For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போய் வா மயிலு..!

மயிலு கேரக்டர் மூலம் மனதைக் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

By Hema Vandana
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீதேவிக்கு கமலின் இரங்கல் வீடியோ | Oneindia Tamil

    சென்னை: பொதுவாக சிலரைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை. ஏதாவது ஒரு சமயத்தில் பார்க்கிறபோதுகூட பெரிதாக அதை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் திடீரென்று அவர்கள் இயற்கை எய்துகிறபோதுதான் நெஞ்சம் பதைக்கிறது. மனசு கிடந்து அடிக்கிறது.

    எங்கோ ஓரிடத்தில் - இந்த பூமிப்பந்தின் ஒரு மூலையில் அவர்களும் நன்றாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம் அடி மனதில் ஒரு குரல் ரகசியமாக ஒலித்துக்கொண்டே இருக்கும். அத்தகையவர்களின் மரண செய்தி நம் காதில் விழுந்த பிறகுதான் அடடா? இவர்களை நாம் இதுவரை பார்க்காமல் போய்விட்டோமே, பழகியிருந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாமே, கூடுதலாக அன்பு செலுத்தியிருக்கலாமே,,, அவர் மனம் புண்படும் வகையில் பேசாமலிருந்திருக்கலாமே என்று தோன்றும்.

    நம்மைச் சுற்றியுள்ள - நமக்கு அறிமுகமான - நம்மோடு நட்புகொண்ட நூற்றுக்கணக்கானோரை மறந்துவிட்டு, மறைந்துபோன நபரின் நினைவலைகளே நம்மில் சுழன்று கொண்டிருக்கும். அவ்வாறு திடீரென்று நம் மனதை பதற வைத்தவர் - கண்களைத் துளிர்க்க வைத்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

    எந்திரமயமான வாழ்க்கை

    எந்திரமயமான வாழ்க்கை

    பரபரப்பான இந்த சூழலில் - எந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில் - எதிர்பாராத பல்வேறு சமுதாய சம்பவங்களில் - நமது சொந்த பிரச்சினையின் ஆழத்தில் - புதிய முகங்களின் தரிசனத்தில் இவர்களை பற்றியெல்லாம் இயல்பாக யோசிக்க நம்மால் முடிந்ததில்லை. அவர்களும் நம்மிடமிருந்து மறைந்து விடுகிறபோது இதயம் முழுவதும் அவரே நம்மை ஆக்கிரமித்து விடுகிறார். கடந்த 2 நாட்களாக நடிகை ஸ்ரீதேவியும் அப்படித்தான் ஆக்கிரமித்துள்ளார். ஏனெனில் சாகிற வயது அல்ல அது. அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார் என்கிற செய்திகூட ஒருநாளும் வந்ததில்லை. அப்படி வந்திருந்தால் மரண செய்தி இந்த அளவிற்கு நம்மை பாதித்திருக்காது.

    ஜீவாநாடியாக திகழந்த ஸ்ரீதேவி

    ஜீவாநாடியாக திகழந்த ஸ்ரீதேவி

    நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அமாயங்கேர் அய்யப்பன். 1969-ல் துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாண்டோ சின்னப்ப தேவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் 1976ல் வெளியான பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக தோன்றினார். அந்தப் படத்தின் ஜீவநாடியே ஸ்ரீதேவிதான். நிர்மலமான அந்த முகத்தில்தான் எவ்வளவு உணர்ச்சிகள்... எவ்வளவு குமுறல்கள்... எவ்வளவு வேதனைகள்... இதில் தன்னை முழுமையாக சித்தரித்த திறமை மிகவும் அபூர்வமானது. விழிகளும்... உதடுகளும், துடிக்கும் கன்னங்களும், வழிந்தோடும் கண்ணீரும் எண்ணற்ற செய்திகளை உணர்வுகளை நம் முன்னே கொண்டு வந்து கொட்டியது... இப்படத்தில் நடித்ததை பற்றி ஆங்கில நாளேட்டிற்கு பேட்டி அளித்த இயக்குனர் பாலசந்தர், 13 வயதேயான ஸ்ரீதேவி, ஒரு 20 வயது பெண்ணுக்கான எமோஷன்களை எளிதாக வெளிக்காட்டினார் என்றார்.

