
‘நெஞ்சுக்கு நீதி’ போல் பில்டப்! குப்பையை கொளுத்தி இன்ஸ்டா ரீல்! விவேகமற்ற விவேக்குக்கு வந்த வினை..!
திருப்பத்தூர் : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நெருப்பின் பின்னணியில் நடந்து வருவதை பார்த்து, தானும் அதே போல பில்டப் செய்ய நினைத்து குப்பை கிடங்கில் குவித்து வைத்திருந்த குப்பைகளை எரித்து இன்ஸ்டா ரீல் எடுத்து வெளியிட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முதல்வர் ஸ்டலினின் மகனும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் மே 20ஆம் தேதியான நேற்று தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட்,பிரியாணி-இது திராவிட மாடலா? சீமான்

நெஞ்சுக்கு நீதி படம்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் காட்சி அமைப்பு, அனல் தெறிக்கும் வசனங்கள் என படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருப்பது உதயநிதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த படத்தின் வெற்றியால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூரில் அதிர்ச்சி
அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சினிமா தியேட்டர்களில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி திமுகவினர் மக்களை படம் பார்க்க அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நெருப்பின் பின்னணியில் நடந்து வருவதை பார்த்து, தானும் அதே போல பில்டப் செய்ய நினைத்து குப்பை கிடங்கில் குவித்து வைத்திருந்த குப்பைகளை எரித்து இன்ஸ்டா ரீல் எடுத்து வெளியிட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவர் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சுகாதார ஆய்வாளர் மீது புகார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக விவேக் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் உதயநிதி நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை தனது நண்பர்களுடன் சென்று பார்த்துள்ளார் விவேக். அப்போது நாயகன் உதயநிதி ஸ்டாலின் நெருப்பின் பின்னணியில் நடந்து வருவது போன்று காட்சிகளை பார்த்து விட்டு தானும் இது போல நெருப்புக்கு மத்தியில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

குப்பைக்கு நெருப்பு
இதற்கிடையில் திருப்பத்தூர் ப.உ.ச நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்று குப்பையை எரித்து, எரியும் குப்பை முன்பு வீடியோ மற்றும் புகை படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதே போன்று அவர் வீடியோ எடுக்க உதவியாக இருந்த நகராட்சி ஊழியர் ஒருவரை பணி இடை நீக்கம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் குப்பையை எரிக்கவில்லை என்றும் குப்பை எரிந்து கொண்டிருக்கும் போது அங்கு தான் சென்றதை தனக்கு தெரியாமல் யாரோ வீடியோ எடுத்து பின்னணி இசையுடன் வெளியிட்டுள்ளதாக விவேக் கூறியுள்ளார்.