• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்யசீலன் ஸ்பெக்ட்ரம் ராஜாவான கதை! - 2ஜி புத்தகத்தில் ராசா உடைக்கும் ரகசியங்கள்

By Bbc Tamil
|

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள 2G SAGA Unfolds' புத்தகம்.

2G Saga Unfolds
BBC
2G Saga Unfolds

"இந்தப் புத்தகத்தை எந்த அரசியல் கண்ணாடியும் இல்லாமல் அணுகுங்கள். அப்போதுதான் 2ஜி வழக்குக் குறித்து முழுமையாக புரிந்துக் கொள்ள முடியும். என் தரப்பு நியாயங்களையும் உங்களால் உணர முடியும்" என்று புத்தக வெளியீட்டு விழாவில் ஆ.ராசா குறிப்பிட்டார்.

2ஜி வழக்கு குறித்த தரவுகள், சி.ஏ.ஜி அறிக்கை, அமைச்சக உரையாடல்கள் குறித்த தகவல்கள் என எல்லாம் கடந்து அவர் தன் தரப்பு நியாயத்தை வாசகர்களிடம் எடுத்துரைக்கையில், ஜார்ஜ் ஓர்வல் முதல் கருணாநிதி வரை பல தலைவர்கள் கூறியவற்றை மேற்கோள்களாக எடுத்துக் காட்டி இருக்கிறார்.

எட்டு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் இந்தப் புத்தகம், 2 ஜி வழக்கு விவகாரங்களை எல்லாம் கடந்து, ஆ. ராசாவின் சுயசரிதையாகவும் விரிகிறது.

அது சத்யசீலன் காலம்

ராசாவுக்கு முதன்முதலாக வைக்கப்பட்ட பெயர் சத்யசீலன் அதாவது உண்மையான மனிதன். அந்த சத்யசீலனின் காலத்தில் அப்பாவின் அருகே அமர்ந்து மெய் உருகி பூஜைகளில் ஈடுபடும் ஓர் ஆத்திகனாக, எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்கும் ஒரு சுட்டியாக இருந்ததாக தன் நினைவுகளை தூசிதட்டி மீட்டு எழுதி இருக்கிறார்.

ராஜாவென்ற பெயர் தனது பள்ளி ஆசிரியராக இருந்த அக்காவின் கணவரால் சூட்டப்பட்டது என்கிறார். பெயர் மாற்றப்பட்டாலும் தான் எப்போதும் உண்மையையும், நியாயத்தையும் இறுகப்பற்றி வாழந்தததாகவே வாய்ப்பு இருக்கும் ஒவ்வொரு வரிகளிலும் இந்த 222 பக்க புத்தகத்தில் கூறி இருக்கிறார் ஆ.ராசா.

ஐந்தாம் வகுப்பு வரை தனது சொந்த கிராமமான பெரம்பலூரில் உள்ள வெலூர் கிராமத்தில் படித்த அவர், மேற்கொண்டு படிக்க பாடலூர் பயணமானார். அப்போது அவரை வழியனுப்ப வந்த அவரது அம்மா, திருடாதே; பொய் சொல்லாதே; பிச்சை எடுக்காதே' என சொல்லியதாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

திராவிட கொள்கை, பெரியார், அண்ணா, கருணாநிதி என அனைத்தும் அறிமுகமானது பாடலூரில்தான் என்றும், ஆத்திகனாக இருந்த அவர் திராவிட கொள்கைகளை பற்றி நாத்திகனாக மாறியது, அரசு ஊழியனாக இருக்க அவரின் பெற்றோர் விரும்பிய போதும் அவர் அரசியல்வாதியாக உருவெடுத்தது என எல்லாவற்றுக்கும் காரணம் பாடலூர் விடுதி வாழ்க்கைதான் என்கிறார்.