    வரலாறு படைத்த 16 வயதினிலே

    வரலாறு படைத்த 16 வயதினிலே

    இதற்கு அடுத்தாற்போல், 1977ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இன்றுவரை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள படம். ஸ்டுடியோக்களிலிருந்து சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாத்த வைத்த முதல் படம். மண்வாசனையை ரசிகர்கள் நுகர்ந்த முதல் படம்... திரைப்படம் என்றாலே இப்படியெல்லாம்தான் இருக்கும் என்னும் மாயையை சுக்குநூறாக உடைத்தெறிந்த படம். இயக்குனராக வரவேண்டும் என்ற கனவுடன் 'மயிலு' என்ற பெயரில் கதை எழுதி... திரையுலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜாவுக்கு... கதாபாத்திரத்திற்கேற்றார்போல், வயதிற்கேற்றார்போல் கனக்கச்சிதமாக பொருந்தியவர் ஸ்ரீதேவி... பின்பு 16 வயதினிலே என்ற பெயரில் ஸ்ரீதேவியை மயிலுவாகவே நடமாடவிட்டார்.

    மயிலின் நடிப்பு

    மயிலின் நடிப்பு

    குழந்தைத்தனமான ஒரு பெண்... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பக்குவத்துடன் எப்படி கையாள்கிறாள் என்பதில் மயிலின் மிளிர்ந்த நடிப்பும், சப்பாணியின் அரை நிர்வாண உடையும், பரட்டையின் புது ஸ்டைலும், குருவம்மாளின் யதார்த்தமும்... மயிலுவை 'மைல்'... 'மைல்' என்றழைத்த டாக்டரின் தமிழ் உச்சரிப்பும் இளையராஜாவின் கிராமிய இசை ஆளுமையும்... செந்தூரபூவே பாடலில், ஸ்லோமோஷன் காட்சி எடுக்க பட்ஜெட் பற்றாக்குறைவால், மயிலுவை மெதுவாக ஓடவிட்டு படம்பிடித்த நிவாஸின் ஒளிப்பதிவும், கிராமிய வாழ்வியலை நம் கண்முன்விரிய செய்தது.

    கமல், ரஜினியுடன் வளர்ந்தார்

    கமல், ரஜினியுடன் வளர்ந்தார்

    இதன் பின்பு ஸ்ரீதேவி கமலஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து புயல் வேகத்தில் வளர்ந்தார்.. அதில், குறிப்பிட்டு சொல்லும்படியாக அமைந்தது பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ம் ஆண்டு வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படம். கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இப்படத்தில் அவரது குழந்தைத்தனமா மொழியும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையே ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

    நடிகைகளில் ஸ்டார்

    நடிகைகளில் ஸ்டார்


    தொடர்ந்து காயத்ரி, சிகப்பு ரோஜாக்கள், கவிக்குயில், பகலில் ஓர் இரவு, பிரியா, கல்யாணராமன், ஜானி, வறுமையின் நிறம் சிகப்பு, மீண்டும் கோகிலா, மனிதரில் இத்தனை நிறங்களா போன்ற படங்கள் ஏராளமான ரசிகர்களை அவருக்கு பெற்றுத்தந்தது. தமது இளமை பொங்கும் அழகினாலும் அற்புதமான குணசித்திர நடிப்பாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்தார். பாலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்த்தையும் பெற்றார்.

    பெண்களின் ரோல்மாடல்

    பெண்களின் ரோல்மாடல்

    நீண்ட இளைவெளிக்கு பின்னர் 2012-ல் இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் வெளியானது. பிள்ளைகளுக்கேற்றார்போல பெற்றோர்களும் மாற வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்த படம். 15 வருடங்கள் கழித்து நடித்தாலும் தமக்கு இந்திய ரசிகர்களின் ஆதரவு கதவு திறந்தேயிருக்கும் என்பதை நிரூபித்த படம். முக்கியமாக திருணமான 35 வயதை கடந்த பெண்களுக்கு ஒரு ரோல்மாடலாக மட்டுமல்ல... வாழ்வின் இருத்தலையும் நியாயப்படுத்தியது இப்படம்.

