For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது அப்பாவுக்கு...!

Google Oneindia Tamil News

சென்னை: ஒன்இந்தியா தமிழ் வாசகர் ஆய்க்குடியின் செல்வன் (எ) மணிகண்டன் நமக்கு அனுப்பியுள்ள தந்தையர் தினம் தொடர்பான மடல்...

அப்பா !

விவேகமும் விளையாட்டும் கற்ற இடம்.

பிஞ்சு விரல்களில் விளையாட திருப்புளி தந்து எனது மின்னியியல் வாழ்வினை ஆறுமாத குழந்தையிலே ஊருக்கு அறிவித்தீர்கள்.

A reader's piece on his father

தோள் மீது எனை தூக்கி மலையேறி கடவுளை தரிசித்த நாள் அன்று கடவுள் கேட்கிறார் என் மீது பல்லக்கு ஏறி எனை தரிசிக்க வந்தவனே உனக்கு கிடைத்த வரம் எனக்கும் இல்லையோ, பிறவி ஒன்று மேலும் தர தீர்மானித்திருக்கின்றேன் நீயாய் நானும் புவியிலே தவழ்ந்திட வேண்டுமென்று.

கால் கூட எட்டாது சிறிய மூன்று சக்கர மிதிவண்டி வேண்டுமென்று மதிய உணவு உண்ண கூட அனுமதிக்காது கதவினை தாழிட்டு சிறைபிடித்தவன் நான். கால்படாது சக்கரம் தரையில் சுழன்ற பின்னரே அன்னம் இட அனுமதித்தவன் நான்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொலைத்தும் எனக்கான கருப்பு நிற காலணி வாங்கி தர சலித்துக்கொண்டதில்லை நீங்கள்.

நான் ஒருவனாய் இருந்த காலத்தும் சரி இன்னொருவன் வந்த போதும் சரி நான் நானாக பாவிக்கப்படுவது நமது வீட்டுல் மட்டும்தான்.

நான் வரைந்த குடைக்கு வானவில்லின் வண்ணம் தீட்டியது நீங்கள்தானே. அம்மாவின் கோபத்தில் அடுக்களை நடையில் வைத்து பதம் பார்க்கப்பட்ட எனது பந்து விளையாடும் மட்டைக்கு நூலும் பசையும் கொண்டு மருந்திட்ட அப்பா எனக்கு மட்டுமே.

தரையில் படாது கையில் சுழற்றி எடுக்கும் பம்பரம் உங்களோடுதானே கற்றேன். உங்களை கண்டு பொறாமைப்பட்ட எனது நண்பர்கள் நிறைய உண்டு.

அப்பாவும் மகனுமாய் இன்றும் ஊர் சுற்றுவது நாமாய்தான் இருப்போம். தென்காசி நகர வீதிகளில் பெரிய கோவிலின் எதிர் திசையில் பெயரே இல்லாத தேநீர் கடையில் வடையும் தேநீரும் அருந்துவதுடன் நமது நகர உலா நிறைவு செய்வது. அந்திமாலை சூரியனும் கைகோர்த்து நடக்க விரும்பி வினவுவதுண்டு என்னோடு.

எனக்கு ஆற்றில் நீச்சல் பழக அனுமதி தரவில்லை என்றாலும் கடன் வாங்காது கரை சேர வாழ்க்கை நீச்சல் கற்றுக் கொடுத்ததுண்டு. ஒரே குடையின் பிடியின் அச்சாரத்தின் தாழ்வாரத்தில் நானும், காற்றோ மழையோ காசோ எதுவுமே எந்த திசையில் இருந்து வந்தாலும் ஒரே பிடியின் தாழ்வாரத்தில்தான் நானும்.

நான் உங்களது கைக்குள் இல்லை, உங்களது கைப்பற்றி நடக்கின்றேன்!

சொல்லில் மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை உயிர் இருக்கின்றது. ஒவ்வொரு மகனின் முதல் நாயகன் "அப்பா" எனக்கும் என்றும் என்றென்றும்! ஆம் அப்பா ! அப்பா !

English summary
This is a reader's piece on his father on the eve of Fathers day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X