அது ராஜா காலம்

ஆ. ராசா
BBC
ஆ. ராசா

அரசியல் மீது ஆர்வம் இருந்தாலும், கல்லூரி காலத்திலிருந்தே திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றி இருந்தாலும், அரசியல்தான் தன் எதிர்காலமாக இருக்கப் போகிறது என்று தான் நம்பவில்லை என்றும், வழக்கறிஞராக பதிவு செய்து வழக்காடுதல்தான் தம் தொழில் என்று இருந்தவரை, அரசியலை எதிர்காலமாக ஆக்கிக் கொள், அதில் பணியாற்று என்று வழிநடத்தியது தனது மூத்த அண்ணன் ராமச்சந்திரன்தான் என்று சொல்லும் ராஜா, அரசியலில் தனக்கு வழிகாட்டியாக இருந்தது முரசொலி மாறன் என்று 2G Saga Unfolds புத்தகத்தில் பதிவு செய்,.

அரசியலில் தீவிரமாக இயங்கியபோதும், தான் எப்போதும் மனித உறவுகளை மதித்ததாக சொல்லும் ராசா, பணம்தான் அனைத்தையும் நிர்ணயம் செய்யும் என்றால், மனிதர்கள் அனைவரும் எந்த உணர்வுமற்ற பணம் ஈட்டும் இயந்திரங்களாக மாறிவிடுவார்கள் என்று தன் தந்தையின் மரணம் பற்றி விவரிக்கும் ஒரு பத்தியில் குறிப்பிடுகிறார்.

மேலும், சிறையில் இருந்தபோது, துவண்டுவிடாமல் தான் உறுதியாக இயங்க காரணம் தான் பேணிய மனித உறவுகள் தமக்கு அளித்த நம்பிக்கைதான் காரணம் என்று விவரிக்கிறார்.

வைகோ திமுகவிலிருந்து விலகிய போது, ஒரு துடிப்பான இளைஞருக்கான இடம் கட்சியில் உருவானது. அப்படியான சூழலில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. அதில் வெற்றி பெற்று 33 வயதில் நாடாளுமன்றத்திற்கு சென்றேன் என்று விவரிக்கும் அவர், துணை அமைச்சராக இருந்த போது துடிப்பாக கேள்வி நேரங்களில் செயல்பட்டதாக, இதற்காக மூத்த அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை பலரால் பாராட்டப்பட்டதாகக் கூறுகிறார்.

2007 ஆம் ஆண்டு மே மாதம், தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தபின், அதன் அமைச்சராக பொறுப்பேற்று அந்தத் துறையில் பல சாதனைகளை புரிந்ததாக தரவுகளை காட்டும் ராசா, தபால்துறையை கணிணிமயமாக மாற்றியது, கைப்பேசியை கடைக்கோடி கிராமத்தின் கடைசி மனிதரிடம் கொண்டு சேர்த்தது என அந்தத் துறை தனக்கு வழங்கிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி செயல்பட்டதாக கூறுகிறார்.

எனது செயல் பலரை கோபமடைய வைத்தது, பகையை ஈட்டித் தந்தது, பின் 2 ஜி வழக்கிலும் சிக்க வைத்தது என்று விவரிக்கிறார்.

அது ஸ்பெக்ட்ரம் ராஜா காலம்

தான் தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தையும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் எளிய மனிதர்களிடம் கொண்டு போய் சேர்க்க நினைத்தேன்... அதற்காக, அனைத்து சட்டத்திட்டங்களையும் மதித்து டிராய் பரிந்துரையின் பெயரில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன், சி.டி.எம்.ஏ தொழிற்நுட்பத்தில் இயங்குபவர்கள் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பத்தில் இயங்கவும், அதுபோல ஜி.எஸ்.எம் இல் இயங்குபவர்கள் சி.டி.எம்.ஏ வில் இயங்கவும் அனுமதித்தேன். இது பல பெரும் நிறுவனங்களை கோபமடைய வைத்தது என்கிறார்.

கார்த்திக் சிதம்பரம் மூலமாக தன்னை சந்தித்த ஏர்டெல் நிறுவனத் தலைவர் மிட்டல், டிராயின் பரிந்துரைகள் அனைத்தும் சி.டி.எம்.ஏ -வுக்கு ஆதரவாக இருக்கிறது என்று அழுத்தம் கொடுத்ததாகவும், மிட்டலுடன் மேற்கொண்ட சந்திப்பை தான் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், பிரதமர் எப்போதும் தனக்கு ஆதரவாகவே இருந்ததாகவும் இந்த நூலின் மூலமாக சொல்கிறார் ஆ. ராசா.

