For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவு 8.30க்கு சோழிங்கநல்லூர்- அதிகாலை 3 மணிக்கு போரூர்... ஒரு 'டிராபிக் ஜாம்' டிராஜெடி!!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் டிராபிக் ஜாமில் சிக்கிய லட்சக்கணக்கானோர் அந்த அனுபவத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது... சோழிங்கநல்லூரில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு போரூருக்கு அதிகாலை 3 மணிக்குதான் வந்து சேர முடிந்தது என எழுத்தாளர் விநாயக முருகன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் நொந்து பதிவிட்டிருப்பது நேற்று முன்தின டிராபிக் ஜாம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எவ்வளவு பெரிய டிராஜெடியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நிதர்சனமாக வெளிப்படுத்துகிறது.

"ராஜீவ்காந்தி சாலை" "சென்னைக்கு மிக அருகில்" நாவல்களில் வாசிப்பாளருடனான அன்னோன்யத்தை உருவாக்கும் வகையிலான எழுத்துநடை வளமிக்கவர் எழுத்தாளர் விநாயகன் முருகன் . டிராபிக் ஜாமில் சிக்கிய அவருடைய சிந்திக்க வைக்கும் ஃபேஸ்புக் பதிவு:

A status for our concern about our city

வாழ்க்கையில் ஒரு சில இரவுகளை மறக்க முடியாது. நேற்றைய இரவு நரகம் போல இருந்தது. விடியல் இல்லாத அந்த இரவு நீண்டுக்கொண்டே செல்வதுபோல உணர்ந்தேன். எட்டு மணிக்கு அலுவலக பேருந்தில் இருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன். எட்டரை மணிக்கு சோழிங்கநல்லூர் சிக்னல். பிறகு ராஜீவ் காந்தி சாலையில் நத்தைபோல பேருந்து சென்றது.

பத்து மணிக்கு கந்தன்சாவடி. பதினோரு மணிக்கு எஸ்ஆர்பி டூல்ஸ். பன்னிரண்டு மணிக்கு டைடல் பார்க். ஒரு மணிக்கு மத்திய கைலாஷ். அண்ணா பல்கலைக்கழகம்.

இரண்டு மணிக்கு கிண்டி. மூன்று மணிக்கு போரூர் வந்தேன். வழிநெடுக மழைநீர் சாலையில் இடுப்பளவு ஓடுகிறது. பேருந்திலேயே உறங்கினேன்.

நாங்கள் யாரும் இரவு உணவு சாப்பிடவில்லை. பேருந்திலிருந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பிஸ்கெட் கொடுத்தார். சிறு உறக்கம் வந்து உறங்கிவிட்டோம். கொடும்கனவு கண்டு திடுக்கிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் எல்லா இடங்களிலும் மக்கள் வெளிறிய முகங்களுடன் நிற்கிறார்கள். பெண்கள் மிகுந்த சிரமத்துடன் நடக்கிறார்கள். இயற்கை உபாதையை கூட அடக்கிக்கொண்டு பெண்கள் பேருந்தில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள்.

மிகுந்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகம் சென்ற எனது மனைவி அவரது தோழியின் வீட்டிலேயே தங்கிக்கொண்டார். இயற்கை சீற்றங்களை பற்றிய ஹாலிவுட் படங்களில் வருவதுபோல சென்னை நகரமெங்கும் ஒருவித பீதி படிந்துள்ளது.

பேருந்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு அலைபேசியில் பேசினார்கள். தில்லை கங்கா நகர் சப்வே மூடிவிட்டார்கள். வேளச்சேரி சுத்தம். தயவு செய்து கிண்டி வழியா போய்டுங்க, சென்னை பைபாஸ் பிடிங்க ஆலோசனைகள், அக்கறை நிறைந்த விசாரிப்புகள் என்று பேருந்து முழுக்க உரையாடல்கள் நிறைந்திருந்தன.

A status for our concern about our city

நடைபாதை வாசிகள், குடிசைவாசிகள் நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை கூட செய்யமுடியவில்லை.

இந்த மழை மனிதர்களின் மனஉறுதியை சமன்குலைத்துப்போட்டு விட்டது. கோவனை கைதுசெய்ய ஆர்வம் காட்டிய போலீஸ்காரர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர்கள், கல்லூரி மாணவர்களை பின்னியெடுத்த போலீஸ்காரர்கள் எல்லாரும் சாலையோரமாக கைகட்டி அமைதியாக நிற்கிறார்கள்.

இளைஞர்கள் நின்றுபோன தங்கள் பைக்கை தலைகுனிந்து இடுப்பளவு நீரில் நகர்த்தி சென்றார்கள். சிலர் வாகனத்தை பாலத்துக்கு அடியில் நிறுத்தி பூட்டிவைத்துவிட்டு நடந்து சென்றார்கள். ஒரு மணி நேர பயணம் என்பது ஏழு மணி நேர நரகமாக மாறியுள்ளது.

சென்னையில் சர்வேதேச தரம் வாய்ந்த சாலை என்று சொல்லும் இங்கேயே முறையான வெள்ளநீர் வடிகால் இல்லை. வேறு எங்கு இருக்கும்?

சென்னை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடலை பார்த்து சரிந்து நிற்கும் பகுதி செங்கல்பட்டு, நீர் மேட்டிலிருந்து பள்ளத்துக்கு செல்ல வேண்டும். திருவள்ளுவர், காஞ்சிபுரம் மூன்று மாவட்டங்களுக்கு முதன்மை நீர் வடிகால் பள்ளிக்கரணை சதுப்புநிலம். இங்கு இவ்வளவு கட்டடங்கள் கட்டியது மிகப்பெரிய பிழை. இந்த பகுதியை சுத்தமாக அழித்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கட்டியதன் விளைவு. அனுபவிக்கிறோம்.

A status for our concern about our city

மீண்டும் இந்த கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு ஏரியை பழையபடி கொண்டுவரமுடியுமா? வளர்ச்சி என்பது நூற்றில் தொண்ணூறு பேரை அழித்துவிட்டு பத்து பேருக்கு இருக்கக்கூடாது. அது தொண்ணூறு பேர்களுக்காக இருக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி சாலை நாவலில் இறுதி அத்தியாயத்தில் ஒரு வரி வரும். வளர்ச்சி என்பது ஒரு வழி பாதை. அது திரும்பி வரமுடியாத முன்னேறி மட்டும் செல்லக்கூடிய பாதை.

முறையான வடிகால் வசதி இல்லாத திட்டமிடாத மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த சென்னைக்கு இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீரால் அழிந்துபோகும் அபாயம் உள்ளது

இவ்வாறு விநாயக முருகன் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு படைப்பாளியின் அறம்சார்ந்த கோபம்...அல்ல...அல்ல சாபம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இது பலித்திடுவதற்கு முன்னர் விழித்திடுதல் அவசியம்!!

English summary
Writer Vinayaga murugan registered a fantastic status about rain and traffic in Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X