை உயர்த்தி, '16 அடி இருக்கும் போதே உங்கள் வாழைக்கு தண்ணீர் திறந்து விட்ட கை இந்தக் கை' என்கிறார். அப்போது எனக்கு இந்த வார்த்தைகள் நினைவில்லை. ஆனால் அவர் பேசிய விதம் மனதில் பதிந்து இருந்தது.

முதல்வராக ஜெயலலிதா இருந்த நேரம். மாவட்டம் முழுவதும் நெற் பயிர்கள் கதிர் பருவத்தில் இருக்கின்றன. அதிகாரிகள் அணையிலிருந்து தண்ணிர் திறக்க மறுக்கிறார்கள். ஆளுங்கட்சி அமைச்சர், எம்.எல்.ஏக்கள் எல்லாரும் விவசாயிகளுடன் சேர்ந்து போராடுகிறார்கள். கடைசி வரையிலும் தண்ணீர் திறந்து விடாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கதிருடன் கருகிப் போகின்றன. தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவை மக்கள் சாபம் இடுகிறார்கள். அப்பா வருத்தத்துடன், அவன் இருந்தா தண்ணீர் திறந்து விட்டிருப்பான். இந்தம்மாவுக்கு தகவல் போய் சேர்ந்திருக்குமான்னே தெரியாது என்றார்.

அப்போதான் 16 அடி தண்ணீர் விவகாரத்தைச் சொன்னார். கையை உயர்த்திப் பேசிய கலைஞரின் ஆவேசமான பேச்சு என் நினைவில் மீண்டும் வந்தது.

கலைஞர் என்றால் அவருடைய அபார ஞாபகசக்தி, பழகியவர்களை எப்போதும் அரவணைத்துக் கொள்ளுதல், விவசாயிகளுக்கான ஆதரவு, அவர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள், கால்வாய், ஏரிகள் பராமரிப்பு என்பதுதான் எப்போதுமே என் கண்ணுக்கு முன் உடனே வரும்.

கலைஞரின் சில தனிப்பட்ட முடிவுகளை நான் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனாலும் விவசாயம், தொழில்கள், கணிணித் துறை உள்ளிட்ட தமிழக முன்னேற்றத்திற்கு கலைஞருக்கு நிகர் யாரும் இல்லை என்பது ஆதாரப் பூர்வமான உண்மை.

கடைசியாக அவர் ஆட்சி செய்த பத்து ஆண்டுகளும் எந்த ஒரு கூடுதல் வரி விதிப்பும் இல்லாமல் பல புதிய திட்டங்களை நிறைவேற்றியவர். இயற்கை ஒத்துழைக்கும் வரை தமிழர்களுக்காக உழைப்பேன் என்றவரை, அவர் கூறும் இயற்கை சற்று ஒய்வு கொடுத்துள்ளது.

கலைஞர் அவர்கள் நூறு ஆண்டுகள் கடந்தும் வாழ்ந்து தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று ஒரு விவசாயின் மகனாக கரம் கூப்பி நன்றியுடன் வணங்குகிறேன்.

- இர. தினகர்

English summary
Here a hearty wish to Karunanidhi from a south district farmer's son who grown up with the latter's politics and governance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X