ஆ. ராசா
Getty Images
ஆ. ராசா

பெருநிறுவனங்களின் சண்டைதான் 2 ஜி முறைகேடு என்ற குற்றச்சாட்டு எழ காரணம், அவர்களது சண்டையின் காரணமாகவே தாம் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாக கூறும் ராசா, காங்கிரஸும் தன்னை காக்க தவறிவிட்டது என்கிறார்.

ப. சிதம்பரம் மீது சாடல்!

"காங்கிரஸில் பல தலைவர்கள் என்ன நடக்கிறது? 2 ஜி வழக்கு யாரை வீழ்த்த...எதனால் இந்த வழக்கு என்று புரியாமல் செயல்பட்டார்கள், புரிந்த தலைவர்களும் ராசா என்ற தனி மனிதனை முன்னிறுத்தி, அவனை பலிகடாவாக்கி, கட்சி மீது இருந்த அனைத்து களங்கத்தையும் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால், முதலில் நான் வீழ்த்தப்பட்டேன், பின் காங்கிரஸும் வீழ்த்தப்பட்டது." என்று சொல்லும் ராசா, 2ஜி ஒதுக்கீடு பரபரப்பாக பேசப்பட்டக்காலத்தில், விமான நிலையத்தில் தன்னை பார்த்தும் பேசாமல் சிதம்பரம் சென்றதாக விவரிக்கிறார்.

2ஜி ஒதுக்கீட்டால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் அரசாங்கத்திற்கு நஷ்டம் என்று பேச காரணமாக அமைந்த சி.ஏ.ஜி -யின் அறிக்கையையும், சி.ஏ.ஜி யாக இருந்த வினோத் ராயையும் நோக்கி ஓப் அத்தியாயம் முழுவதும் பல கேள்விகளை எழுப்புகிறார்.

உண்மைக்கு நேர்மாறாக, அனைத்து அமைப்புகளுக்கும் தாம் மேலானவர் என்ற நினைப்பில் ராய் செயல்பட்டதாக ஆ.ராசா இந்தப் புத்தகத்தில் குற்றஞ்சாட்டுகிறார்.

அதுபோல, பாரதிய ஜனதா கட்சியும், ஊடகங்களும், இடதுசாரிகளும் 2 ஜி ஒதுக்கீட்டை திறந்த மனப்பான்மையுடன் அணுகாமல், முன் முடிவுடன் செயல்பட்டதாக வருத்தப்படும் ஆ. ராசா, தான் பொறுப்பேற்றபின் கைப்பேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல லட்சம் உயர்ந்ததாக கூறுகிறார்.

இதற்கு, டெலிகாம் செயலாளர் சி.ஏ.ஜி-க்கு அனுப்பிய ஒரு கடித்தையே ஆதாரமாக காட்டுகிறார்.

"ஒரு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்னை கிண்டலாக, ஸ்பெக்ட்ரம் ராஜா" என்றார். உண்மையில் அதில் எனக்கு பெருமைதான். தொலைத்தொடர்பை அனைவரிடமும் கொண்டு சேர்த்த நான் ஸ்பெக்ட்ரம் ராஜாதான் என்கிறார் ஒரு காலக்கட்டத்தில் எப்போதும் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தியாக மட்டுமே இருந்த ஆ.ராசா.

இவை அனைத்தையும் கடந்து சிறை செல்வதற்கான முன் தயாரிப்பாக சைவம் பழகியது; காங்கிரஸைப் பற்றி தவறாக எழுதிய ஒரு பத்திரிக்கையாளருக்கு காங்கிரஸின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி விருது அளித்தது; சாதிக் பாட்ஷா மரணம்; கலைஞர் தொலைக்காட்சி, கனிமொழி என பரபரப்பான திரைப்படத்தின் சுவாரஸ்யத்துடன் செல்கிறது 2G SAGA Unfolds' புத்தகம்.

பிற செய்திகள்:

BBC Tamil
 
 
 
English summary
பெரு நிறுவனங்களின் மோதலால் வந்ததுதான் 2ஜி சிக்கல் என்றும், காங்கிரஸ் கட்சியும் தன்னைக் கைவிட்டுவிட்டதாகவும் பல சம்பவங்களை இந்தப் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார் ராசா.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X