    தமிழ சினிமாவில் ஸ்ரீதேவி, கதாநாயகியாக அறிமுகமான நாள் முதலே அவருக்கென்று ஆண் ரசிகர்கள் மட்டுமல்ல.. தனி பெண் ரசிகர் பட்டாளத்தையே சேர்த்துக்கொண்டவர். அவருக்கு மார்டன் ஆடைகளும் சரி... குடும்ப பாங்கான ஆடைகளும் சரி அவரது உடலமைப்புக்கும், முக வசீகரத்துக்கும் கச்சிதமாகவே பொருந்தும்.

    நடிப்புடன் பக்குவப்பட்ட நடிகை

    நடிப்புடன் பக்குவப்பட்ட நடிகை

    70 மற்றும் 80களில் ஒவ்வொரு ஆண்மகனும் தனக்கு ஸ்ரீதேவி போலவே பெண் வேண்டும் என்று கேட்குமளவு அனைத்து தரப்பு மக்களையும் தன் அழகினால் சுண்டியிழுத்தார் என்றே சொல்லலாம். 'ஸ்ரீதேவி மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்'.... 'ஸ்ரீதேவி உதடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்'... என செய்திகளை பத்திரிகைகள் தெறிக்க விட... ரசிகர்கள் முண்டியடித்து வாங்கி படித்தனர்...20-ம் நூற்றாண்டின் கனவு கன்னிகளின் அடையாளமாக அவர் கருதப்பட்டார். துறுதுறு நடிப்பு, நளினமான நடன அசைவுகள், அவரது சிறு சிறு நுணுக்களில்கூட நடிப்பை வெளிப்படுத்தும் பாங்கு... என பக்குவப்பட்ட நடிகை என்பதை அரை நூற்றாண்டு காலங்களில் நிரூபித்திருக்கிறார்.

     குவிந்த விருதுகள்

    குவிந்த விருதுகள்

    தனது நடிப்பிற்காக தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும், 4 முறை பிலிம்பேர் விருதையும் பெற்றிருக்கிறார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்திய சினிமா-100 ஆண்டு விழாவில், உலகளாவிய ரசிகர்கள் இணையம் மூலம் அளித்த வாக்குகளின் அடிப்படையில் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்ரீதேவியே ஆவார்.

    துள்ளி ஓடிய மான்குட்டி

    துள்ளி ஓடிய மான்குட்டி

    ஆபாசத்தில் புரண்டு நெளியும் பல நடிகைகளுக்கு மத்தியில் துள்ளியோடும் அழகிய மான்குட்டியாக திகழ்ந்தார் தங்கத்தாரகை ஸ்ரீதேவி. தரமும், கண்ணியமும், பக்குவமும் அவரது நடிப்பில் இழைந்திருக்கும். ஆபாசமோ, அருவருப்போ துளியும் இடம் பெறாது. அத்தகைய ஆரோக்கிய கதாபாத்திரம் அவரது ஒவ்வொரு படங்களிலும் வியாபித்திருக்கும். காலம் எவ்வளவோ கடந்து போனாலும், ரசனைகளின் சித்திரங்கள் காலங்காலமாக நம் கூடவே பயணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

    என்றென்றும் நினைவில் வாழ்வார்

    என்றென்றும் நினைவில் வாழ்வார்

    ஸ்ரீதேவி ஒரு நடிகை மட்டுமல்ல... பண்பட்ட நடிப்பிற்குரிய ஒரு பயிற்சிக் கல்லூரியும் ஆவார். ஸ்ரீதேவி என்னும் தேவதை... 16 வயதினிலே மயிலுவாக, ஜானி அர்ச்சனாவாக, மூன்றாம்பிறை விஜியாக, வாழ்வே மாயம் தேவியாக.... மட்டுமல்லாமல்... தமிழ் சினிமாவின் ஆதர்ச கதாநாயாகியாக இன்னும் நூற்றாண்டு காலம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது நிதசனமான உண்மை.

    English summary
    A tribute to Sridevi who passed away day before yesterday in Dubai whiel she was attending a wedding function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X