For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்பூர் கலவரம்: நீடிக்கும் பதற்றம் .... 144 தடை உத்தரவு – ஹைகோர்ட்டில் பவித்ரா ஆஜர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆம்பூரில் ஷமீல் அகமது உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய பவித்ரா இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆம்பூர் கலவரத்தைத் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், ஆம்பூர், வாணியம்பாடியில் ஞாயிறு நள்ளிரவு முதல் வரும் 15ம் தேதி வரை 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பத்தூர் கோட்டாட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனி; இவரது மனைவி பவித்ரா. கடந்த மே மாதம், 24ம் தேதி திடீரென மாயமானார். இதுபற்றி பள்ளிக்கொண்டா காவல்நிலையத்தில் பவித்ராவின் கணவர் புகார் செய்தார். இது தொடர்பாக, ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஷமீல் அகமதுவை, விசாரணைக்காக பள்ளிகொண்டா போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீடு திரும்பிய ஷமீல் அகமதுவின் உடல்நலம் பாதிக்கப்படவே ஷமீல் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, கடந்த, 26ம் தேதி உயிரிழந்தார்.

Aambur riot: Section 144 imposed 10 days

ஆம்பூர் கலவரம்

ஷமீல் அகமதுவின் மரணத்தைத் தொடர்ந்து 27ம் தேதி நள்ளிரவு, ஆம்பூரில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன; போலீஸ் ஜீப்கள், தனியார் வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில், 54 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தில் தொடர்புடையதாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவர் மனு

பவித்ராவை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, அவரது கணவர் பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

வீடியோவில் பதிவு

ஆம்பூர் கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பவித்ரா சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை வேலூர் மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னையில் தங்கியிருந்த போது சுரேந்தர் என்பவருடன் பவித்ராவுக்கு நட்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்மூர்த்தி முன் பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வீட்டிற்கு செல்ல பவித்ரா மறுத்ததால், மகளிர் காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஷமீல் அகமதுவை தெரியாது

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பவித்ரா, போலீசார், என்னை தப்பான பெண்ணாக சித்தரிக்கின்றனர் என்றார். எனக்கு ஷமீல் அகமதுவை தெரியாது; அவரைப் பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த தொடர்பும் கிடையாது. வேலை தேடி சென்னைக்கு சென்றபோது, மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன் என்று கூறியுள்ளார்.

பவித்ரா - ஷமீல் அகமது

அதே நேரத்தில் இறந்து போன ஷமீல் அகமது மற்றும் பவித்ரா இடையே கள்ளத் தொடர்பு இருந்தது உண்மை என்றும், இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோடு சென்று, அங்குள்ள நகை மற்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதோடு, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர் என்று ஆம்பூர் டி.எஸ்.பி., கணேசன் கூறியுள்ளார்.

பவித்ரா வாக்குமூலம்

இது தொடர்பான முழு விவரத்தையும், போலீசாரிடம், பவித்ரா வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். ஆனாலும் 'ஷமீல் அகமதுவை தெரியாது என, செய்தியாளர்களிடம் அவர் கூறுவது பொய் என்று கூறிய டி.எஸ்.பி கணேசன், பவித்ரா கொடுத்த வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, சுரேந்தர் மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோரிடம் அரக்கோணம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றத்தில் பவித்ரா ஆஜர்

பவித்ரா காணாமல் போனதாக கணவர் பழனி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிடிப்பட்ட பவித்ரா, இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாயமாகி 45 நாட்களுக்கு பின் சென்னையில் மீட்கப்பட்ட பவித்ரா இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பவித்ராவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

144 தடை உத்தரவு

ஆம்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆம்பூர், வாணியம்பாடியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த இந்த தடை உத்தரவு, வரும் 15ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் அரசியல் தலைவர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
The police imposed Section 144 from July 05 to July 15 in Aambur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X